சிட்னி,
இந்தியா – ஆஸ்திரேலியா இடையிலான பார்டர் – கவாஸ்கர் கோப்பை தொடர் ஆஸ்திரேலிய மண்ணில் வரும் நவம்பர் மாதம் தொடங்க உள்ளது. இம்முறை 5 போட்டிகள் கொண்ட தொடராக இது நடைபெற உள்ளது.
கடந்த இருமுறை ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது இந்திய அணி டெஸ்ட் தொடரை கைப்பற்றியுள்ளதால் இம்முறையும் வெற்றி பெற்று ஆஸ்திரேலிய மண்ணில் ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்யும் முனைப்புடன் காத்திருக்கிறது.
அதே வேளையில் சொந்த மண்ணில் இரண்டு முறை டெஸ்ட் தொடரை இழந்த ஆஸ்திரேலிய அணி பார்டர் – கவாஸ்கர் கோப்பையை வென்று 10 வருடங்கள் ஆகிவிட்டது. இதனால் இம்முறை இந்திய அணிக்கு பதிலடி கொடுக்கும் வகையில் தயாராகி வருகிறது. எனவே இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இந்த டெஸ்ட் தொடரானது தற்போது அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்துள்ளது.
இந்நிலையில் முதல் முறையாக ஆஸ்திரேலியாவில் ரோகித் சர்மா மிடில் ஆர்டரில் விளையாடியதாக ஜோஸ் ஹேசில்வுட் கூறியுள்ளார். ஆனால் கடந்த தொடரில் தொடக்க வீரராக விளையாடிய ரோகித் சர்மா நிறைய முன்னேற்றத்தை சந்தித்து ஆஸ்திரேலியா பவுலர்களுக்கு சவாலை கொடுத்ததாகவும் ஹேசில்வுட் தெரிவித்துள்ளார். எனவே ரோகித்துக்கு எதிராக பந்து வீசுவது கடினம் என்று தெரிவிக்கும் அவர் இது குறித்து பேசியது பின்வருமாறு:-
“ஒருமுறை இந்தியா விளையாட வந்தபோது ரோகித் 5 அல்லது 6வது இடத்தில் களமிறங்கியது நினைவிருக்கிறது. கடைசியாக அவர் தொடக்க வீரராக விளையாடினார். அப்போது புதிய பந்தை நிறைய எதிர்கொண்ட அவர் வேகப்பந்து வீச்சாளர்களை நம்ப முடியாத வகையில் விளையாடியதாக உணர்ந்தேன். எக்ஸ்ட்ரா பவுன்ஸ் மற்றும் நகர்வு அவருக்கு கவலையை ஏற்படுத்துவதாக தெரியவில்லை. அவரிடம் போதுமான டைமிங் இருக்கிறது. எனவே அவருக்கு எதிராக பந்து வீசுவது எனக்கு கொஞ்சம் கடினமாக இருப்பதாக உணர்கிறேன்” என்று கூறினார்.