தாராவியின் கதை: மும்பையில் தமிழர்களால் உருவான `மினி இந்தியா' | பகுதி 1

மும்பை தாராவியில் உள்ள ஆயிரக்கணக்கான குடிசைகளை அகற்றிவிட்டு அடுக்குமாடி குடியிருப்பு கட்டடங்கள் கட்டும் திட்டம் 15 ஆண்டுகளுக்கும் மேலாக நிலுவையில் இருந்து வந்த நிலையில், அத்திட்டத்தை செயல்படுத்தும் பொறுப்பை அதானி நிறுவனத்திடம் மாநில அரசு ஒப்படைத்தது. தற்போது அதற்கான பணிகள் அங்கு ஆரம்ப நிலையில் உள்ளது. `மினி இந்தியா’ என்று அழைக்கப்படும் `தாராவியின் கதை’யை இந்த மினித் தொடரில் காணலாம்..!

இந்தியா மட்டுமன்றி, ஆசியாவிலே அதிக அளவிலான குடிசைகள் எங்கு இருக்கிறது என்று கேட்டால், அனைவரும் கையை காட்டும் இடமாக இருப்பது `மும்பை தாராவி’. அதுவும் தமிழர்களால் உருவாக்கப்பட்ட இன்றைய தாராவி ஒரு காலத்தில் கழிவுகள் மற்றும் சாக்கடைகள் நிறைந்த கழிமுகப்பகுதியாக இருந்தது.

மும்பையின் புறநகர் பகுதியாக இருந்த மாகிம் கடலில், ஆறு வந்து கலக்கும் கழிமுகப்பகுதியில் தாராவி இருந்தது. இதனால் தாராவிக்குள் அடிக்கடி கடல் தண்ணீர் வந்து செல்லும் இடமாக முன்பொரு காலத்தில் இருந்தது. மும்பை 7 தீவுகளை கொண்ட ஒரு நகரமாக இருந்தது. ஆங்கிலேயர்கள், போர்ச்சுக்கீசியர்கள் மும்பையை ஆண்ட போதுதான் ஒவ்வொரு தீவுக்கும் இடையே பாலங்கள் மற்றும் இணைப்புகளை ஏற்படுத்தினர். ஆரம்பத்தில் மாகிம் கடற்கரையையொட்டி இருக்கும் கழிமுகப்பகுதியில் மீனவர்கள் குடியேறி மீன்பிடி தொழிலில் ஈடுபட்டனர். போர்ச்சுக்கல் நாட்டை சேர்ந்தவர்கள் 16-வது நூற்றாண்டில் மும்பைக்கு வந்தனர். அவர்கள் தாராவி அருகில் பாந்த்ராவில் ஒரு சர்ச் மற்றும் ஒரு கோட்டை கட்டி வாழ்ந்து இருந்தனர்.

பழைய தாராவி

போர்ச்சுக்கல் நாட்டு மன்னர் தனது சகோதரி கேத்ரீனை இங்கிலாந்து மன்னர் இரண்டாம் சார்லஸுக்கு 1661-ம் ஆண்டு மணமுடித்துக்கொடுத்தார். இதில் போர்ச்சுக்கல் மன்னர் வரதட்சணையாக இரண்டாம் சார்லஸுக்கு மும்பையை கொடுத்தார். இதையடுத்து 1662-ம் ஆண்டு ஆங்கிலேய அரசு மும்பைக்கு ஆப்ரஹாம் ஷிப்மென்(Abraham Shipman) என்பவரை ஆளுநராக நியமித்தது. மும்பையில் படிப்படியாக ஆங்கிலேய ஆதிக்கம் அதிகரிக்கத் தொடங்கிய பின்னர், தாராவி கழிமுகப்பகுதியில் மும்பையின் இரண்டாவது கவர்னர் ஜெரால்டு புதிய கோட்டை ஒன்றை கட்டினர். அந்த கோட்டை காலகில்லா என்ற பெயரில் இன்றைக்கும் இருக்கிறது.

அந்த கோட்டையைத்தான் ஆங்கிலேயர்கள் எதிரிகள் யாராவது வருகிறார்கள் என்பதை கண்காணிக்கும் டவராக பயன்படுத்தி வந்தனராம்.

பின்னர், 18-வது நூற்றாண்டில் மும்பையின் 7 தீவுகளும் ஒன்றாக இணைக்கப்பட்டது. அதோடு கழிமுகப்பகுதிகளில் மண் போடப்பட்டு நிலம் கையகப்படுத்தப்பட்டது. இதனால் மாகிம் கழிமுகப்பகுதி படிப்படியாக சுருங்கி குடியிருப்பு பகுதிகளாகவும், குடிசைகளாகவும் மாறியது. இதனை தொடர்ந்து மீனவர்கள் புதிய வாய்ப்புகள் தேடி நகரின் தென்பகுதியை நோக்கி நகர ஆரம்பித்தனர்.

தாராவி

19-வது நூற்றாண்டின் இறுதியில் குஜராத்தின் செளராஷ்டிரா, மகாராஷ்டிராவின் இதர பகுதிகளில் இருந்து மும்பையில் மக்கள் குடியேற ஆரம்பித்தனர். செளராஷ்டிரா மக்கள் மண்பாண்டங்கள் செய்வதற்காக மாகிம் பகுதியையொட்டி காலியாக இருந்த தாராவி கழிமுகப்பகுதியில் குடில்களை அமைத்து வசிக்க ஆரம்பித்தனர். இன்றைக்கும் குஜராத் குயவர்கள் தாராவியின் பிரதான கும்பர்வாடா என்ற பெயரில் வசித்து வருகின்றனர். அங்கு மண்பாண்டங்களை சுடும் அடுப்புகள் இன்றைக்கும் ஏராளமான இருந்து கொண்டிருக்கிறது. அந்த மண்பாண்டங்களையும், தாராவி குடிசைகளையும் பார்க்கவே தினமும் நூற்றுக்கணக்கான வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் தாராவிக்கு வந்து செல்கின்றனர்.

