புதுடெல்லி: இந்திய மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 15 முதல் 29 வயது வரை உள்ளவர்கள் மத்தியில் கடந்த 2023 ஜூலை முதல் 2024 ஜூன் வரை நிலவிய வேலையில்லா திண்டாட்டம் குறித்து நடத்தப்பட்ட கால தொழிலாளர் கணக்கெடுப்பின் (பிஎல்எஃப்எஸ்) முடிவுகள் கடந்த திங்களன்று வெளியானது. இதில் நாட்டிலேயே வேலையில்லா திண்டாட்டம் உச்சபட்சம் உள்ள மாநிலம் கேரளா என்பது தெரியவந்துள்ளது.
கேரளாவில் 15 வயது முதல் 29 வயது வரை உள்ளவர்களில் 29.9 சதவீதத்தினருக்கு வேலையில்லை என்பதும் இவர்களில் 47.1 சதவீதத்தினர் பெண்கள் என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதையடுத்து நாகாலாந்து, மணிப்பூர், அருணாசலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களிலும் வேலையின்றி தவிக்கும் இளைஞர்களின் எண்ணிக்கை கூடுதலாக உள்ளது. மறுபுறம், மிகக்குறைந்த எண்ணிக்கையில் வேலையின்றி தவிக்கும் இளைஞர்கள் கொண்ட மாநிலமாக மத்திய பிரதேசம் உள்ளது. அதைத்தொடர்ந்து குஜராத் உள்ளது இந்த ஆய்வறிக்கையில் தெரியவந்துள்ளது.
யூனியன் பிரதேசங்களை பொருத்தமட்டில், லட்சத்தீவில் உச்சபட்சமாக 36.2% வேலையில்லா திண்டாட்டம் உள்ளது. அதிலும் இங்கு 79.7% பெண்கள் வேலையின்றி தவித்துவருவது பெரும் சிக்கலாக மாறியுள்ளது. இந்த யூனியன் பிரதேசத்தைச் சேர்ந்த ஆண்களில் 26.2% பேருக்கு வேலையில்லை. இதைத் தொடர்ந்து அந்தமான் நிக்கோபார் தீவுகளில் 33.6 சதவீதத்தினருக்கு வேலையில்லை. இவர்களில் பெண்கள் 49.5 சதவீதம், ஆண்கள் 24 சதவீதமாகும்.
ஒட்டுமொத்தமாக இந்தியாவின் 24 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் மக்கள் மத்தியில் சராசரியாக இரண்டு இலக்க சதவீதத்தில் வேலையில்லா திண்டாட்டம் நிலவுகிறது. நகர்ப்புறங்களில் வசிக்கும் இளைஞர்களில் 14.7 சதவீதத்தினருக்கும், கிராமப்புறங்களில் வாழும் இளைஞர்களில் 8.5 சதவீதத்தினருக்கும் வேலையில்லை. அதிலும் நகர்ப்புற பெண்களில் 20.1 சதவீதத்தினர் வேலை இன்றியும் கிராமப்பகுதிகளில் 8.2 சதவீதப் பெண்கள் வேலை கிடைக்காமலும் திண்டாடுகின்றனர். இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் முக்கிய பிரச்சினையாக அண்மைக் காலத்தில் உருவெடுத்துள்ளது. இதற்குக் காரணம் இந்தியப் பொருளாதாரம் நடப்பாண்டிலும் கண்டிருக்கும் 7% வளர்ச்சி புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க போதவில்லை என்று பொருளாதார அறிஞர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.