ஆவடி: ஆவடி அருகே ரூ.78.31 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள பட்டாபிராம் ரயில்வே மேம்பாலத்தின் ஒரு பகுதியை இன்று மாலை கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி பொதுமக்களின் பயன்பாட்டுக்கு திறந்து வைத்தார்.
திருவள்ளூர் மாவட்டம், ஆவடி அருகே பட்டாபிராம், சி.டி.எச். சாலையில் உள்ள எல்.சி., 2 ரயில்வே கடவுப் பாதையை கடந்து, பட்டாபிராம் மிலிட்டரி சைடிங்குக்கு நாள் தோறும் 20-க்கும் மேற்பட்ட மின்சார ரயில்கள், சரக்கு ரயில்கள் சென்று, சென்னை, ஆவடிக்கு திரும்புகின்றன.
ஆகவே, இந்த கடவுப்பாதை, முக்கால் மணி நேரத்துக்கு ஒரு முறை மூடப்பட்டு வந்ததால், கடவுப் பாதையின் இருபுறமும் திருவள்ளூர், திருத்தணி, திருப்பதி, சென்னை பகுதிகளுக்கு செல்லும் வாகனங்கள் நூற்றுக்கணக்கில் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்று வந்தன.
எனவே, பட்டாபிராம் பகுதியில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில், தமிழக நெடுஞ்சாலை துறை மற்றும் ரயில்வே சார்பில், ரூ.78.31 கோடி மதிப்பில் 640 மீட்டர் நீளத்தில் , பட்டாபிராம் ரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணி கடந்த 2018-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. 2020-ம் ஆண்டு முடிவுற வேண்டிய அப்பணி, கரோனா உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் மிக தாமதமாக நடைபெற்று வந்தது.
இந்நிலையில், பட்டாபிராம் ரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணியில், ரயில்வே கடவுப்பாதையின் இரு புறத்தில், ரயில்வேக்கு சொந்தமான சிறு பகுதியை தவிர மற்ற பகுதிகளில் மேம்பாலம் அமைக்கும் பணிகள் சமீபத்தில் நிறைவுற்றன. ஆகவே, பெரும்பகுதி பணிகள் முடிவுற்றுள்ள மேம்பாலத்தின் ஒரு பகுதியை விரைந்து திறக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை வைத்து வந்தனர்.
அதன் விளைவாக, பணிகள் முடிவுற்றுள்ள பட்டாபிராம் ரயில்வே மேம்பாலத்தின் ஒரு பகுதி திறப்பு விழா இன்று மாலை நடைபெற்றது. இதில், கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர் .காந்தி சிறப்பு விருந்தினராக பங்கேற்று, பட்டாபிராம் ரயில்வே மேம்பாலத்தின் ஒரு பகுதியை பொதுமக்களின் பயன்பாட்டுக்கு திறந்து வைத்தார்.
இந்நிகழ்வில், மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர், ஆவடி மாநகராட்சி ஆணையர் கந்தசாமி, ஆவடி காவல் துணை ஆணையர் ஐமன் ஜமால், நெடுஞ்சாலைத்துறை நபார்டு தலைமைச் செயற்பொறியாளர் தேவராஜ், கோட்ட பொறியாளர் சிவசேனா, திருவள்ளூர் கோட்டாட்சியர் கற்பகம், ஆவடி மற்றும் பூந்தமல்லி எம்எல்ஏக்களான சா.மு.நாசர். ஆ.கிருஷ்ணசாமி, ஆவடி மாநகராட்சி மேயர் உதயகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.