தாராவி

வெளியிடங்களில் இருந்து வந்தவர்களின் புகலிடமாக மாறிய தாராவி படிப்படியாக புது வடிவம் பெற ஆரம்பித்தது. தமிழகத்தில் இருந்து முதல் முதலில் மும்பை வந்து தோல் பதனிடும் இஸ்லாமிய தொழிலாளர்கள் தாராவி கழிமுகப்பகுதியில் குடில்கள் அமைத்து தோல் பதனிடும் தொழிலை செய்ய ஆரம்பித்தனர்.

தாராவி

உத்தரபிரதேசத்தில் இருந்து எம்பிராய்டரி தொழிலாளர்கள், கலைஞர்கள் அதிக அளவில் தாராவியில் குடியேறினர். 20-வது நூற்றாண்டின் மத்தியில், அதாவது சுதந்திரத்திற்கு முன்பே தமிழகத்தின் திருநெல்வேலி மாவட்டத்தில் இருந்து கணிசமான மக்கள் பிழைப்பு தேடி மும்பை தாராவிக்கு வர ஆரம்பித்தனர். அவர்கள் மும்பையில், அன்றைய காலக்கட்டத்தில் அதிகாரம் செலுத்தி வந்த தமிழ் தாதாக்களின் துணையோடு தாராவி மற்றும் அதனையொட்டி இருக்கும் சயான் கோலிவாடா போன்ற பகுதியில் குடிசைகள் அமைத்து வாழ ஆரம்பித்தனர்.

மும்பை உள்ளாட்சி நிர்வாகம் தாராவியை குப்பை மற்றும் கழிவுகளை போடும் புறநகர் பகுதியாகவே 20-வது நூற்றாண்டின் மத்திய பகுதி வரை நினைத்துக்கொண்டிருந்தது. எனவேதான் வெளிமாநிலத்தில் இருந்து வந்தவர்கள் தாங்கள் நினைத்த இடத்தில் குடிசைகள் அமைத்து வாழ முடிந்தது. இதனை உள்ளாட்சி நிர்வாகம் கண்டுகொள்ளவே இல்லை. தாராவியில் உள்ளூர் தாதாக்கள் குறிப்பிட்ட இடங்களை வளைத்துப் போட்டுக்கொண்டு அதனை சில நூறு ரூபாய்களை வாங்கிக்கொண்டு நிலத்தை கூறு போட்டு விற்பனை செய்து கொண்டிருந்தனர்.

தாராவி

நிலத்தை விற்பனை செய்வதாக இருந்தாலும் சரி, சட்டவிரோத செயல்களை செய்வதாக இருந்தாலும் சரி. அதில் தமிழ் தாதாக்களும் முன்னிலையில் இருந்தனர். முதலில் ஒரு நிலத்தை அபகரித்து வைத்துக்கொண்டு அதற்கு வெளியில் ஒரு கட்டில் போட்டுக்கொண்டு அமர்ந்து கொள்வார்கள். அந்த காலக்கட்டத்தில் தாராவியில் தமிழர்களை கண்டாலே அனைவரிடமும் ஒரு வித அச்சம் இருந்தது. காரணம் தமிழ் தாதாக்கள் மும்பையில் அந்நேரம் ஆதிக்கம் செலுத்தி வந்தனர். யாராவது கேள்வி கேட்டால், அவ்வளவு தான். கேள்வி கேட்கவும் முடியாது. தாராவியை குப்பைத்தொட்டியாக உள்ளாட்சி நிர்வாகம் கருதியதால் யார் நிலத்தை அபகரித்தாலும் கண்டுகொள்ளாமல் இருந்தது. மராத்தியர்களே தமிழர்களை கண்டால் ஒதுங்கிக்கொள்ளும் நிலைதான் இருந்தது.

அதோடு தாராவியில் மக்கள் குடியேறும்போதே வடமாநிலத்தவர்கள் தனியாகவும், தமிழர்கள் தனியாகவும், குஜராத்தியர்கள் தனியாகவும் குடியேறினர். இன்றைக்கும் அப்படித்தான் தாராவிக்குள் மக்கள் தனித்தனியாக வசிக்கின்றனர். தாராவியில் தமிழர்களின் வளர்ச்சி அதிகரிக்க அதிகரிக்க மராத்தியர்களின் பார்வை தாராவியின் பக்கம் திரும்ப ஆரம்பித்தது. தாராவியை வெளிமாநிலத்தில் இருந்து வந்தவர்கள் ஒன்று சேர்ந்து உருவாக்கினர். அத்தாராவி இன்றைக்கு ஒட்டுமொத்த இந்திய இனங்களின் கலவையாக `மினி இந்தியா’வாக மாறி இருக்கிறது. மராத்தியர்களே தமிழ் தாதாக்களிடம் பணம் கொடுத்து நிலம் வாங்கி குடிசை கட்ட ஆரம்பித்தனர்.

அவ்வாறு தாராவியை ஆண்ட தமிழ் தாதாக்கள் யார் என்பது குறித்து அடுத்த பகுதியில்..!

தொடரும்..!

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.