ஜெருசலேம்: லெபனான் மீது தாக்குதலை இஸ்ரேல் தீவிரப்படுத்தியிருக்கும் நிலையில், மக்கள் தங்கள் இருப்பிடத்தை விட்டு வெளியேற ஆரம்பித்துள்ளனர். ஒருவித மரண பயம், பதற்றம் மற்றும் வீட்டை விட்டு வெளியேறும் ஏக்கம் என அனைத்தையும் ஊடகங்களிடம் பகிர்ந்துள்ளனர். இது ஒரு `கொடிய போர்’ என இதனை அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
காசா மீது கண்மூடித்தனமாக போர் தொடுத்ததை போல தற்போது ஹிஸ்புல்லாவை அழிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் லெபனான் மீது தாக்குதலை தீவிரப்படுத்தி இருக்கிறது இஸ்ரேல். போர்ப் பதற்றம் மென்மேலும் வலுத்துள்ளதால், தெற்கு லெபனானில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் சாரை சாரையாக வெளியேறி வருகின்றனர். இந்தச் சூழலில் லெபனான் முழுவதும் இஸ்ரேலின் தாக்குதலில் 50 குழந்தைகள் உட்பட 569 பேர் கொல்லப்பட்டதாக லெபனானின் சுகாதார அமைச்சகம் இன்று மாலை தெரிவித்தது.
இந்நிலையில், நாடு முழுவதும் உள்ள மக்கள் தங்களுக்கு பாதுகாப்பான இடங்களை நோக்கி செல்ல ஆரம்பித்துள்ளனர். லெபனானில் ஜஹ்ரா என்ற 12 வயது சிறுமி தனது குடும்பத்துடன் வாழ்ந்து வருகிறார். அவளின் கிராமம் தெற்கு லெபனானில் Nabatieh மற்றும் Bint Jbeil நகரங்களுக்கு இடையே உள்ளது. சிறுமி ஜஹ்ரா தனது பயமிக்க அனுபவத்தை பகிர்ந்துள்ளார். அதில், “அவர்கள் (இஸ்ரேலியர்கள்) குண்டு வீசப்போகிறார்கள் என்ற செய்தியை தொலைக்காட்சியில் தான் பார்த்தோம், அதைப் பார்த்தில் இருந்து ஒருவித பயம் என்னை தொற்றிக் கொண்டது. அதைப் பார்த்து நான் அழ ஆரம்பித்துவிட்டேன்.
என் அம்மாவிடம் போனை வைத்துவிட்டு கிளம்புமாறு கத்தினேன். அந்த வேளையில்தான், குண்டு சத்தம் காதைப் பிளந்தது. அதைக் கேட்டதில் இருந்தே, எனக்கு ஏதோ ஒருவித மன அழுத்தம் ஏற்பட்டுவிட்டது” என்றாள். திங்கட்கிழமை காலை வேளையிலேயே, லெபனான் மக்கள் வீட்டை விட்டு வெளிமாறு இஸ்ரேல் எச்சரிக்கையும் கொடுத்துவிட்டது. அதனுடன் அப்பகுதி மக்களுக்கு 80,000 மெசேஜ்களையும் அனுப்பியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
லெபனானில் 1990-ல் உள்நாட்டுப் போர் முடிவடைந்ததில் இருந்து, 34 ஆண்டுகளில் நடந்த ஒரு கொடிய போர் என இதனை அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். எப்படியோ, தட்டுதடுமாறி, ஜஹ்ராவும் அவரது பெற்றோரும் லைலாகிக்கு கிழக்கே உள்ள பாப்தா மாவட்டத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றுவிட்டனர். பலர் எங்கு செல்வது என்று தெரியாமல் ஓடிக்கொண்டிருந்தனர். சிலர் வீட்டிலேயே கொல்லப்பட்டுள்ளனர். வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்ட 50 குழந்தைகள் மற்றும் 94 பெண்களின் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் பரவியதாக சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மக்கள் பல இடங்களில் தஞ்சமடைந்துள்ள நிலையில் ஹுசைன் என்பவர் கூறும்போது, “ஒரு விமானம் எங்களுக்கு மேலே இருந்தது… அப்போது அவர்கள் குண்டுகளை வீசி வெடிக்கச் செய்தனர். இன்று நாங்கள் மரணத்தையே கண்டுவிட்டோம்” என்று அச்சத்துடன் கூறினார். “ஒவ்வொரு வீட்டிலும் ஹிஸ்புல்லா அமைப்பைச் சேர்ந்தவர்களின் ஆயுதம் இருப்பதாக இஸ்ரேலியர்கள் சொல்வார்கள், ஆனால் இதை நிரூபிக்க முடியுமா? நிச்சயமாக இல்லை,” என்று பெய்ரூட்டில் உள்ள அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இதைத் தொடர்ந்து சிறுமி ஜஹ்ரா பேசும்போது, “இதுமாதிரியான போரைக் காண்பது இதுவே முதல்முறை. எனக்கு இது மாதிரியானப் போரைப் பிடிக்கவில்லை. நான் ஒவ்வொரு நாளும் அழுகிறேன். நான் என் நண்பர்களுடன் விளையாடுவதை மிஸ் செய்கிறேன். தூங்கியே என் பொழுதை கழிக்கிறேன். என் வீடு என்பது எனது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்களால் மட்டுமே நிரம்பியது. எனக்கு இது பிடிக்கவில்லை… எங்கள் வீட்டுக்கு போக வேண்டும்” என்றார் தனக்கே உரித்தான மழலை மொழியில்.