திருப்பதி: திருப்பதி தேவஸ்தானத்திற்கு திண்டுக்கல் ஏ.ஆர். டெய்ரி நிறுவனம் விலங்கு கொழுப்பு, மீன் எண்ணெய் போன்றவற்றை கலப்படம் செய்த நெய்யை வழங்கியதாக திருமலை திருப்பதி தேவஸ்தான மார்க்கெட்டிங் பிரிவு பொதுமேலாளர் முரளி கிருஷ்ணா நேற்று திருப்பதி கிழக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அந்தப் புகாரில் கூறியிருப்ப தாவது: பத்து லட்சம் கிலோ தரமான நெய்யை சப்ளை செய்ய கடந்த மே மாதம் 15-ம் தேதி ஏ.ஆர். டெய்ரி நிறுவனத்துக்கு டெண்டர் மூலம் அனுமதி வழங்கப்பட்டது. இதையடுத்து ஜூன் 12, 20, 25 ஆகிய தேதிகளிலும், ஜூலை 6, 12 ஆகிய தேதிகளிலும் 4 டேங்கர் நெய்யை அந்நிறுவனம் அனுப்பி வைத்தது. இதில் முந்தைய ஜெகன் அரசு, ஜூன் மாதம் அனுப்பிய நெய்யை பரிசோதிக்காமல் உபயோகித்தது. இதனால் பக்தர்களிடம் இருந்துபல புகார்கள் வந்தன.
நிரூபணமானது: இதையடுத்து ஜூலை மாதம் வந்த நெய்யை அதிகாரிகள் என்டிடிபி.க்கு அனுப்பி பரிசோதனை செய்ததில், அதில் கலப்படம் இருப்பது நிரூபணம் ஆனது. இதைத்தொடர்ந்து ஜூலை 22, 23, 27 ஆகிய தேதிகளில் திண்டுக்கல் ஏ.ஆர். டெய்ரி நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இதற்கு ஆகஸ்ட் 4-ம் தேதி ஏ.ஆர். டெய்ரி நிறுவனம் சார்பில் பதில் அளிக்கப்பட்டது. அதில், எங்கள் நிறுவனம் எவ்வித கலப்படமும் செய்யவில்லை என தெரிவிக்கப்பட்டது.
ஆனால் கலப்பட நெய் என நிரூபணம் ஆகியிருப்பதால் தேவஸ்தான நிபந்தனைகளை மீறிய ஏ.ஆர். டெய்ரி நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த புகாரில் தெரிவிக்கப்பட்டது. இப்புகார் தொடர்பாக திருப்பதி கிழக்கு காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.