நாகர்கோவில்: கேரளாவில் நிபா வைரஸ் பாதிப்புகள் அதிகரித்து வருவதைத் தொடர்ந்து கன்னியாகுமரி வரும் கேரள சுற்றுலாப் பயணிகளுக்கு காய்ச்சல் பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.
கேரள மாநிலத்தில் நிபா வைரஸ் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் அங்கிருந்து தமிழகத்தின் அண்டை மாவட்டமான குமரிக்கு வருவோரை களியக்காவிளை சோதனைச் சாவடியில் சுகாதாரத் துறையினர் பரிசோதனை செய்து வருகின்றனர். இந்நிலையில், கேரளாவில் இருந்து சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு வரும் கேரள சுற்றுலாப் பயணிகள் மூலம் நிபா வைரஸ் பரவாமல் தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
குமரி மாவட்ட ஆட்சியர் அழகு மீனா உத்தரவின்பேரில் மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் மீனாட்சி மேற்பார்வையில் கன்னியாகுமரிக்கு வரும் சுற்றுலாப் பயணிகளிடம் நிபா வைரஸ் பரவலை தடுக்கும் பொருட்டு காய்ச்சல் பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது. கன்னியாகுமரி நகர பகுதியின் நுழைவு வாயிலான விவேகானந்தபுரம் சந்திப்பில் உள்ள டோல்கேட் பகுதியில் இந்த சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
கேரள பதிவெண் கொண்ட கார் மற்றும் பிற வாகனங்களில் கன்னியாகுமரிக்கு சுற்றுலா வரும் சுற்றுலாப் பயணிகளிடமும், காய்ச்சல் கண்டுபிடிக்கும் தெர்மா மீட்டர் கருவி மூலம் சுகாதாரத் துறை பணியாளர்கள் இந்த சோதனையை நடத்தி வருகிறார்கள். தினமும் இரண்டு ஷிப்ட்களாக சுகாதாரப் பணியாளர்கள் இந்தப் பரிசோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். ஓட்டல், தங்கும் விடுதிகளிலும் காய்ச்சல் அறிகுறியுடன் வரும் வெளியூர் மற்றும் கேரள சுற்றுலாப் பயணிகள் குறித்து தெரிவிக்கவும் சுகாதாரத் துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
இதுவரை கேரளாவில் இருந்து கன்னியாகுமரிக்கு சுற்றுலா வந்த 800-க்கும் மேற்பட்ட வாகனங்களை நிறுத்தி அதில் வந்த நபர்களிடம் இந்த பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. அதன்படி இதுவரை 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கேரளா சுற்றுலாப் பயணிகளிடம் காய்ச்சல் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து இந்த பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும் எனவும் யாருக்காவது காய்ச்சல் அறிகுறி தென்பட்டால் அந்த சுற்றுலா வாகனங்கள் திருப்பி அனுப்பப்படும் எனவும் சுகாதாரத் துறையினர் தெரிவித்தனர்.