புதுடெல்லி: மனித தவறுகளால் நிகழும் விமானவிபத்துகள் 10 சதவீதம் அதிகரித்துள்ளதாக மத்திய விமானப் போக்குவரத்து துறை அமைச்சர் கே.ராம் மோகன் நாயுடு தெரிவித்துள்ளார்.
விமான விபத்துகளில் மனித காரணிகள் என்ற தலைப்பில் முதல் தேசிய பாதுகாப்பு கருத்தரங்கம் டெல்லியில் நேற்றுமுன்தினம் நடைபெற்றது. இதில், கலந்து கொண்ட அமைச்சர் மோகன் நாயுடு இதுகுறித்து மேலும் கூறியதாவது: உலகளவில் விமான விபத்துகளின் எண்ணிக்கை குறைந்துள்ளபோதிலும் 80 சதவீத விபத்துகளுக்கு மனித தவறுகளே முக்கியகாரணமாக உள்ளது தெரியவந்துள்ளது. மேலும், இதனால் ஏற்படும் விபத்துகளின் எண்ணிக்கையும் தற்போது 10 சதவீதம் அளவுக்கு அதிகரித்துள்ளது.
ஏஏஐபி (விமான விபத்து பணியகம்) ஆய்வு செய்த 91 விபத்துகளில் கணிசமான எண்ணிக்கையானது நிலையான இயக்க நடைமுறைகளை (எஸ்ஓபி) கடைபிடிக்காததே காரணம் என்பது தெரியவந்துள்ளது. எனவே, விமான நிறுவனங்கள் தங்கள் பணியாளர்களின் தொடர்ச்சியான திறன், மறு-திறன் மற்றும் மேம்பாட்டுக்கு முன்னுரிமை அளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. விமான இயக்கத்தைப் பொறுத்தவரையில் பாதுகாப்பு என்பதே முதன்மையான குறிக்கோளாக இருக்க வேண்டும்.
இதற்கு, விமானிகள் மற்றும் விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டாளர்களுக்கு பயிற்சித் திட்டங்களில் மேம்பட்ட உளவியல் ஆராய்ச்சியை ஒருங்கிணைக்க வேண்டியது அவசியம். செயற்கை நுண்ணறிவு, இயந்திர கற்றல் மற்றும் தரவு பகுப்பாய்வு போன்ற மேம்பட்ட தொழில்நுட்பங்களை உளவியல் ஆராய்ச்சியுடன் இணைப்பது விமானிகளின் நடத்தை, செயல்திறனை சிறப்பான அளவில் மேம்படுத்த உதவும். நவீன விமானங்கள் தொழில்நுட்ப ரீதியாக மேம்பட்டு வருவதால் இந்தியாவின் பராமரிப்பு, பழுதுபார்ப்பு, மறுசீரமைப்பு (எம்ஆர்ஓ) உள்கட்டமைப்பை உலக தரத்துட னான வேகத்துக்கு தக்க வைக்கவேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.