கொழும்பு: “இந்தியாவும், சீனாவும் இலங்கையின் நல்ல நண்பர்கள்” என்று இலங்கையின் புதிய அதிபர் அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
இலங்கையின் முதல் இடதுசாரி அதிபராகியிருக்கும் அநுர குமார திசாநாயக்க, கடந்த காலங்களில் இந்தியாவை கடுமையாக விமர்சிப்பவராக இருந்து வந்தார். இதனால், தேர்தல் வெற்றிக்குப் பிறகு அவர் சீனாவை ஆதரிப்பார் என்ற கருத்து நிலவியது.
இந்நிலையில், அவர் சர்வதேச நாளிதழுக்கு அளித்த பேட்டியில், “இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான புவியியல் அரசியலில், சிக்கிக்கொள்ள விரும்பவில்லை. இந்தியாவும், சீனாவும் இலங்கையின் நல்ல நண்பர்கள். இரு நாடுகளும் எதிர்காலத்தில் கூட்டுச் சேர்ந்தால் நன்றாக இருக்கும் என நம்புகிறேன். மேலும், ஐரோப்பிய ஒன்றியம், ஆப்பிரிக்க நாடுகளுடனும் நான் நல்லுறவைப் பேண விரும்புகிறேன்” என தெரிவித்துள்ளார்.
முன்னதாக, இலங்கையின் புதிய அதிபராக பதவியேற்ற அநுர குமார திசாநாயக்கவுக்கு பிரதமர் மோடி தெரிவித்த வாழ்த்துச் செய்தியில், “இலங்கை அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற அநுர குமார திசாநாயக்கவுக்கு வாழ்த்துகள். இந்தியாவின் அண்டை நாடுகளுக்கான முன்னுரிமை கொள்கையில் இலங்கைக்கு சிறப்பு இடம் அளிக்கப்பட்டுள்ளது. இரு நாடுகள் இடையிலான ஒத்துழைப்பு, இரு நாட்டு மக்களின் முன்னேற்றம், பிராந்திய முன்னேற்றத்துக்கு உங்களோடு இணைந்து பணியாற்ற ஆர்வமாக உள்ளேன்” என்று குறிப்பிட்டிருந்தார்.
பிரதமர் மோடியின் பதிவுக்கு பதில் அளித்து இலங்கை அதிபர் அநுர குமார திசாநாயக்க வெளியிட்ட பதிவில், “பிரதமர் மோடியின் அன்பான வார்த்தைகளுக்கும், ஆதரவுக்கும் நன்றி. இரு நாடுகள் இடையிலான உறவை வலுப்படுத்துவதில் உங்களது உறுதிப்பாட்டை நானும் பகிர்ந்து கொள்கிறேன். நமது மக்கள் மற்றும் பிராந்தியத்தின் நலனுக்கான ஒத்துழைப்பை மேம்படுத்துவதில் நாம் இணைந்து பணியாற்றலாம்” என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.