ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியாஉள்ளிட்ட இந்தியாவின் முன்னணி தனியார் டெலிகாம் நிறுவனங்கள், இரு மாதங்களுக்கு முன்னர், தங்கள் மொபைல் கட்டணங்களை சராசரியாக 15 சதவீதம் வரை உயர்த்தியதன் விளைவாக, பல தொலைத்தொடர்பு சந்தாதாரர்கள் அரசுக்கு சொந்தமான BSNL நிறுவனத்திற்கு மாறத் தொடங்கியுள்ளனர். மிகவும் மலிவான கட்டணத்தில் பல ரீசார்ஜ் திட்டங்களை வழங்கும் BSNL நிறுவனத்தின் வாடிக்கையாளகள் எண்ணிக்கை சமீபத்தில் பெருமளவு அதிகரித்துள்ளது. இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (TRAI) வெளியிட்டுள்ள சமீபத்திய தரவுகளின் மூலம், BSNL நிறுவனத்தின் வளர்ச்சி தெளிவாக தெரிகிறது.
இந்நிலையில், BSNL எடுத்துள்ள மிகப் பெரிய முயற்சியில், அதன் 4G நெட்வொர்க் சேவையை லடாக்கின் தொலைதூர பகுதிகளுக்கு விரிவுபடுத்தி சாதனை படைத்துள்ளது. 14,500 அடி உயரத்திற்கு தனது 4ஜி சேவையை விரிவுபடுத்தி சாதனை படைத்துள்ளது. பிஎஸ்என்எல் நிறுவனம் தனது 4G நெட்வொர்க்கை அருணாச்சல பிரதேசத்தில் உள்ள மலாபுவிலிருந்து 14,500 அடி உயரத்தில் அமைந்துள்ள லடாக்கில் உள்ள ஃபோப்ராங் வரை நீட்டித்துள்ளது. தொலைத்தொடர்புத் துறை (DoT) BSNL 4G நெட்வொர்க் சேவை விரிவாக்கத்தை உறுதிப்படுத்தியுள்ளது.
இந்தியாவில் உள்ள அனைத்து தொலைதூர பகுதிகளையும் நெட்வொர்க்கில் இணைப்பது என்ற நோக்குடன் தீவிரமாக சந்தையை விரிவுபடுத்தி வரும் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு கடும் போட்டி கொடுக்கும் வகையில், பிஎஸ்என்எல் செயல்பட்டு வருகிறது. நாடு முழுவதும் இதுவரை 35 ஆயிரத்துக்கும் மேற்பட்ட 4ஜி டவர்கள் நிறுவப்பட்டுள்ளதாக மத்திய தகவல் தொடர்புத்துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா தெரிவித்துள்ளார்.
2025 ஜூன் மாதத்திற்குள் 1 லட்சம் 4ஜி டவர்களை நிறுவ இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், மத்திய அரசும் பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு ஊக்கம் அளிக்கும் வகையில், நிதி உதவி செய்துள்ளது. மத்திய அரசு 6 ஆயிரம் கோடி ரூபாய் உதவி வழங்கி ஊக்கம் அளித்துள்ளதன் காரணமாக பிஎஸ்என்எல் மிக வேகமாக முன்னேறி வருகிறது. பிஎஸ்என்எல் தனது 4ஜி நெட்வொர்க் விரிவுபடுத்துவதிலும், சிறந்த தடையிலாத சேவை வழங்குவதிலும் சிறப்பு கவனம் செலுத்தி வருகிறது.
நாட்டின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்கள் கூட பிஎஸ்என்எல் வளர்ச்சியைக் கண்டு ஆச்சரியப்படுகின்றனர். ஜியோ, ஏர்டெல், வோடபோன் போன்ற பெரிய நிறுவனங்கள் சமீபகாலமாக தங்கள் மொபைல் கட்டணகளை உயர்த்தியதில், பலர் BSNL நிறுவனத்திற்கு மாறியதால், 2024 ஜூலையில் BSNL 29.4 லட்சம் புதிய வாடிக்கையாளர்களைச் சேர்த்துள்ளதாகவும், மற்ற நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் குறைந்துள்ளதாகவும் TRAI வெளியிட்டுள்ள தரவு கூறுகிறது.
பிஎஸ்என்எல்லின் 4ஜி நெட்வொர்க் நாடு முழுவதும் விரிவடைந்து வரும் நிலையில், ஜியோ அதனுடன் போட்டியிட முடியுமா என்பது கேள்வி எழுந்துள்ளது. தொலைத்தொடர்பு துறை மிக வேகமாக மாறி வரும் நிலையில், முகேஷ் அம்பானியின் அடுத்த நகர்வு ஜியோவின் எதிர்காலத்தை மட்டுமல்ல, இந்தியாவின் தொலைத்தொடர்பு எதிர்காலத்தையும் தீர்மானிக்கும். ஏனெனில் பிஎஸ்என்எல் நெட்வொர்க் தொடர்ந்து வலுவான முறையில் தொடர்ந்து முன்னேறி வருகிறது.