கருப்பு சேலை அணிந்து, கையில் சிலம்பு ஏந்தி, ‘தேரா மன்னா’ என்ற பதாகையோடு போராட்டத்தில் ஈடுபட்டு சமீபத்தில் மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்கள் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள்.
‘2013-ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றோர் நலச்சங்கத்தின்’ சார்பில், ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்ற 40 ஆயிரம் பேருக்கு ஆசிரியர் பணி வழங்கக் கோரியும், திமுக அரசின் தேர்தல் வாக்குறுதியான 177-ஐ நிறைவேற்ற, அரசாணை 149-ஐ ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தியும் கருப்பு ஆடையுடன், கையில் சிலம்பு ஏந்தி முதன்மை கல்வி அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டது அனைவரையும் கவனிக்க வைத்துள்ளது.
இவ்வளவு கோபத்துடன் அரசுக்கு எதிராக போராட்டம் நடத்த காரணம் என்ன என்று ‘2013 ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றோர் நலச் சங்க’த்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் இளங்கோவனிடம் கேட்டோம்.
“2013 ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்று 11 ஆண்டுகளாக பணியின்றி அடிப்படை வாழ்வாதாரம் இழந்து 40 ஆயிரம் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் தவிக்கிறோம். எங்கள் கோரிக்கையை வலியுறுத்தி இதுவரை 70-க்கும் மேற்பட்ட போராட்டங்களை நடத்தியும் தீர்வு கிடைக்கவில்லை. தகுதித் தேர்வில் வெற்றி பெற்றாலும் மீண்டும் ஒரு நியமனத் தேர்வு (அரசாணை எண் 149) இந்தியாவிலேயே எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் தமிழகத்தில் மட்டும் பின்பற்றப்படுகிறது.
தற்போதைய தமிழக முதல்வர் எதிர்கட்சியாக இருந்தபோது, அரசாணை எண் 149-ஐ அர்த்தமற்றது என்று கண்டித்து அறிக்கை விட்ட தமிழக முதல்வர் , ஆட்சி பொறுப்பேற்ற அதைப்பற்றி பிறகு வாய் திறக்கவில்லை.
திமுக வெற்றிக்கு பாடுபட்ட நாங்களே அவரே சந்திப்பது குதிரைக்கொம்பாக இருக்கிறது. உங்கள் தொகுதியில் முதல்வர் திட்டத்தில் மனுக்களை பதிந்தால் 100 நாளில் கோரிக்கை நிறைவேற்றப்படும் எனக் கூறினார். 2000 மனுக்கள் பதிந்து வைத்திருக்கிறோம், 1000 நாள்கள் கடந்துவிட்டது, முடிவு எட்டப்படாமல் கிடப்பிலே கிடக்கிறது. பலகட்ட பேச்சுவார்த்தை நடத்தியபின்பும் நிதிப் பற்றாக்குறை என்கிறார்கள். குறைந்தபட்சமாக 4 ஆயிரம் ஆசிரியர்களுக்கு 10 ஆயிரம் ரூபாய் தொகுப்பூதிய அடிப்படையிலாவது பணியில் அமர்த்துங்கள் என கோரிக்கை முன் வைத்தும் அரசிடமிருந்து எந்தப் பதிலும் இல்லை.
மதுரையில் கண்ணகியின் காலத்தைப்போல கையில் சிலம்பு ஏந்தி போராட்டம் நடத்தியிருக்கிறோம். கண்ணகிக்கு அநீதி இழைத்தான் பாண்டிய மன்னன். தகுதித் தேர்வில் தேர்வு பெற்ற அனைத்து கண்ணகிகளுக்கும் அநீதி இழைத்திருக்கிறார் எங்கள் அண்ணன் தளபதி .
பணி என்பது பெண்களுக்குடைய உடை போன்றது. மகளிர் உரிமைத்தொகை கொடுத்துவிட்டு ஆசிரியையாக தேர்ச்சி பெற்றவர்களை தவிக்க விட்டுள்ளீர்கள்.
உடனடியாக தமிழக முதல்வர் இப்பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும், மௌனத்தை கலைத்து நல்லதொரு தீர்வைத் தரவேண்டும். கொடூர அரசாணை எண் 149-ஐ நீக்கிவிட்டு, 40,000 குடும்பங்களின் வாழ்வாதாரத்தை காத்திட வேண்டும்” என்றார்.