நீலகிரி மாவட்டம், குன்னூர் அருகில் உள்ள காட்டேரி பூங்கா சாலையோரத்தில் மருத்துவ உபகரணங்கள் அடங்கிய கழிவு பொருட்கள் கிடப்பதை அந்தப் பகுதி மக்கள் இன்று காலை கண்டுள்ளனர்.
மக்கள் நடமாட்டம் மற்றும் வனவிலங்குகள் கடக்கும் பகுதியில் மருத்துவக் கழிவுகள் கிடந்ததால் அச்சமடைந்துள்ளனர். அரசு அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்துள்ளனர். குன்னூரில் இருந்து சென்ற அதிகாரிகள் அந்தப் பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர்.

குன்னூர் நகரில் இயங்கி வரும் மத்திய அரசின் ஆராய்ச்சி நிறுவனமான பாஸ்டியர் ஆய்வகத்தின் பெயர்கள் அந்த மருத்துவ உபகரணங்களில் இருப்பதைக் கண்டறிந்துள்ளனர். முத்தடுப்பூசி மற்றும் ரேபிஸ் நோய்க்கான மருந்துகளை உற்பத்தி செய்யும் பாஸ்டியர் ஆய்வகத்தின் கவனத்திற்கு இதைக் கொண்டு சென்றுள்ளனர். அங்கிருந்த மருத்துவக் கழிவுகளைப் பாதுகாப்பான முறையில் அங்கிருந்து அகற்றிவிட்டு, இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இது குறித்துத் தெரிவித்த உள்ளூர் மக்கள், ” ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்லும் இடத்தில் மருத்துவக் கழிவுகளைக் கொட்டிருக்கின்றார்கள். குரங்குகள் அவற்றை எடுத்துச் சென்று குடியிருப்பு பகுதிகளில் வீசுகின்றன. இதனால், ஆபத்தான நோய்கள் பரவுமோ என்ற அச்சம் ஏற்பட்டிருக்கிறது” என்றனர்.

தங்கள் நிறுவனத்தின் மருத்துவ கழிவுகள் சாலையோரத்தில் கொட்டப்பட்டது குறித்து தெரிவித்த பாஸ்டியர் ஆய்வு நிறுவனத்தின் அதிகாரிகள் சிலர் கூறுகையில், “நூற்றாண்டு பழைமை வாய்ந்த இந்த ஆய்வு நிறுவனத்தின் மருத்துவக் கழிவுகளை மிகுந்த கவனத்துடன் கையாண்டு வருகிறோம். பிரத்யேக வாகனத்தில் பாதுகாப்பாக கோவை மாவட்டத்திற்கு அனுப்பி வைத்து வருகிறோம். இந்த சம்பவம் எப்படி நடந்தது என தெரியவில்லை. இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகிறோம். காலாவதியான பொருட்கள்தான். ஆபத்தான கழிவுகள் அல்ல. மக்கள் அச்சப்படத் தேவையில்லை” என்றனர்.