தேனி மாவட்டம், சின்னமனூர் அ.தி.மு.க நகரச் செயலாளர் பிச்சைக்கனி (38). இவர் தனது வீடு மற்றும் அலுவலகத்தில் மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசியதாக போலீஸாரிடம் புகார் அளித்திருந்தார். மாவட்ட எஸ்.பி சிவபிரசாத் நேரில் ஆய்வு செய்தார். சின்னமனூர் போலீஸார் தீவிரமாக விசாரித்து வந்தனர்.
பிச்சைக்கனி வீடு அருகே உள்ள வங்கி, கடைகளில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்த காட்சிகளை சேகரித்து விசாரித்தனர். அதில் சந்தேகத்திற்குரிய வகையில் இருந்த இருவரை கண்டறிந்து விசாரித்தனர். அப்போது அவர்கள் பிச்சைக்கனியின் ஆதரவாளர்கள் என்பது தெரியவந்தது.
சின்னமனூர் நகராட்சி 13 ஆவது வார்டு அ.தி.மு.க உறுப்பினர் உமாராணி மகன் வெங்கடேசனுக்கும், பிச்சைக்கனிக்கும் கட்சி பதவி பெறுவது தொடர்பான பிரச்னை இருந்திருக்கிறது. அண்மையில் கம்பத்தில் நடந்த அ.தி.மு.க பொதுக்கூட்டத்தில் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். வெங்கடேசன் மீது பழிபோடுவதற்காக தங்களை வைத்து பெட்ரோல் குண்டு வீச வைத்ததாக போலீஸாரிடம் ஒப்புதல் வாக்குமூலம் அளித்தனர்.
இதையடுத்து பிச்சைக்கனி மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த அவரின் வீட்டு காவலாளி மாரியப்பன், சதீஸ், முகேஸ், செல்வராஜ், பிரகாஷ், சிங், ராஜபாண்டி ஆகியோர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். மாரியப்பன், சதீஸ், முகேஸ், செல்வராஜ் ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தலைமறைவாக உள்ள பிச்சைக்கனி உள்ளிட்டோரை போலீஸார் தேடி வருகின்றனர்.