கான்பூர்,
இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்காளதேச கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் சென்னையில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கு இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி கான்பூரில் உள்ள கிரீன் பார்க் மைதானத்தில் நாளை தொடங்க உள்ளது. இதனையொட்டி இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
அந்த சூழலில் இந்த போட்டி மழையால் பாதிப்படையும் சூழல் உருவாகியுள்ளது. ஏனெனில் கான்பூரில் முதல் 3 நாட்கள் மழை பெய்வதற்கான வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவிக்கிறது. குறிப்பாக போட்டியின் முதல் நாளான 27-ம் தேதி சராசரியாக கான்பூரில் 50 – 70 சதவீதம் மழை பெய்வதற்கு வாய்ப்புள்ளதாக வானிலை அறிக்கை தெரிவிக்கிறது. அதனால் முதல் நாள் போட்டி டாஸ் கூட வீசப்படாமல் பெருமளவு பாதிக்கப்படுவதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
அதே போல 2வது நாளும் சராசரியாக 50 – 60 சதவீதம் மழை பெய்வதற்கு வாய்ப்புள்ளதாக தெரிய வருகிறது. அத்துடன் 3வது நாளும் 40 – 50 சதவீதம் மழை பெய்வதற்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவிக்கிறது. ஆனால் கடைசி 2 நாட்களில் முழுமையாக மழை பெய்வதற்கு வாய்ப்பில்லை என்று தெரிகிறது. அந்த நாட்களில் வானம் மேகமூட்டத்துடன் மட்டுமே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதனால் திட்டமிட்டபடி இந்த போட்டி நடைபெறுமா? என்ற அச்சம் இரு நாட்டு ரசிகர்களிடையே ஏற்பட்டுள்ளது.