திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது, ‘லப்பர் பந்து’ திரைப்படம்.
‘நெஞ்சுக்கு நீதி’ திரைப்படத்தின் வசனகர்த்தாவாக விகடன் விருதினை வென்று நம்மிடையே பரிச்சயமானவர் தமிழரசன் பச்சமுத்து. அவர் இயக்குநராக அவதரித்திருக்கும் திரைப்படம் ‘லப்பர் பந்து’. படத்திற்கு அளப்பரிய கைதட்டல்களும் விசில் சத்தமும் கிடைப்பதற்கு முக்கியக் காரணம் இவருடைய எழுத்துதான். அத்தனை பொழுதுபோக்கு அம்சத்துடத்துடன் அரசியலைப் பேசி முதல் படத்திலேயே அசரவைத்திருக்கிறார். அவருக்கு வாழ்த்துகளைக் கூறி பேசத் தொடங்கினோம்.
இத்திரைப்படத்தின் கதைதான் நீங்க முதன் முதலாக இயக்கணும்னு முடிவு பண்ணி வச்சிருந்த கதையா?
இல்ல, நான் வேற ஒரு ரொமான்டிக் காமெடி கதையை வச்சுகிட்டுதான் ரெண்டு வருஷம் சுத்திக்கிட்டு இருந்தேன். அது பட்ஜெட்டாவும் கொஞ்சம் பெருசு. மேலும், முதல் படமாக என்னால அதைப் பண்ண முடியுமானு தெரில. அதுனால அர்ஜென்ட்டுக்கு பண்ணின கதைதான் ‘லப்பர் பந்து’. அருண்ராஜா காமராஜ்தான் என்னை தயாரிப்பாளர் லக்ஷ்மண் சார்கிட்ட அறிமுகப்படுத்தினாரு. அவர் ‘நீங்க வாழ்வியலாக கதை சொல்லுவீங்கன்னு அருண் ராஜா சொன்னாரு. அது மாதிரி படம் பண்ணலாம்’னு சொன்னாரு. அப்போ என் வாழ்க்கைல நடந்த விஷயங்களை பார்க்கும்போது கிரிக்கெட்டும் சினிமாவும்தான் இருந்துச்சு. அதன் பிறகு இந்தக் களத்தின் கதாபாத்திரங்கள் என்கிட்ட இருந்துச்சு. அதை நான் சொன்னேன். தயாரிப்பாளரும் உடனடியாக பண்ணலாம்னு சொல்லிட்டாரு. என்னுடைய கதையின் முதல் டிராஃப்ட்டை நான்தான் எழுதுவேன். முதல்ல எடுத்ததும் டிஸ்கஷனுக்கு எடுத்துட்டு வந்தால் கதை முற்றிலுமாக மாறிடும். அதுனால இந்த விஷயத்துல நான் கவனமாக இருப்பேன். இந்தப் படத்தோட முதல் காட்சியில வர்ற பையன் மாதிரிதான் நானும் எக்ஸாம்லாம் முடிச்சிட்டு உடனடியாக விளையாட கிளம்பிடுவேன். ஆனா சாதிய ஒடுக்குமுறைகள் எனக்கு நடக்கல. எனக்கு தெரிஞ்சவருக்கு நடந்துச்சு. காதல் காட்சிகளெல்லாம் முழுக்க முழுக்க கற்பனைதான் (சிரிக்கிறார்). ஆனா, சஞ்சனா நடிச்சிருக்கிற கதாபாத்திரத்துல என்னுடைய மனைவியும் இருக்காங்க. எனக்காக அவ்வளவு விஷயங்கள் பண்ணுவாங்க. ஆனா அதே சமயம் நான் எதுவுமே பண்ணினது கிடையாது. அவங்க அதையும் எதிர்பார்க்கமாட்டாங்க. யசோதா கதாபாத்திரத்திலையும் என்னுடைய மனைவி இருக்காங்க. என்னை யாராவது எதவாது பேசினால் என் மனைவிக்கு கோவம் வந்திடும். என் வாழ்க்கையில் வந்த பெண்ணோட பிரதிபலிப்புதான் இந்த கதாபாத்திரங்கள்.
