புதிய பாதுகாப்பு செயலாளராக எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துயகொந்தா (ஓய்வு) தனது கடமைகளைப் பொறுப்பேற்றார்

எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துயகொந்தா (ஓய்வு) WWV, RWP மற்றும் இரண்டு பார்கள், RSP மற்றும் பார், USP, MMSc (Strat Stu- China), MSc (Def Stu) Mgt இல், MSc (Def & Strat Stu), fndu (சீனா), psc இலங்கை பாதுகாப்பு அமைச்சின் புதிய செயலாளராக அதிமேதகு ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்கவினால் நியமிக்கப்பட்டுள்ளார்.

எயார் வைஸ் மார்ஷல் துயகொந்தா (செப். 23, 2024) அக்குரேகொடவில் உள்ள பாதுகாப்புத் தலைமையக வளாகத்தில் பாதுகாப்பு அமைச்சில் தனது கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுக் கொண்டார்.

கடமைகளை பொறுப்பேற்கும் நிகழ்வின் பின்னர் புதிய பாதுகாப்பு செயலாளர் தலைமையில் பாதுகாப்பு அமைச்சின் மேலதிக செயலாளர்கள், பாதுகாப்புப் படைகளின் பிரதம அதிகாரி மற்றும் முப்படைத் தளபதிகளின் பங்குபற்றலுடன் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.

இலங்கை விமானப்படை அதிகாரியான இவர், 33 ஆண்டுகால சேவையை முடித்துக் கொண்டு 2021 நவம்பர் மாதம் ஓய்வு பெற்றார். ஓய்வுபெறும் போது, இவர் இலங்கை விமானப்படையின் பயிற்சிப் பணிப்பாளராக சேவையாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

1966 நவம்பர் 26ஆம் திகதி கொழும்பில் பிறந்த இவர், புகழ்பெற்ற கொழும்பு தேர்ஸ்டன் கல்லூரியில் கல்வி கற்றார். இவர் ஒரு சிறந்த ரக்பி வீரராக தனது கல்லூரியில் ரக்பி அணியை பிரதிநிதித்துவப்படுத்தினார். மேலும் 1986 ஆம் ஆண்டு கொழும்பு கல்லூரிகள் ரக்பி அணியை பிரதிநிதித்துவப்படுத்த தேர்ந்தெடுக்கப்பட்டார். 1986 இல் பாடசாலை ரக்பி வர்ணத்தையும் பெற்றார்.

1988 ஆம் ஆண்டு இலங்கை விமானப்படையில் 19 ஆவது ஆட்சேர்ப்பின் ஊடாக கெடெட் அதிகாரியாக இணைந்து கொண்ட இவர், 1990 ஆம் ஆண்டு பொதுக் கடமைகளுக்கான பைலட் கிளையில் பைலட் அதிகாரியாக நியமிக்கப்பட்டார். தனது பயிற்சிக் காலத்தில் அடிப்படை போர் பயிற்சி, அடிப்படை பறக்கும் பயிற்சி, அடிப்படை மற்றும் மேம்பட்ட ஹெலிகாப்டர் பயிற்சி பயிட்சிகளை வெற்றிகரமாக நிறைவுசெய்துள்ளார்.

1990 இல் பயிற்சியை முடித்த பிறகு, இவர் பெல் 212 மற்றும் 412 ஹெலிகாப்டர்களில் பைலட்டாக பறக்கும் பணிக்காக அனுப்பப்பட்டார். 2001 ஆம் ஆண்டில், அவர் ஹிங்குராங்கொடவில் உள்ள இலங்கை விமானப்படை தளத்தின் 9 ஆவது தாக்குதல் ஹெலிகாப்டர் படைப்பிரிவில் இரண்டாவது கட்டளை அதிகாரியாக நியமிக்கப்பட்டார், பின்னர் 2005 இல் கட்டளை அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.

அனுராதபுரம் விமானப்படைத் தளத் தளபதி, சீனக்குடா விமானப்படை அகாடமியின் கட்டளைத் தளபதி, விமானப்படை தள கட்டுநாயக்கா மற்றும் தெற்கு விமானக் கட்டளையின் முதல் விமானத் தளபதி போன்ற முக்கிய பதவிகளிலும் இவர் கடமையாற்றியுள்ளார்.

இவர் தனது சேவையின் போது இறுதி மனிதாபிமான நடவடிக்கை உட்பட அனைத்து முக்கிய நடவடிக்கைகளிலும் ஈடுபட்டுள்ளார். இவர் இலங்கை விமானப்படையின் நடவடிக்கைகள்/விஐபி மற்றும் தாக்குதல் ஹெலிகாப்டர் பைலட்டாக 7000க்கும் மேற்பட்ட பறக்கும் சேவை மணித்தியாலங்களை பதிவு செய்துள்ளார்.

எயார் வைஸ் மார்ஷல் துயகொந்தா பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்தில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகராக இரண்டு வருடங்கள் சேவையாற்றியுள்ளதுடன் 2014 ஆம் ஆண்டு பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பணியாளர் கல்லூரியின் பிரதான பயிற்றுவிப்பாளராகவும் பணியாற்றியுள்ளார்.

மனிதாபிமான நடவடிக்கைகளின் போது எதிரிகளை எதிர்கொண்ட அவரது தனிப்பட்ட செயல்களுக்காக “வீர விக்கிரம விபூஷணய” (WWV), “ரண விக்கிரம பதக்கம” (RWP) மற்றும் “ரண சூர பதக்கம” (RSP) போன்ற பதக்கங்களை பல சந்தர்ப்பங்களில் பெற்றுள்ளார் என்பது மேலும் குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.