திருப்பதி லட்டு விவகாரம்: தவறு செய்தோருக்கு கடும் தண்டனை வழங்க சடகோப ராமானுஜ ஜீயர் வலியுறுத்தல்

ஸ்ரீவில்லிபுத்தூர்: “திருப்பதி லட்டு தயாரிக்கும் நெய்யில் மீன் எண்ணெய் மற்றும் மாட்டு கொழுப்பு கலந்த விவகாரத்தில் மத்திய அரசு தலையிட்டு, சம்பந்தப்பட்டவர்களை சட்டப்படி தண்டிக்க வேண்டும். மேலும் இனி இதுபோன்ற சம்பவம் நடக்காமல் இருக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ சடகோப ராமானுஜ ஜீயர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஸ்ரீவில்லிபுத்தூர் மணவாள மாமுனிகள் மடத்தின் 24 வது பீடாதிபதி ஶ்ரீ சடகோப ராமானுஜ ஜீயர் திருப்பதி லட்டு சர்ச்சை குறித்து வெளியிட்ட அறிக்கையில், “திருமலை திருப்பதி கோயில் லட்டு பிரசாதத்தில் மீன் எண்ணெய், மாட்டுக் கொழுப்பு கலந்துள்ளதாக மத்திய அரசு ஆய்வு செய்து ஊர்ஜிதப் படுத்தி உள்ளதாக செய்தித்தாளில் படித்தோம். புரட்டாசி மாதத்தில் வெளிவந்துள்ள இந்த தகவலால் உலகம் முழுவதிலும் உள்ள திருவேங்கடமுடையான் பக்தர்கள் மனம் மிகவும் புண்பட்டுள்ளது.

இந்த தவறை செய்தவர்களின் ஒப்பந்தத்தை ரத்து செய்து, கடுமையான தண்டனையை மத்திய அரசு வழங்க வேண்டும். திருப்பதி ஏழுமலையான் கோவிலைப் பற்றியும், இந்து கலாசாரத்தைப் பற்றியும் சில கரும்புள்ளிகள் யூடியூப்பிலும், வாட்ஸ் அப்பிலும் பகிர்ந்து வருகிறார்கள். அவரவர்கள் மதத்தை அவரவர் பின்பற்றினால் எந்தப் பிரச்சினையும் வராது. மத்திய அரசும், தமிழ்நாடு அரசும் உலகத்தில் இருக்கக்கூடிய எந்த மதத்தையும், கடவுளையும் இழிவாக யார் பேசினாலும் கடுமையான தண்டனை வழங்கச் சட்டம் கொண்டு வரவேண்டும்.

எங்கள் பெருமாளை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். எங்கள் கோவில் விஷயத்தை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். இதைப் பற்றி கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை. நாம் அனைவரும் சேர்ந்து திருவேங்கடமுடையானிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்வோம். இனி இது போன்ற சம்பவம் நடக்காமல் இருக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.