உங்க வாழ்க்கைல நீங்க பார்த்த உண்மையான ‘கெத்து’ கதாபாத்திரம் யாரு?
எங்க ஊர்ல தவக்களைன்னு சொல்லி ஒரு அண்ணன் இருப்பாரு. அவர்தான் கெத்து கதாபாத்திரத்துக்கு இன்ஸ்பிரேஷன். அவர் அண்ணன்தான் . ஆனா, அவரை நாங்க ‘வாடா, போடா’னுதான் கூப்பிடுவோம். அவரும் ஒரு பெயிண்டர்தான். அதுமட்டுமில்ல, பயங்கரமாக கிரிக்கெட் விளையாடுவாரு. பக்கத்து ஊர்களுக்கு போட்டிகளுக்கு போனாலும் ‘தவக்களை’னு சொன்னதும் அவங்களுக்கு இவரைப் பத்தித் தெரிஞ்சிருக்கும். தினேஷ் அண்ணனுக்கு கிரிக்கெட் பற்றி ஒரு ஆழத்தை காமிச்சாச்சு. ஆனா, ஹரிஷ் கல்யாணுக்கு அந்த ஆழத்தை காட்டுறதுக்கு எனக்கு பெரிய இடம் கிடைக்கல. அதுனால வீட்டுக்கு சி.எஸ்.கே பெயிண்ட் அடிச்சு, அந்த கதாபாத்திரத்தோட வேலையையும் அது தொடர்பாகவே வச்சு கிரிக்கெட்டை பதிவு பண்ணிட்டேன். எனக்கு படத்தோட கதாபாத்திரங்கள் வேலையில்லாமல் சும்மாவே இருக்கிறதுல உடன்பாடு இல்ல. அது ஃபேக்காகவும் இருக்கும். இந்தப் படத்துல அனைவரும் எதோவொரு வேலையை பார்த்துட்டேதான் இருப்பாங்க. அப்போதான் ஒரு லைஃப் உருவாகும். நம்ம பேசுற வசனத்துனால லைஃப் உருவாகிடாது.
படத்துல எந்த கதாபாத்திரத்தை எழுதுறது சவலாக இருந்துச்சு?
எனக்குக் கொளஞ்சி கதாபாத்திரம் கொஞ்சம் எழுதுறதுக்கு சவலாக இருந்துச்சு. படத்தோட முதல் பாதியில கொளஞ்சி கதாபாத்திரத்துனாலதான் பிரச்னை உருவாகணும். அதே கதாபாத்திரத்தின் மேல இரண்டாம் பாதியில கருணை வரணும். இந்த மாற்றம் ரொம்பவே இயற்கையாக இருக்கணும். இதை எல்லா காட்சிகளிலேயும் பார்த்துப் பார்த்து பண்றது கொஞ்சம் கஷ்டமாதான் இருந்துச்சு.
இந்தப் படத்தோட கதாபாத்திரங்களுக்கு முதல்ல எந்தெந்த நடிகர்களை யோசிச்சு வச்சிருந்தீங்க?
