ஜெருசலேம்: கடந்த 2006-ம் ஆண்டுக்குப் பிறகுமிகப்பெரிய தாக்குதல் நடவடிக்கையாக இஸ்ரேல் ராணுவம் நேற்று முன்தினம் லெபனானின் தெற்கு பகுதி நகரங்கள் மீது குண்டு மழை பொழிந்தது.
குறிப்பாக, லெபனானின் ஹெர்மல், பிப்லோஸ், பால்பெக் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஹிஸ்புல்லா அமைப்பினர் ஆயுதங்களை பதுக்கி வைத்துள்ளதை இஸ்ரேல் உளவுத் துறை கண்டறிந்ததையடுத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில்சில குண்டுகள் பொதுமக்கள் குடியிருக்கும் பகுதிகளில் விழுந்ததால் 558 பேர் உயிரிழந்துவிட்டதாகவும், 3,000-க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் லெபனான் சுகாதார அமைச்சகம் தெரிவித் துள்ளது.
இந்நிலையில், இந்த தாக்குதலுக்கு பதிலடி தரும் வகையில்வடக்கு இஸ்ரேலிய நகரங்களைகுறிவைத்து ஹிஸ்புல்லா அமைப்பினர் 200 ராக்கெட்களை ஏவி தாக்குதலை மேற்கொண்டனர். இருப்பினும், இஸ்ரேலிய வான்பாதுகாப்பு அமைப்பு அந்த ஏவுகணைகளை இடைமறித்து அழித்ததாக செய்தி வெளியாகியுள்ளது.
இந்த சூழ்நிலையில், இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு லெபனான் மக்களுக்கு விடுத்துள்ள வீடியோ செய்தியில் கூறியிருப்பதாவது: ஹிஸ்புல்லா அமைப்பினர் லெபனான் மக்களை நீண்டகாலமாக மனித கேடயமாக பயன்படுத்திவருகின்றனர். லெபனான் மக்களின் வீடுகளில் ராக்கெட்டுகளையும், அவர்களது கேரேஜில் ஏவுகணைகளையும் மறைத்து வைத்து அதை இஸ்ரேலுக்கு எதிராக பயன்படுத்தி வருகின்றனர்.
எனவே, இஸ்ரேல் மக்களை பாதுகாக்க அந்த ஆயுதங்களை அழிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, லெபனான் மக்கள் தங்கள் வீடுகளில் இருந்துவெளியேறி பாதுகாப்பான இடங்களில் தஞ்சமடைய வேண்டும். இஸ்ரேல் தாக்குதல் நடத்தி முடிந்ததும் தெற்கு லெபனான் மக்கள் மீண்டும் தங்களது குடியிருப்புகளுக்கு திரும்பலாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.