தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண், அட்டகத்தி தினேஷ், சஞ்சனா, பால சரவணன், டி எஸ் கே, ஜென்சன், தேவதர்ஷினி, காளி வெங்கட் உள்ளிட்டோர் நடிப்பில் திரையரங்குகளில் வெளியாகியுள்ள ‘லப்பர் பந்து’ திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.
கிரிக்கெட்டில் அனுபவம் வாய்ந்த ஆட்டக்காரராக அட்டகத்தி தினேஷ், அவருக்கு நிகராக வளர்ந்து வரும் சிறந்த ஆட்டகாரராக இருக்கும் துடிதுடிப்பான இளைஞராக ஹரிஷ் கல்யாண் ஆகியோர் சிறப்பாக நடிக்க, இதற்கிடையில் நண்பர்களாக வரும் ஜென்சன் திவாகர் மற்றும் பால சரவணன் இருவரும் பார்ட்னர்ஷிப் போட்டு சிரிப்பால் சிக்ஸர்களை அடித்து படத்திற்குப் பலம் சேர்த்திருந்தனர்.
இந்நிலையில் இப்படத்தின் வெற்றி விழாவில் பேசிய நடிகர் ஜென்சன் திவாகர், “என்னை போன்ற நடிகர்களுக்கு இப்படியான வெற்றி விழா மேடையில் நிற்க வேண்டும் என்பது மிகப்பெரிய கனவு. அந்தக் கனவு இப்போது எனக்கு நனவாகியிருக்கிறது. அதற்கு இயக்குநர் தமிழரசன் சாருக்கு நன்றிகள். இந்தப் படம் கிடைப்பதற்குக் காரணமாக இருந்த ‘அயலி’ படத்தின் இயக்குநர் முத்துக்குமார் அவர்களுக்கும் எனது நன்றிகள்.
ரொம்ப ரொம்ப கஷ்டப்பட்டு நடித்தேன் என்று சொல்வார்கள். அதை இப்போதுதான் உணர்கிறேன். இப்படத்தில் உண்மையிலேயே ரொம்ப கஷ்டப்பட்டுத்தான் நடித்தேன். இயக்குநரும் என்னிடமிருந்து நல்ல நடிப்பை வாங்கிவிட்டார். ரொம்ப கஷ்டப்படுத்திட்டார், அதனால்தான் நானும் நன்றாக நடித்திருக்கிறேன். ‘இயக்குநர் எதுக்கு இப்படி திட்டுகிறார், இவருக்கு என்னதான் வேணும்’ என்று அடிக்கடி யோசிப்பேன்.
ஆனால், தியேட்டரில் படம் பார்க்கும்போதுதான், ‘ஓ இதுக்காகத்தான் அப்படி திட்டுறார், இதுதான் அவருக்கு வேண்டுமா’ என்று புரிந்து கொண்டேன். என்ன தேவை என்பதைத் தெளிவாகப் புரிந்து கொண்டு, நடிப்பைச் சரியாக வாங்கியிருக்கிறார். இப்படிப்பட்ட நல்ல இயக்குநரின் இயக்கத்தில் நடித்ததில் எனக்குப் பெரும் மகிழ்ச்சி” என்று பேசியிருக்கிறார்.