அன்பு கதாபாத்திரத்துக்கு நான் முதல்ல ஹரிஷைதான் யோசிச்சு வச்சிருந்தேன். அவரும் முதல் தடவை கதை சொன்னதும் நடிக்கிறதுக்கு ஒத்துகிட்டாரு. தினேஷ் அண்ணன் கதாபாத்திரத்துக்கு எனக்கு நிறைய குழப்பங்கள் இருந்துச்சு. அந்த கதாபாத்திரத்துல ஒரு ஹீரோதான் நடிக்கணும்னு நான் திட்டவட்டமாக இருந்தேன். ஆனா, அந்த கதாபாத்திரத்தை மாமனாராகதான் பார்த்தாங்க. இந்த கதாபாத்திரத்துக்கு நடிகரை தேடுறதுக்கே கொஞ்சம் டைம் எடுத்தது. நான் தினேஷ் அண்ணனை நினைச்சேன். ஆனா எனக்கு கொஞ்சம் தயக்கமாக இருந்துச்சு. எனக்கு அவரை ரொம்பப் பிடிக்கும். முதல் முறையே இப்படி சொன்னால் எப்படி எடுத்துப்பார்னு ஒரு தயக்கம் இருந்துச்சு. அதன் பிறகு ஒரு நாள் போய் சொல்லிடுவோம்னு நினைச்சு போயிட்டேன். போனதும் ‘நான் இப்போ ரெண்டு குண்டு போடுவேன். பிடிச்சிருந்தால் பண்ணுங்க’னு தினேஷ் அண்ணன்கிட்ட சொன்னேன். அவரோட கதாபாத்திரத்துக்கு 40 வயசுனு சொல்லி முதல்ல ஒரு குண்டு போட்டேன். அதுக்கும் அவர் ஒத்துகிட்டார். அடுத்தது படத்தோட கதையை பத்து நிமிஷம் சொன்னேன். முழுவதுமாக கேட்டுட்டு பண்றேன்னு ஒத்துகிட்டாரு. நான் அந்த கதாபாத்திரத்துக்கு ‘ நீ பொட்டு வச்ச தங்க குடம்’ பாடல் போடுறதை பத்தி சொன்னதும் அவருக்கு பிடிச்சிருந்தது. என்னை மாதிரியே அவருக்கும் விஜயகாந்த் சாரைப் பிடிக்கும்.
‘கெத்து’ கதாபாத்திரத்தை உயர்த்தி பிடிக்குறதுக்கு சில எலமென்ட்களை பயன்படுத்தியிருந்தீங்க. அதற்கான ஐடியா பத்தி சொல்லுங்க?
அந்த கதாபாத்திரத்தை உயர்த்தணும். அதுக்கான வைப் கொடுக்கணும்னு யோசிக்கும்போது எனக்கு பிடிச்ச கேப்டனோட பாடலை பயன்படுத்தலாம்னு முடிவு பண்ணினோம். ரஜினி சாருக்கு ‘அண்ணனுக்கு ஜே!’ மாதிரி விஜயகாந்த் சாருக்கு இந்த பாடல். அதே மாதிரி பண்ணினோம். இந்த தீர்க்கமான முடிவை நான் தயாரிப்பாளர்கிட்டவும் சொல்லிட்டேன். நான் முதல்ல ரைட்ஸ் பிரச்னை வரும்னுதான் பயந்தேன். தயாரிப்பாளர்களும் கதையைப் படிச்சிட்டு இந்தப் பாடல் அந்த கெத்து கதாபாத்திரத்துக்கு எந்தளவுக்கு முக்கியம்னு புரிஞ்சுகிட்டாங்க. இதன் பிறகு கெத்து கதாபாத்திரம் முதல் பந்தை பூமிக்குக் கொடுக்கிறது, கடைசில அவுட்டாகி எதிரணியினர் கொண்டாடுறதை ரசிக்கிற விஷயங்கள் கதைகாக நான் சேர்த்தது. அப்போதான் கதைக்கேத்த மாதிரி அது கனெக்ட்டாகும். இதுமட்டுமில்ல, படத்துல காளி வெங்கட் அண்ணனோட மகளாக வரும் அகிலா கதாபாத்திரத்தையும் ஒரு மொமன்ட்டுக்காக பயன்படுத்தணும்னு ஒரு எழுத்தாளனாக யோசிச்சு திட்டமிட்டேன். ஏஜெண்ட் டீனா மாதிரியான மொமன்ட் உருவாக்கணும்னுதான் ஐடியா. அந்த பெண்ணும் சரியாக கிரிக்கெட் விளையாட தெரிஞ்சவங்கனு பதிவு பண்றதுக்குதான் ஸ்ட்ரைட் டிரைவ் மாதிரியான ஷாட் அவங்க அடிக்கிற மாதிரிலாம் வச்சிருந்தோம்.
வீடியோ பேட்டியைக் காண
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/E0QlpeNbGHnF9W5rFKCVSU
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…