சென்னை: ஜாமீன் உத்தரவாதங்களை எங்கு தாக்கல் செய்வது என்ற விவரங்கள் உச்ச நீதிமன்ற தீர்ப்பில் குறிப்பிடப்படாததால் குழப்பம் ஏற்பட்ட நிலையில், செந்தில் பாலாஜியின் உறவினர்களான தியாகராஜன், சிவப்பிரகாசம் ஆகியோரது உத்தரவாதங்களை ஏற்று, செந்தில் பாலாஜியை விடுதலை செய்ய சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்தாண்டு ஜூன் 14-ம் தேதி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில், அமலாக்கத்துறை கடந்தாண்டு ஆகஸ்ட் மாதத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. இந்த வழக்கில் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் இன்று (செப்.26) வரை நீட்டித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், இந்த வழக்கு முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி கார்த்திகேயன் முன்பு வியாழக்கிழமை காலை விசாரணைக்கு வந்தது. அப்போது செந்தில் பாலாஜி புழல் சிறையில் இருந்து காணொளி காட்சி மூலம் ஆஜராகியிருந்தார். அப்போது, செந்தில் பாலாஜி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் செந்தில் பாலாஜிக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியிருப்பதாக தெரிவித்தனர். இதையடுத்து இந்த வழக்கின் விசாரணையை நீதிபதி பிற்பகலுக்கு தள்ளிவைத்திருந்தார்.
தீர்ப்பில் குழப்பம்: வழக்கை மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, நீதிபதியிடம் உச்ச நீதிமன்ற உத்தரவு நகல் சமர்ப்பிக்கப்பட்டது. செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்கிய உச்ச நீதிமன்றம், பல்வேறு நிபந்தனைகளை விதித்திருந்தது. குறிப்பாக, ரூ.25 லட்சத்துக்கான சொந்த ஜாமீனும், அதே தொகைக்கான இருநபர் உத்தரவாதமும் செலுத்த வேண்டும் என்று நிபந்தனை விதித்திருந்தது.
இந்த பிணை உத்தரவாதத்தை எங்கு தாக்கல் செய்ய வேண்டும் என்பது தொடர்பான விவரங்கள் தீர்ப்பில் குறிப்பிடப்படவில்லை. மேலும் பிணை உத்தரவாதத்தை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில்தான் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் குறிப்பிடப்படவில்லை. எனவே, இந்த பிணையை ஏற்க முடியாது பிணை உத்தரவாதம் எங்கு தாக்கல் செய்ய வேண்டும் என்பது குறிப்பிடப்படாததால், குழப்பம் உள்ளது என்றார்.
மேலும், இந்த விவகாரம் குறித்து விளக்கம் பெறுவதற்காக அமலாக்கத்துறை தரப்பு வழக்கறிஞரை ஆஜராக உத்தரவிட்டார். அதன்படி, ஆஜரான அமலாக்கத் துறை வழக்கறிஞர், செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்குவதில் எந்தவிதமான ஆட்சேபனையும் இல்லை என்றார். இதைத் தொடர்ந்து செந்தில் பாலாஜியின் உறவினர்களான தியாகராஜன் மற்றும் சிவப்பிரகாசம் ஆகியோர் அளித்த உத்தரவாதங்களை ஏற்றுக் கொண்ட நீதிபதி, செந்தில் பாலாஜியை சிறையில் இருந்து விடுவிக்க உத்தரவிட்டார்.
மேலும், உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின் அடிப்படையில் செந்தில் பாலாஜியின் பாஸ்போர்ட் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டது. இந்த உத்தரவின் காரணமாக, 471 நாட்களுக்குப் பிறகு, செந்தில் பாலாஜி சிறையில் இருந்து வெளியே வருகிறார். முதன்மை அமர்வு நீதிமன்ற உத்தரவு மின்னஞ்சல் மூலம் புழல் சிறை நிர்வாகத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.