மும்பை: மகாராஷ்டிராவின் தானே மாவட்டம் பத்லாபூரில் கடந்த ஆகஸ்ட் 12-ம் தேதி நர்சரி பள்ளி ஒன்றின் கழிப்பறையில் 2 சிறுமிகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டனர். இது தொடர்பாக பள்ளியில் தூய்மைப் பணியாளராக பணியாற்றி வந்த அக்ஷய் குமார் (24) ஆக. 17-ம் தேதி கைது செய்யப்பட்டார். இந்நிலையில் அக்ஷய் குமார் மற்றொரு வழக்கு விசாரணைக்காக நேற்று முன்தினம் மாலையில் தலோஜா சிறையில் இருந்து அழைத்துச் செல்லப்பட்டார். இந்த பயணத்தில் போலீஸ் வாகனம் தானே மாவட்டம், மும்ரா பைபாஸ் அருகே வந்தபோது உதவி காவல் ஆய்வாளர் நிலேஷ் மோரின் கைத்துப்பாக்கியை அக்ஷய் குமார் பறித்து போலீஸார் மீது தாக்குதல் நடத்தினார். பதிலுக்கு போலீஸார் திருப்பி சுட்டதில் காயம் அடைந்த அக்ஷய் மருத்துவமனையில் உயிரிழந்தார். இந்த சம்பவத்தில் தொடையில் துப்பாக்கி குண்டு காயம் அடைந்த நிலேஷ் மோர் சிகிச்சை பெற்று வருகிறார்.
போலீஸார் தற்காப்புக்காக சுட்டதில் அக் ஷய் குமார் இறந்த தாக முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, துணை முதல்வர் தேவேந்திர பட் னாவிஸ் ஆகியோர் அறிவித்தனர். ஆனால் அக் ஷய் குமாரை போலீஸார் கொன்று விட்டதாகவும் இதுகுறித்து விசாரணை நடத்த வேண்டும் எனவும் அவரது குடும்பத்தினர் கோரியுள்ளனர். மேலும் பிரேதப் பரிசோதனைக்கு பிறகு அக்ஷய் குமாரின் உடலை பெற்றுக்கொள்ள அவர்கள் மறுத்துவிட்டனர். இதுகுறித்து உயர் நிலை விசாரணை நடத்த வேண்டும் என எதிர்க்கட்சிகளும் வலியுறுத்தியுள்ளன.