ராமேசுவரம்: இலங்கை நாடாளுமன்றத்தை புதிய அதிபர் அநுர குமார திசா நாயக்க முன்னதாகவே கலைத்ததால் 85 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஓய்வூதியம் பெறும் தகுதியை இழந்துள்ளனர்.
இலங்கையில் நடைபெற்ற ஒன்பதாவது அதிபர் தேர்தலில் இடதுசாரி கட்சியான தேசிய மக்கள் சக்தி (ஜேவிபி) தலைவர் அநுர குமார திசாநாயக்க வெற்றிப் பெற்று கடந்த திங்கட்கிழமை அதிபராக பதவியேற்றுக் கொண்டார். செவ்வாய்கிழமை தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினரான ஹரிணி அமர சூரியவை இடைக்கால பிரதமராக பதவியில் அமர்த்திய அநுர குமார திசா நாயக்க, அன்று இரவே பதவிக் காலம் முடிய இன்னும் 10 மாத காலம் உள்ள நிலையில் நாடாளுமன்றத்தை கலைத்து உத்தரவிட்டார்.
தொடர்ந்து, இலங்கையின் தேர்தல் ஆணையம், நாடாளுமன்றத்துக்கான தேர்தல் நவம்பர் 14-ம் தேதி நடைபெறும் எனவும், வேட்பு மனு தாக்கல் அக்டோபர் 4-ம் தேதி துவங்கி அக்டோபர் 11-ம் தேதி வரை நடக்கும் எனவும், தேர்தலுக்குப் பிறகு புதிய நாடாளுமன்றம் நவம்பர் 21-ம் தேதி அன்று கூடும் என்றும் அறிவித்தது. இலங்கையின் 1977-ம் ஆண்டு ஓய்வூதியச் சட்டவிதிகளின்படி அந்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப் படுகிறது. இந்த சட்ட விதிகளின்படி, ஓய்வூதியம் பெறுவதற்கு நாடாளுமன்ற உறுப்பினர் ஐந்து ஆண்டுகள் முழுமையாக பதவிக் காலத்தை பூர்த்தி செய்திருக்க வேண்டும்.
ஐந்து ஆண்டுகள் நாடாளுமன்ற உறுப்பனராக பதவிக் காலத்தை பூர்த்தி செய்திருந்தால் மாதம் இலங்கை ரூபாய் 45 ஆயிரம் ஓய்வூதியமாகப் பெறுவர். அதேசமயம் இரண்டு முறை 10 ஆண்டுகள் நாடாளுமன்ற பதவி காலத்தை நிறைவு செய்யும் உறுப்பினர்கள் மாதம் இலங்கை ரூபாய் 55 ஆயிரம் ஓய்வூதியமாக பெறுவர். ஆனால், முன்னதாகவே இலங்கை நாடாளுமன்றத்தை அதிபர் அநுர குமார திசா நாயக்க கலைத்துவிட்டதால், கடந்த 2020ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட 85 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஓய்வூதியம் பெறும் தகுதியை இழந்துள்ளனர்.
தமிழக, முஸ்லிம், மலையக கட்சிகள் ஒன்றிணைந்து போட்டியிட ஆலோசனை; இதனிடையே, முன்னதாக செவ்வாய்கிழமை மாலை கொழும்பில் இலங்கைத் தமிழரசுக் கட்சியைச் சேர்ந்த சுமந்திரன், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம், தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் ஆகியோருக்கிடையிலான சந்திப்பு நடைபெற்றது. இந்தச் சந்திப்பின் போது, நடைபெற்று முடிந்த அதிபர் தேர்தல் முடிவுகள் குறித்தும், நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தல் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.
பின்னர் இது குறித்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் செய்தியாளர்களிடம் பேசுகையில்,”நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலுக்கான அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்தும், இந்த தேர்தலில் நாங்கள் சார்ந்துள்ள ஐக்கிய மக்கள் கூட்டணியில் மற்ற கட்சிகளையும் சேர்ப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது” என்று ரவூப் ஹக்கீம் கூறினார்.