பிரபுதேவா தனது திரைப்பயணத்தில் 80 படங்களை தாண்டியுள்ளார். இந்த வாரம் அவர் நடித்த ‘பேட்ட ராப்’ திரைக்கு வருகிறது. அடுத்து ‘ஜாலியோ ஜிம்கானா’ வெளிவரவிருக்கிறது. இதற்கிடையே 25 ஆண்டுகளுக்கு பின் ஏ.ஆர்.ரஹ்மானுடன் இணைந்திருக்கிறார். அடுத்தும் பாலிவுட்டில் கஜோலுடன் நடித்து வருகிறார். இப்படி அசத்தலான லைன் அப்களை வைத்துள்ளார் அவர்.
சமீபத்தில் வெளியான விஜய்யின் ‘தி கோட்’ படத்தில் நடித்திருந்தார் பிரபுதேவா. இப்போது மலையாளத்திலும் நடித்து வருகிறார். அங்கே ‘ஹோம்’ படத்தை இயக்கிய ரோஹின் தாமஸ் இயக்கத்தில் ஜெயசூர்யா நடிக்கும் படமான ‘கதனர் – தி வைல்டு சார்ஸரர்’ படத்தில் நடித்து வருகிறார். வரும் டிசம்பரில் திரைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படும் இந்த படத்தில் அனுஷ்காவும் நடிக்கிறார். படப்பிடிப்பு திருவனந்தபுரத்தில் நடந்து வருகிறது.
பிரபுதேவாவின் 60 – வது படமான ‘வுல்ஃப்’ படத்தை எஸ்.ஜே.சூர்யாவிடம் உதவி இயக்குநராக இருந்த வினு வெங்கடேஷ், இயக்குகிறார். ராய்லட்சுமி, அனுசுயா பரத்வாஜ், என பலரும் நடிக்கிறார்கள். அம்ரீஷ் இசையமைத்துள்ளார். இதன் டீசரும் வெளியாகி வரவேற்பை பெற்றது.
‘கொரில்லா’ என்ற படத்தை இயக்கிய டான் சாண்டி இயக்கத்தில் ரெஜினாவுடன் ‘ஃப்ளாஷ் பேக்’ என்ற படத்திலும் நடித்து முடித்திருக்கிறார் பிரபுதேவா. இதில் அவர் எழுத்தாளராக நடித்துள்ளார். அனுசுயா பரத்வாஜ் இதில் முக்கியமான கேரக்டரில் வருகிறார். இளவரசு, உமா ரியாஸ், இவங்களோடு புதுமுகங்கள் நிறைய பேர் நடிச்சிருக்காங்க. ஆர்யா நடிச்ச ‘டெடி’ படத்துக்கு ஒளிப்பதிவு பண்ணின எஸ்.யுவா, இதுக்கும் ஒளிப்பதிவு பண்ணியிருக்கார். சாம் சி.எஸ். இசையமைச்சிருக்கார்.
இதைப் போல ‘எங் மங் சங்’ என்ற படத்திலும் நடித்து முடித்து விட்டார். லட்சுமி மேனன் ஹீரோயின். 1980களில் நடக்கும் கதையாக உருவாகியுள்ளது. இந்த படத்தில் பிரபுதேவாவின் அப்பாவாக தங்கர் பச்சான் நடித்துள்ளார். கடந்த 2020 லாக்டவுன் நிகழ்வதற்கு முன்னரே ரெடியான படமிது என்கின்றனர்.
இதை போல, ‘முசாசி’ என்ற படத்திலும் நடித்து முடித்துவிட்டார். இதில் அவர் போலீஸ் கான்ஸடபிள் என்கின்றனர். இதில் விடிவி கணேஷ், பினு பாப்பு, மகேந்திரன், ஜான்விஜய் என பலரும் நடித்துள்ளனர். கொடைக்கானல், மூணாறு, ஶ்ரீலங்கா ஆகிய இடங்களில் இதன் படப்பிடிப்பு நடந்திருக்கிறது. இதுவும் ரிலீஸுக்கு ரெடியாகிவிட்டது.
இது தவிர ரஹ்மானுடன் 6வது முறையாக இணைந்திருக்கிறார். அதுவும் 25 வருடத்திற்கு பின்னர், இப்போது அறிமுக இயக்குநர் மனோஜ் என்.எஸ். இயக்கத்தில் ‘மூன் வாக்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். முழுக்க முழுக்க காமெடிக்கு முக்கியத்துவம் அளிக்கும் படமாக உருவாகி வருகிறது.
தமிழில் அடுத்து ‘சிங்கா நல்லூர் சிக்னல்’ என்ற படமும் கைவசம் வைத்துள்ளார். ஒரு டிராபிக் கான்ஸ்டபிள் வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்களை, கலக்கலான காமெடி பின்னும் கதை இது. அறிமுக இயக்குநர் ஜே.எம்.ராஜா இயக்குகிறார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். ‘உள்ளம் கொள்ளை போகுதே” படத்திற்கு பின், பிரபுதேவாவுடன் இப்போதுதான் யுவன் கைக்கோர்க்கிறார் என்கிறார்கள்.
இவை தவிர பாலிவுட்டில் கஜோலுடன் ‘மகாராக்னி – குயின் ஆஃப் குயின்ஸ்’ என்ற படத்திலும் நடித்து வருகிறார். அட்லியின் ஆஸ்தான கேமராமனேன் ஜி.கே. விஷ்ணு, ஒளிப்பதிவு செய்து வருகிறார். நஸ்ரூதின் ஷா இதில் முக்கியமான கேரக்டரில் நடித்துள்ளார். இதன் படப்பிடிப்பும் மும்பையில் மும்முரமாக நடந்து வருகிறது. பாலிவுட்டில் ஹிமேஷ் ரேஷமையா நடிக்கும் ‘படாஸ் ரவி குமார்’ படத்திலும் வில்லனாக நடிக்க உள்ளார் பிரபு தேவா.
போதும் போதும் என சொல்லும் அளவுக்கு நீள்கிறது பிரபு தேவாவின் லைன் அப்-கள்!
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…