இந்தியாவில் பல்வேறு மொழிகளில் 40 ஆயிரம் பாடல்களுக்கு மேல் பாடிய பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் கடந்த 2020-ல் இதே நாளில் உயிரிழந்தார். அவர் பாடியது போல “இந்த தேகம் மறைந்தாலும் இசையால் மலர்வேன்” என்ற பாடலைப் போல அவரின் குரல் ஒலிக்காத இடமில்லை என ரசிகர்கள் சமூகவலைதளங்களில் அவருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
அந்த வகையில் எஸ்.பி.பி.,யின் தீவிர ரசிகரான ஹோட்டல் உரிமையாளர் ஒருவர் தனது ஹோட்டல் நுழைவுவாயிலில் எஸ்பிபியின் படத்தை வைத்து 4 ஆண்டுகளாக தினமும் மலரஞ்சலி செலுத்தி வருவது தேனி வாசிகளை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
தேனி பெரியகுளம் ரோட்டில் உள்ள அக் ஷயா ஹோட்டலுக்குள் சென்றால் எஸ்.பி.பி.,யின் பாடல்களை கேட்டுக்கொண்டே இருக்கலாம். மேலும் எஸ்.பி.பி., படங்களால் தான் ஹோட்டல் சுவர்கள் அலங்கரிக்கப்பட்டிருக்கிறது. தினந்தோறும் ஹோட்டல் வெளியே உள்ள எஸ்.பி.பி., போட்டோவுக்கு ரோஜா மாலை அணிவிப்பதையும் வழக்கமாக கொண்டிருக்கிறார்.
“எஸ்பிபியின் குரல் மீது பெரும் மயக்கம்…”
எஸ்.பி.பி.,யின் தீவிர ரசிகர் ஹோட்டல் உரிமையாளர் பாக்கியசீலனிடம் பேசினோம். “தேனி பெரியகுளம் ரோட்டில் 15 ஆண்டுகளாக ஹோட்டல் நடத்தி வருகிறேன். சிறுவயதில் பாடல்களை விரும்பிக் கேட்கத் தொடங்கினேன். திரையிசை பாடல்கள் கேட்பதற்காக மைக் செட் போடும் வேலை பார்த்தேன். பத்தாம் வகுப்பு மட்டும் படித்துவிட்டு ஹோட்டலில் சமையல் வேலை செய்வதற்காக கோவை, ஊட்டி, பெங்களூரு எனப் பல்வேறு பகுதிகளுக்கு பயணித்தேன்.
பயணத்தின்போதும் பாடல்கள் கேட்பதை வழக்கமாகக் கொண்டிருப்பவர்கள் இருக்கத்தான் செய்வார்கள், ஆனால் பாடல்கள் கேட்பதற்காகவே நான் பேருந்துகளில் பயணித்தேன். இவ்வாறாக பாடல்கள் கேட்பதில் ஆளாதி பிரியம் கொண்ட எனக்கு, எஸ்பிபியின் குரல் மீது பெரும் மயக்கம் ஏற்படத்தொடங்கியது எப்போது என்றே தெரியவில்லை.
அனைத்து பாடல்களும் மனப்பாடமாக தெரியும்…
எஸ்.பி.பி பாடிய முதல் பாடலான ஆயிரம் நிலவே வா முதல் அனைத்து பாடல்களும் மனப்பாடமாக தெரியும். எந்தப் பாடல் எந்தப் படத்தில் இடம் பெற்றுள்ளது எந்த ஆண்டு வெளிவந்தது என்பதும் தெரியும். சிறுவயதில் பள்ளிக்குச் செல்கையில் பாட்டுப்புத்தகங்களை வாங்கி பாடப்புத்தகத்தில் வைத்து பாடிதிரிந்தேன். ஆனால் ராகம், தாளம், சந்தம், பல்லவி பற்றியெல்லாம் தெரியாது. தினமும் எஸ்பிபியின் பாடல்கள் காலை முதல் இரவு உறங்கும் வரை கேட்டுக்கொண்டே இருப்பேன். எவ்வளவு தான் பாடல்களை ரசித்தாலும் பாடவும், இசையைக் கற்கவும் ஆர்வம் ஏற்படவில்லை.
எம்எஸ்வியிடம் வாய்ப்பு கேட்டுச் சென்ற போது, எஸ்பிபியின் தமிழ் உச்சரிப்பு சரியில்லை கற்றுக்கொண்டு வா என்றுள்ளார் எம்எஸ்வி. அப்படியாக தன் பயணத்தை தொடங்கிய எஸ்பிபியின் தமிழ் வார்த்தை உச்சரிப்பும், அந்த உச்சரிப்பை தேவைக்கேற்றவாறு நலினமாகவும் போட்டு வசியப்படுத்திவிட்டார்” என்றார்.
4 ஆண்டுகளாக மலரஞ்சலி…
நான் எஸ்பிபியின் ரசிகன் இல்லை பக்தன் என்று சொன்ன பாக்கியசீலனிடம், எஸ்பிபியின் இறப்பு உங்களை பெரிதும் பாதித்துவிட்டதா? என்று கேட்டோம். “இல்லை அவர் இறக்கவில்லை. போகும் பாதை தூரமே, வாழும் காலம் கொஞ்சமே ஜீவ சுகம் பெற ராக நதியினில் நீ நீந்த வா என தமிழ் மக்களை அழைத்துக் கொண்டே உயிர்புடன் இருப்பார்.
அவருடைய இறந்த செய்தி கேட்டு எனது ஹோட்டல் நுழைவு வாயிலில் அவரது படத்தை வைத்து எங்கள் ஹோட்டலில் வேலை செய்யும் 15 பேர் மலரஞ்சலி செலுத்தினோம். அடுத்தநாள் அந்தப் படத்தை எடுத்த வைக்க எனக்கு மனமில்லை. ஒரு மாதம் இரு மாதம் என தற்போது 4 ஆண்டுகளாக அவரின் படத்திற்கு மாலை அணிவித்து மலரஞ்சலி செலுத்து வருகிறேன்.
பக்தனுக்கு கிடைக்கும் வரத்தைப் போல…
எனது ஹோட்டலுக்கு வரும் ஆசிரியர்கள், பொறியாளர்கள், அரசு அதிகாரிகள், கூலித் தொழிலாளிகள் என பலருக்கும் எஸ்பிபியைப் பிடித்துள்ளது. அவர்கள் எஸ்பிபிக்கு நான் செலுத்தும் மலரஞ்சலியை பார்த்து வியக்கிறார்கள். அவர்களுடன் வரும் இளம்தலைமுறையினர் எஸ்பிபி குறித்து கேட்டுச் செல்கின்றனர்.
கடவுளைத் தேடி பக்தனுக்கு கிடைக்கும் வரத்தைப் போல, தனது குரலால் ரசிகனுக்கு மனநிம்மதி, மகிழ்ச்சி, உத்வேகம், புத்துணர்ச்சி அனைத்தையும் தருகிறார் எஸ்பிபி. இதனால் தான் அவரின் பக்தன் என எல்லோரிடமும் பெருமையாகச் சொல்லிக்கொள்கிறேன்” என்றார் நெகிழ்ச்சியுடன்.