பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் நினைவு நாள் இன்று.
கடந்த 2020-ம் ஆண்டு இதே நாளில் அவர் மறைந்தார். அவர் உயிர் பிரிந்தாலும் அவரின் பாடல்கள் ஸ்பாடிஃபையில் டாப் இடத்தை இன்றும் பிடித்திருகிறது. அவரின் புகழை போற்றும் வகையில் அவர் கடைசி மூச்சு வரை வாழ்ந்த காம்தார் நகர் வீதிக்கு அவரின் பெயரைச் சூட்டிட கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு முதல்வரிடம் கோரிக்கை வைத்திருந்தார் எஸ்.பி.பி-யின் மகன் சரண். இந்த கோரிக்கையை ஏற்று நுங்கம்பாக்கம் காம்தார் வீதிக்கு ‘எஸ்.பி.பாலசுப்பிரமணியம் சாலை’ எனப் பெயரைச் சூட்டியிருக்கிறது தமிழக அரசு.
கலைஞர் கருணாநிதிக்கு ப்ரியமானவர்களில் எஸ்.பி.பி-யும் ஒருவர்.
இரண்டு நாள்களுக்கு முன்பு கோரிக்கை வைத்து கடிதத்தில், “எஸ்.பி.பாலசுப்பிரமணியம் நினைவைப் போற்றும் வகையில் அவர் இறுதி மூச்சுவரை வாழ்ந்த காம்தார் நகர் வீதிக்கு ‘எஸ்.பி.பாலசுப்ரமணியம் வீதி’ அல்லது நகர் என பெயர் மாற்றம் செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன். அவரின் அத்தனை கோடி ரசிகர்களின் ஆசையும் வேண்டுகோளும் இதுதான் என்பதையும் உங்கள் பார்வைக்குக் கொண்டுவர கடமைப்பட்டுள்ளேன்.” எனக் குறிப்பிட்டிருந்தார் சரண்.
இந்த கோரிக்கையை ஏற்று தமிழக அரசும் அவர் வாழ்ந்த வீட்டின் வீதிக்கு அவரின் பெயரையே சூட்டியிருக்கிறது. “பல்வேறு மொழிகளில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடி தன்னுடைய அமுதக் குரலால் தமிழ் மக்களின் நெஞ்சங்களில் அரை நூற்றாண்டுக்கும் மேலாக இசை மழை பொழிந்ததோடு பல படங்களுக்கு இசையமைத்தும் திரைப்படங்களில் நடித்தும், பல்துறை வித்தகராக விளங்கியவரும் ஒன்றிய அரசின் பத்மஸ்ரீ, பத்மவிபூஷன் விருதுகள் பெற்றவரும் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் அன்பிற்குரியவருமான திரு.எஸ்.பி.பாலசுப்பிரமணியம் அவர்கள் கடந்த 2020-ம் ஆண்டு இதே நாளன்று நம்மை விட்டுப் பிரிந்தார். காலம் அவரைப் பிரித்தாலும்
நம் அனைவரின் மனதிலும் நீங்கா இடம் பெற்றவர் அவர். அன்னார் தமிழ்த் திரையுலகிற்கு ஆற்றிய சேவையைப் போற்றும் வகையிலும் அவரின் புகழுக்கு மேலும் சிறப்பு சேர்க்கும் வகையிலும் அவர் வாழ்ந்த இல்லம் அமைந்துள்ள நுங்கம்பாக்கம் காம்தார் நகர் முதல் தெருவிற்கு, `எஸ்.பி.பாலசுப்பிரமணியம் சாலை’ எனப் பெயரிடப்படும்.” எனக் கூறியிருக்கிறது தமிழக அரசு.
அவரின் ரசிகர்களில் ஒருவனாக இச்செயலை செய்வதில் மகிழ்ச்சியடைகிறேன் என்றும் தனது சமூக வலைதளப் பக்கத்தில் கூறியிருக்கிறார், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். இது தொடர்பாக அவர், “பாடும் நிலா எஸ்.பி.பாலசுப்பிரமணியம் அவர்களது நினைவு நாளில் அவர் வாழ்ந்த காம்தார் நகர் பிரதான சாலைக்கு `எஸ்.பி.பாலசுப்பிரமணியம் சாலை’ எனப் பெயரிடப்படும் எனும் அறிவிப்பைச் செய்வதில் பாலு அவர்களின் கோடிக்கணக்கான ரசிகர்களில் ஒருவனாக மகிழ்ச்சியும் பெருமிதமும் கொள்கிறேன்.” எனக் குறிப்பிட்டிருக்கிறார் மு.க. ஸ்டாலின்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/E0QlpeNbGHnF9W5rFKCVSU
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…