நூ (ஹரியானா): ஒரு காலத்தில் சாதாரணமான கட்டிடப் பணிகளுக்கான இயந்திரமாக இருந்த புல்டோசர்கள் இன்று அரசு அதிகாரம் மற்றும் அரசியல் சின்னமாக மாறி ஹரியானா தேர்தல் பிரச்சாரக் களத்தில் எங்கும் நீக்கமற பரவிக் காணப்படுகிறது. மக்களின் கவனத்தை எளிதில் ஈர்க்கும் விஷயமாகவும் புல்டோசர்கள் மாறியுள்ளன.
ஹரியானாவின் நூ மாவட்டத்தின் குறுகலான தெருக்களில் கூட புல்டோசர்களின் தொட்டிகளில் இளைஞர்கள் ஏறி நின்று நடனமாடுவது, கீழே அமர்ந்திருக்கும் கூட்டத்தினர் மீது துண்டு பிரசுரங்களை மழை போல பொழிவது அங்கு சாதாரணமாக காணும் காட்சிகளாகி விட்டன. புல்டோசர்கள் மற்ற பகுதிகளில் தவறான பெயரைச் சம்பாதித்திருக்கலாம். ஹரியானாவின் மிகவும் பின்தங்கிய தொகுதியான இங்கு அப்படி இல்லை. மக்கள் இங்கு தேர்தல் திருவிழாவைக் கொண்டாடும் மனநிலைக்கு புல்டோசர்கள் பயன்படுத்தப்படுகின்றன.
புல்டோசர்களின் இந்தக் கொண்டாட்ட மனநிலை ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு காட்சிகள் வேறு விதமாக இருந்தன. முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் நூ தொகுதியில் நடந்த மத ஊர்வலம் ஒன்றில் ஏற்பட்ட வன்முறையில் 6 பேர் கொல்லப்பட்டனர். இதனைத் தொடர்ந்து அங்கு கலவரம் மூண்டது. அக்கலரம் மெல்ல நூ அருகில் இருக்கும் குருகிராமுக்கும் பரவியது. அங்கு ஒரு மசூதியில் நடந்த தாக்குதலில் மதகுரு ஒருவர் கொல்லப்பட்டார். இந்த வன்முறைகளைத் தொடர்ந்து மாநிலத்தை ஆளும் பாஜக தலைமையிலான அரசு, நூ-வில் கலவரத்தில் ஈடுபட்டவர்களின் வீடுகளை இடிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டது. இந்த நடவடிக்கை இன அழிப்பு என்று குற்றம்சாட்டப்பட்டது. அதனை மாநில முதல்வர் மனோகர் லால் கட்டார் முற்றிலும் மறுத்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து ‘புல்டோசர் நீதி’,‘புல்டோசர் அரசியல்’ போன்ற சொற்பதங்கள், பிரச்சாரத்துக்கான ஆயுதங்களாக மாறின. காங்கிரஸ் மற்றும் பாஜக இந்தத் தேர்தலில் புல்டோசர் இயந்திரத்தை அதிகம் பயன்படுத்துகின்றன. இதுகுறித்து அடையாளத்தை வெளிப்படுத்த விரும்பாத காங்கிரஸ் தொண்டர் ஒருவர் கூறுகையில், “தேர்தல் பிரச்சாரங்களில் புல்டோசர்கள் பயன்படுத்தப்படுவது மாவட்டத்தில் மதநல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையில் செயல்படுபவர்கள் கடுமையான நடவடிக்கையை சந்திக்க நேரிடும் என்பதையேக் குறிக்கிறது. கடந்த ஆண்டு நடந்த கலவரம் வெளியாட்களால் ஏற்பட்டது என்று நாங்கள் நம்புகிறோம்” என்றார்.
