சென்னை: தமிழகத்தில் ஒருசில இடங்களில் அக்டோபர் 1-ம் தேதி வரை மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழகம் நோக்கி வீசும் மேற்கு திசை காற்றில் வேக மாறுபாடு நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் இன்றும், நாளையும் ஓரிரு இடங்களிலும், அதைத் தொடர்ந்து அக்டோபர் 1-ம் தேதி வரை 4 நாட்களுக்கு ஒருசில இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. நேற்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக, கடலூர் மாவட்டம் வடகுத்து பகுதியில் 5 செ.மீ., ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம், நீலகிரி மாவட்டம் அழகரை எஸ்டேட், செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம், தாம்பரம், காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர், திருவள்ளூர் மாவட்டம் திருவூர், கடலூர் மாவட்டம் வானமாதேவி, குடிதாங்கி, சென்னை கொளத்தூர், மதுரவாயல், வளசரவாக்கத்தில் 3 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. இவ்வாறு சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.