‘லப்பர் பந்து’ திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.
தொழில்நுட்ப ரீதியாகவும் படத்தின் அத்தனை அம்சங்களும் கச்சிதமாக அமைந்திருக்கிறது. அதிலும் மிக முக்கியமானது இந்த படத்தின் ஆர்ட் ஒர்க் வேலைகள். ரசிக்க வைக்கும் மஞ்சள் நிற ஹரிஷ் கல்யாண் வீடு, வாழ்வியலை பிரதிபலிக்கும் ‘அட்டகத்தி’ தினேஷ் வீடு என அவ்வளவு யதார்த்தமாக செட்களை அமைத்திருந்தார் கலை இயக்குநர் வீரமணி கணேசன். இந்தப் படத்திற்கு இவர் கலை இயக்குநர் மட்டுமல்ல. கெத்து கதாபாத்திரத்தின் நண்பராகவும் வந்து ஆங்காங்கே காமெடிகளை நிகழ்த்துவார். படத்துக்கு வாழ்த்துகளைக் கூறி வீரமணி கணேசனிடம் கூறினோம்.
பேச தொடங்கிய அவர், “நான் இந்த படத்தோட தயாரிப்பு நிறுவனமான ப்ரின்ஸ் பிக்சர்ஸ்ல நான்கு படங்கள் பண்ணியிருக்கேன். மூன்றாவது திரைப்படம்தான் ‘லப்பர் பந்து’. நான் ‘தண்டட்டி’ படத்துல பண்ணின ஆர்ட் ஒர்க் பிடிச்சு இந்த படத்துக்கு தயாரிப்பு நிறுவனம் கூப்பிட்டாங்க. அப்படிதான் நான் ‘லப்பர் பந்து’ படத்துக்குள்ள வந்தேன். இந்தப் படத்துக்கு ஆர்ட் ஒர்க் இல்லாமல் நான் ஒரு கதாபாத்திரத்திலயும் நடிச்சிருக்கேன். நான் வேலை பார்க்கிற படங்கள்ல நான் ஏற்கெனவே சின்ன சின்ன கதாபாத்திரங்கள்ல நடிச்சிருக்கேன். ‘குரங்கு பொம்மை’, ‘நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணும்’ படத்தோட கலை இயக்குநர் நான்தான். அந்த படங்கள்லையும் நான் ஒரு கேரக்டர்ல நடிச்சிருக்கேன்.
ஆனா, நிறைய படங்கள்ல நடிக்கிறதுக்கு வாய்ப்பு கிடைக்குது. கலை இயக்குநராக வேலைகள் அதிகமாக இருக்கிறதுனால சில கதாபாத்திரங்கள்தான் நான் பண்றேன். இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து நான் நடிக்கவும் செய்வேன்னு தெரிஞ்சு இந்தப் படத்துல நடிக்கிறதுக்கு கேட்டாரு. இந்த படத்துல ஆர்ட் டைரக்ஷனுக்கு ரொம்பவே முக்கியத்துவம் இருக்கு. ஹரிஷ் கல்யாண் வீட்டோட ஆர்ட் ஒர்க். அட்டகத்தி தினேஷ் மற்றும் அசோதை கதாபாத்திரத்தோட அம்மா வீடுன்னு எல்லாமே செட்தான். முக்கியமாக கிரிக்கெட் மைதானத்தையும் நாங்கதான் தயார் பண்ணினோம். நான் பணியாற்றிய படங்கள்ல ஆர்ட் ஒர்க் யதார்தத்தை மீறி இருக்காது. ரொம்ப மிகையாக இருந்திடக்கூடாதுனு கவனமாக வேலை பார்ப்பேன். ‘தண்டட்டி’ படத்துல முக்கியமான விஷயமாக இருக்கிற வீடுமே செட்தான்.
சொல்லப்போனால்… ஸ்பாட்ல இருந்தவங்களுக்குக்கூட அது செட்னு தெரியாது. நான் ஒரு படம் பண்ணும்போது வேற படம் பண்ணமாட்டேன். ஒரு படத்துல முழுமையாக வேலை பார்ப்பேன்.” என்றவர், “இந்த படத்துல ஹரிஷ் கல்யாணோட வீட்டிற்கு சி.எஸ்.கே பெயின்ட் பண்ணியிருந்தோம். அதை பார்த்துட்டு ஹரிஷ் கல்யாண் பாரட்டினார். அந்த வீட்டுக்கு நாங்க ரெபரென்ஸ் எடுத்துதான் பண்ணினோம். இதே மாதிரி சி.எஸ்.கே ரசிகர் ஒருவர் அவரோட வீட்டுக்கு இந்த மாதிரி பெயின்ட் பண்ணியிருக்கார். அதை வச்சுதான் இந்த வீட்டுக்கு வேலை பார்த்தோம். அந்த வீட்டைப் பார்த்துட்டு பலரும் பாராட்டினாங்க. அட்டக்கத்தி தினேஷின் ‘கெத்து’ கதாபாத்திரம் ஒரு பெயின்ட்டர். அதே சமயம் அவருக்கு கிரிக்கெட்ல அளப்பரிய ஆர்வம் இருக்கு.
கிரிக்கெட்டுக்காக வருமானத்தைக்கூட பார்க்காமல் விளையாட போறாரு. அதுனால அவங்க வீட்டுல கடனும் அதிகமாக வாங்குவாங்க. அந்த வாழ்வியலோட இருக்கணும்னு திட்டமிட்டு அவரோட வீட்டிற்கு செட் வேலைகள் பண்ணினோம். இந்த படம் ரிலீஸானதுல இருந்து எனக்கு தினமும் 40 கால் வருது. முக்கியமாக என்னுடைய நண்பர் விஜய் சேதுபதி கால் பண்ணி என்னுடைய நடிப்பையும் ஆர்ட் வேலைகளையும் பாராட்டினார். அவருடன் நான் ‘நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம்’, ‘ரம்மி’ படங்கள்ல வேலை பார்த்திருக்கேன். அவர் ரெண்டு நாளைக்கு முன்னாடி கால் பண்ணி, ” படத்துல உன்னுடைய ஆர்ட் வேலைகள் ரொம்பவே நல்லா இருந்தது. முக்கியமாக தொடர்ந்து நடிச்சுட்டே இரு. உன்னுடைய எக்ஸ்பிரஷன்ஸ் நல்லா இருக்குன்னு பாராட்டினாரு.” என நெகிழ்ச்சியோடு முடித்துக் கொண்டார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/E0QlpeNbGHnF9W5rFKCVSU
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…