மும்பை சித்தி விநாயகர் கோவில் லட்டு பிரசாத பாக்கெட்டுகளில் எலிக்குட்டிகள்…வீடியோ வெளியாகி பரபரப்பு

மும்பை,

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்களுக்கு வழங்கப்பட்ட லட்டுகளில் பயன்படுத்தப்பட்ட நெய்யில் விலங்குகள் கொழுப்பு கலப்படம் செய்யப்பட்டு இருந்ததாக ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு குற்றம்சாட்டினார். இதையடுத்து லட்டு தயாரிக்க பயன்படுத்திய நெய் ஆய்வுக்கு அனுப்பப்பட்டது. ஆய்வில் நெய்யில் கலப்படம் செய்து இருப்பது உறுதியானது.பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோவில் லட்டு பிரசாதத்தில் விலங்குகள் கொழுப்பு கலந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

இந்தநிலையில் மும்பையில் பிரசித்தி பெற்ற சித்தி விநாயகர் கோவிலில் வழங்கப்படும் லட்டு பிரசாத பாக்கெட் வைக்கப்பட்டு இருந்த டிரே மற்றும் லட்டு பாக்கெட்டுகளை எலிகள் கடித்து சேதப்படுத்தி இருப்பதையும், அதில் எலிக்குட்டிகள் கிடப்பதையும் காட்டும் வீடியோ சமூகவலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.லட்டு பாக்கெட்டுகளை எலிகள் சேதப்படுத்தி, அதில் தாய் எலிக்குட்டிகளை போட்டு சென்று இருக்கலாம் என கூறப்படுகிறது. சமூகவலைதள வீடியோ குறித்து கோவில் அறக்கட்டளை தலைவரும், சிவசேனா எம்.எல்.ஏ. வுமான சதாசர்வன்கர் கூறுகையில், வீடியோவில் காட்டப்படும் இடம் அசுத்தமாக உள்ளது. அந்த வீடியோ கோவிலில் எடுக்கப்பட்டது அல்ல. வெளியில் எங்கோ அந்த வீடியோ எடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக கோவில் கண்காணிப்பு கேமரா காட்சிகள் ஆய்வு செய்யப்படும். மேலும் இந்த விவகாரம் குறித்து துணை கமிஷனர் தலைமையில் விசாரணை நடத்தப்பட்டு தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.