திருப்பதி லட்டு தயாரிப்பில் விலங்குக் கொழுப்பு, மீன் எண்ணெய் போன்றவைப் பயன்படுத்தப்பட்டதாக வெளியான ஆய்வின் முடிவுகள் நாடெங்கும் பெரும் பேசுபொருளாகி வருகிறது
இவ்வேளையில் தமிழ்த் திரைப்பட இயக்குநர் ஜி.மோகன், யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், கோயில் பிரசாதமான பஞ்சாமிர்தத்தில் கருத்தடை மருந்து கலக்கப்பட்டதாகப் பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.
அதைத்தொடர்ந்து, திருச்சி சமயபுரம் அருள்மிகு சமயபுரம் மாரியம்மன் கோவிலில் உள்ள இந்து அறநிலையத்துறை அலுவலகத்தில் மேலாளராகப் பணிபுரிந்து வரும் கவியரசு என்பவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் இந்த விவகாரம் தொடர்பாக நடவடிக்கை எடுத்துள்ள திருச்சி மாவட்ட காவல்துறை, இந்து மதத்தினரையும், இந்து மக்களையும் புண்படுத்தும் விதமாகப் பேசியதாகக் கூறி இயக்குநர் ஜி.மோகனை நேற்று (செப்டம்பர் 25ம் தேதி) காலை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியது.
இயக்குநர் ஜி.மோகனின் கைதிற்கு பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் தனது கண்டனத்தைத் தெரிவித்து, அவரை உடனே விடுதலை செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தியிருந்தார்.
இந்நிலையில் ஜாமினில் வெளியான ஜி.மோகன் தனது கைது குறித்துப் பேசும்போது, “நேற்று (செப்டம்பர் 24) காலை நான் என் குழந்தையைப் பள்ளி வாகனத்தில் ஏற்றிவிட்டு, திரும்பியவுடன் மஃப்டியில் வந்த காவலர்கள் என்னை, என் வீட்டு வாசல் முன்பே வைத்துக் கைது செய்தனர். ‘கேஷுவலான உடையில் இருக்கிறேன், நல்ல உடையை மாற்றிவிட்டு வருகிறேன்’ என்று எவ்வளவோ கூறியும், அவர்கள் என்னை விடவில்லை. ‘வழக்கறிஞர், வீட்டில் மனைவியிடம் சொல்லிவிட்டு வருகிறேன்’ என்று கூறியும் கேட்காமல் குண்டுக்கட்டாக அங்கிருந்து என்னை ராயபுரம் காவல்நிலையத்துக்கு அழைத்துச் செல்வதாகக் கூறிவிட்டு, திருச்சி காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்றார்கள்.
கைதின்போது எந்தவிதமான அடிப்படை உரிமைகளும் எனக்கு வழங்கப்படவில்லை. இது ஒரு மனித உரிமை மீறல். எனது கேள்விகளுக்குப் பதில் இல்லை, எனக்குச் சாதகமாக எதுவும் நடக்கவில்லை. பிறகு என்னை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினார்கள். வழக்கறிஞர் பாலு அவர்கள் வந்து எனக்கு ஜாமின் வாங்கிக் கொடுத்தார்.
சமூக அக்கறை கொண்டவன் நான். ஆந்திர முதலமைச்சர் அவர்கள் திருப்பதி லட்டு குறித்த குற்றச்சாட்டுகளைச் சொன்னார். அந்த தைரியத்தில்தான் இங்கு, தமிழ்நாட்டில் பஞ்சாமிர்தம் குறித்து நான் செவிவழியாகக் கேள்விப்பட்ட செய்தியின் அடிப்படையில் ஒரு குற்றச்சாட்டை முன்வைத்தேன். இந்தக் குற்றச்சாட்டு உண்மையாக இருந்திருக்கலாம் அல்லது இல்லாமல் இருந்திருக்கலாம். ஒருவேளை எனது குற்றச்சாட்டு உண்மையாக இருந்தால், தவறுகள் சரி செய்யப்படும் என்ற சமூக அக்கறையில்தான் நான் பஞ்சாமிர்தம் குறித்துப் பேசினேன். வேறெந்த உள்நோக்கமும் எனக்கில்லை. நான் பேசியது தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டிருக்கிறது” என்று பேசியிருக்கிறார்.