மற்றொரு காங்கிரஸ் தொண்டர் கூறுகையில், “புல்டோசர்களைப் பயன்படுத்துவது என்பது பாஜகவிடமிருந்து ஆட்சியை பறிப்பதற்கான போராட்டத்தை மட்டும் குறிக்கவில்லை. கடந்த ஆண்டு இடிப்புச் சம்பவத்தின்போது அழிக்கப்பட்ட பலரின் வீடுகள் மற்றும் வாழ்வாதரத்தையும் குறிக்கிறது. புல்டோசர்கள் கூட்டத்தை ஈர்க்கும் சக்தியாக இருக்கின்றன” என்றார்.
அடையாளத்தை வெளியிட விரும்பாத பாஜக தொண்டர் ஒருவர் கூறுகையில், “கடந்த ஆண்டு சட்ட விரோத கட்டிடங்கள் மட்டுமே புல்டோசர்கள் கொண்டு இடிக்கப்பட்டன. பிரச்சாரத்தில் அதனைப் பயன்படுத்துவது எதிர்மறை விஷயமாக இருக்காது. பிரச்சாரத்தில் மற்ற வாகனங்கள் பயன்படுத்துவது போல புல்டோசர்களும் பயன்படுத்தப்படுகின்றன. அவை மக்களை வெகுவாக கவர்கின்றன” என்று தெரிவித்தார்.
வீதிகளில் உள்ள ஆண்களை மட்டும் இல்லாமல் வீடுகளின் ஜன்னல் கம்பிகளுக்கு பின்னால் இருந்து பிரச்சாரங்களை கவனிக்கும் பெண்களையும் புல்டோசர்கள் ஈர்த்துள்ளன. நூ-வின் கன்வார்சிகா கிராமத்தைச் சேர்ந்த சுல்தானா கூறுகையில், “பெண்கள் தேர்தல் பேரணிகளில் கலந்து கொள்வது இன்னும் சகஜமாகவில்லை. நாங்கள் (பெண்கள்) தேர்தல் பிரச்சாரங்களை ஒலிபெருக்கிகளின் வழியாக மட்டுமே அறிய முடியும். இதுபோல (புல்டோசர் பிரச்சாரம்) வித்தியாசமாக ஏதாவது நடந்தால் மட்டுமே நாங்கள் அதை ஜன்னல்களுக்கு பின்னால் இருந்து பார்த்துக்கொள்ள முடியும்” என்றார்.
புல்டோசர்கள் முதன் முதலாக உத்தரப் பிரதேச மாநிலத்தில்தான் தேர்தல் அகராதிக்குள் நுழைந்தன. புல்டோசர் நடவடிக்கை குற்றவாளிகள் மீது அரசின் கரத்தினை வலிமையாக பிரயோகிப்பதுடன், அரசு மீது ஓர் உயர் மதிப்பை உருவாக்குவதாக அரசு தரப்பு கருதியது. ஆனால், சமீபத்தில் “சட்டம் முதன்மையாக உள்ள நாட்டில், வீடுகளை இடிக்கும் அச்சுறுத்தல் ஏற்றுக்கொள்ள முடியாதது. குடும்பத்தில் உள்ள ஒருவர் சட்டவிதிமுறைகளை மீறினார் என்பதற்காக, அவரது குடும்ப உறுப்பினர்கள் வசிக்கும்வீட்டை இடிக்க முடியாது. குற்றச்செயலில் ஈடுபட்டால், வீட்டை இடிக்க வேண்டும் என்பதற்கு எந்த அடிப்படையும் இல்லை” என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்தனர்.
அத்துடன், மாநகராட்சி சட்டங்களின் கீழ் புல்டோசர் மூலம் கட்டிடங்களை இடிப்பதை அக்டோபர் 1-ம் தேதி வரை நிறுத்திவைக்கும்படி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்ததும் இங்கே கவனிக்கத்தது. இந்தப் பின்புலத்தில், ஹரியானா தேர்தல் களத்தில் புல்டோசர்கள் கவனம் ஈர்க்கும் ஒன்றாக மாறியிருக்கிறது. ஹரியானா சட்டப்பேரவைக்கு அக்டோபர் 5-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. வாக்குகள் அக்டோபர் 8-ம் தேதி எண்ணப்படுகின்றன.