இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் அட்டகத்தி தினேஷ், ஸ்வாசிகா, ஹரிஷ் கல்யாண், சஞ்சனா ஆகியோர் நடிப்பில் கடந்த வெளியான லப்பர் பந்து திரைப்படம் மக்களிடம் வரவேற்பை பெற்றிருக்கிறது.
கிரிக்கெட் போட்டியில் இரு ஆண்களுக்கு இடையிலான ஈகோவை மையமாக வைத்துக்கொண்டு படத்தில் சாதி மறுப்புத் திருமணம், பெண்ணியம், விளையாட்டில் சாதி, காதல், நகைச்சுவை என சிக்சர்களாக பறக்கவிட்டிருக்கிறார் இயக்குநர்.
இந்த நிலையில், படத்தின் வெற்றிக் கொண்டாட்டம் இன்று நடைபெற்றது. லப்பர் பந்து படக்குழுவினர் கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சியில் பேசிய இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து, “இந்த படத்தோட டைட்டில் நல்லா இருக்குனு எல்லோரும் சொன்னாங்க. ஆனா, மொதல்ல எனக்கு இது புடிக்கல. நாங்க ரப்பர் பந்து டீம் என்பதால எல்லோரும் இதையே வைக்கலாம்னு சொன்னாங்க. அப்றமா ரப்பர் பந்த லப்பர் பந்து-னு மாத்தி வச்சோம்.
தினேஷ் அண்ணா என்கிட்ட 15 நிமிஷம் தான் கதை கேட்டிருப்பாரு. படத்துல உங்களுக்கு 40 வயசு, துர்காவுக்கு அப்பானு ரெண்டு குண்டு போட்டேன். ஒரு நிமிஷம் பாத்துட்டு, ஓகே சொல்லிட்டாரு. எனக்கு எந்த அளவுக்கு விஜயகாந்த் சார புடிக்குமோ அந்த அளவுக்கு அவருக்கும் விஜயகாந்த் சார புடிக்கும் போல. விஜயகாந்த் சார நான் கொண்டாடுற அந்த எண்ணத்துக்குதான் அவர் ஓகே சொன்னாருனு புரிஞ்சிகிட்டேன். ஒரு மாமனாரா மட்டும் போக வேண்டிய கேரக்டர இன்னைக்கு இந்த அளவுக்கு என்னோட எழுத்துக்கு உயிர்கொடுத்ததுக்கு நன்றி அண்ணா.
தமிழ்ல நல்ல ரீ என்ட்ரி வேணும், உங்கள நம்பித்தான் வரேன்னு ஹீரோயின் (ஸ்வாசிகா) சொன்னாங்க. தினேஷ் அண்ணாவும், இவங்களும் ஒன்னு கிடைக்காம ரொம்ப நாளா சுத்திட்டு இருக்காங்க, அது இந்த படம் மூலமா அவங்களுக்கு கெடச்சுதுனு அவங்க நம்புனாங்கனா மொதல்ல சந்தோஷப்படுறது நான்தான்.
நான் இந்த கதையை எழுதுனதும் ஹரிஷ் கல்யாண் கிட்டதான் சொன்னேன். உடனே ஓகே சொல்லிட்டாரு. ஷூட்ல ரொம்ப கஷ்டப்படுத்தினோம். வேணும்னு பண்ணல, ஆனா எல்லாத்தையும் பொறுத்துகிட்டாரு. இதுநாள் வரைக்கும் ஒருதடவ கூட முகம் சுளிக்கல. சஞ்சனா கேரக்டர் எழுதும்போது எனக்கும் டவுட் இருந்துச்சு, ஆனா ஸ்கிரீன்ல அவங்க இன்னும் அத மேம்படுத்துனாங்க. எல்லாருமே என்கிட்ட எதுவுமே கேக்காம பண்ணி கொடுத்தாங்க. TSK-வ இதுல நடிக்க வைக்கணும்னு எனக்கு மொதல்ல எண்ணமே கிடையாது. என்னை டார்ச்சர் பண்ணி உள்ள வந்தாரு. மொத ரெண்டு நாள் ரொம்ப கஷ்டப்பட்டாரு. ஆனா, நான் என்ன வேணும்னாலும் பண்றேன், என்னை மாத்திவிடுங்கனு கஷ்டப்பட்டு நடிச்சாரு.
புரொடியூசர் கிட்ட 20 நிமிஷம்தான் கதை சொன்னேன். நான் இரண்டரை மணிநேரம் கதை சொல்லி என்ன கட்டிபுடிச்சவங்க கூட கூப்பிட்டது கிடையாது. ஆனா, இவரு மூணாவது நாளே என்னை கூப்ட்டு மாலை போட்டு நீதான் பண்றனு சொன்னாரு. நான் எடுத்தத விட இந்த படத்த இன்னும் பெருசா காட்னதுல ஷான் ரோல்டன்-க்கு பெரிய பங்கு இருக்கு. இந்த படம் ஹிட் ஆகும்னு எனக்கு தெரியும். ஆனா, இந்த அளவுக்கு எனக்கு பேர் கிடைக்கும்னு நெனைச்சுகூட பார்கலை” என்று கூறினார்.