புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடி சக்திவாய்ந்தவர்தான். ஆனால் அவர் ஒன்றும் கடவுள் அல்ல என்று டெல்லி சட்டப்பேரவையில் அரவிந்த் கேஜ்ரிவால் தெரிவித்தார்.
டெல்லி முன்னாள் முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கேஜ்ரிவால் தனது ராஜினாமாவுக்குப் பிறகு முதல் முறையாக டெல்லி சட்டப்பேரவையில் உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது: “என்னையும் மணிஷ் சிசோடியாவையும் இங்கு பார்ப்பது எதிர்கட்சியில் இருக்கும் என்னுடைய நண்பர்களுக்கு சோகமாக இருக்கும்.
நான் எப்போதும் சொல்வதுதான். பிரதமர் நரேந்திர மோடி சக்திவாய்ந்தவர்தான். ஆனால் அவர் ஒன்றும் கடவுள் அல்ல. கடவுள் எங்களுடன் இருக்கிறார். உங்கள் கட்சியிலிருந்து இரண்டு பேரை சிறையில் அடைத்து பாருங்கள், உங்கள் கட்சியே உடைந்து விடும்.
ஜாமீன் கூட கிடைக்கமுடியாத அளவுக்கு என் மீது கடுமையான சட்டங்களை அவர்கள் பயன்படுத்தினார்கள். நான் உச்சநீதிமன்றத்துக்கு இந்த தருணத்தில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியதால்தான் நான் இந்த இடத்தில் நின்றுகொண்டிருக்கிறேன். சிறையிலிருந்து வெளியான பிறகு யாரும் சொல்லாமல் நானே என்னுடைய பதவியை ராஜினாமா செய்தேன். கேஜ்ரிவால் நேர்மையானவன் என்று டெல்லி மக்கள் கருதினால் அவர்கள் எனக்கு வாக்களித்து மீண்டும் என்னை பதவியில் அமர்த்தட்டும். இல்லையென்றால் எனக்கு வாக்களிக்க வேண்டாம்” இவ்வாறு கேஜ்ரிவால் தெரிவித்தார்.
சட்டப்பேரவையில் முன்னதாக முதலாம் எண் இருக்கையில் அமர்ந்திருந்த கேஜ்ரிவால் தற்போது 41வது இடத்தில் அமர்ந்திருக்கிறார். முன்பு 19வது இடத்தில் அமர்ந்திருந்த ஆதிஷி தற்போது முதல் இடத்தில் இருக்கிறார்.