புதுடெல்லி: இந்தியாவும் சீனாவும் போட்டி யாளர்கள் அல்ல என்றும் நட்பு நாடுகள் என்றும் பிரதமர் நரேந்திர மோடி, அதிபர் ஜி ஜின் பிங் இடையே ஒருமித்த கருத்து ஏற்பட்டுள்ளதாக இந்தியாவுக்கான சீன தூதர் தெரிவித்துள்ளார்.
கிழக்கு லடாக் எல்லையில் கடந்த 2020-ம் ஆண்டு மே மாதம் இந்திய மற்றும் சீன ராணுவம் இடையே மோதல் ஏற்பட்டது. இதன் தொடர்ச்சியாக அதே ஆண்டு ஜூன் 15-ல் கைகலப்பு ஏற்பட்டதில் இருதரப்பிலும் வீரர்கள் உயிரிழந்தனர். இதையடுத்து இரு நாடுகளுக்கிடையே போர் பதற்றம் அதிகரித்தது. எல்லையில் இரு நாட்டு ராணுவமும் குவிக்கப்பட்டது. எனினும், இருதரப்பு ராணுவ உயர் அதிகாரிகள் மட்டத்தில் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இதனால் போர் பதற்றம் தணிந்தது. படைகள் படிப்படியாக விலக்கிக் கொள்ளப்பட்டன. எனினும், இருதரப்பு உறவில் கடந்த 4 ஆண்டுகளாக விரிசல் நீடிக்கிறது.
இந்நிலையில், அமெரிக்கா சென்றுள்ள மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் நேற்று முன்தினம் கூறும்போது, “இந்தியா, சீனா இடையிலான எல்லை பிரச்சினை தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. குறிப்பாக, கிழக்கு லடாக் எல்லை பகுதியில் குவிக்கப்பட்டுள்ள இருதரப்பு ராணுவ வீரர்களை திரும்பப் பெறும் விவகாரத்தில் 75% முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. ஆசிய பிராந்தியத்திலும் உலக அளவிலும் அமைதியை நிலைநாட்ட இந்தியா, சீனா இடையே சுமுக உறவு அவசியமாகிறது” என்றார்.
இந்த சூழலில் இந்தியாவுக்கான சீன தூதர் ஜு பீஹாங் நேற்று கூறியதாவது: சீனாவும் இந்தியாவும் போட்டியாளர்கள் அல்ல, மாறாக கூட்டுறவு மற்றும் வளர்ச்சி வாய்ப்புகளில் நட்பு நாடுகள் என அதிபர் ஜி ஜின்பிங் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி இடையே ஒருமித்த கருத்து ஏற்பட்டுள்ளது. இது எங்களுடைய இருதரப்பு உறவில் தெளிவான பாதையை காட்டுவதாக உள்ளது. இரு தலைவர்களும் எட்டிய முக்கியமான ஒருமித்த கருத்தை நாம் உறுதியாக அமல்படுத்த வேண்டும். ஒருவருக்கொருவர் வளர்ச்சி மற்றும் உத்தி நோக்கங்களை சரியாக பார்க்க வேண்டும். இரு நாடுகளின் நலனிலும் பரஸ்பரம் அக்கறை செலுத்த வேண்டும்.
கருத்து வேறுபாடு இயல்பு: பக்கத்து நாடுகளுடன் அவ்வப்போது கருத்து வேறுபாடுகள் ஏற்படுவது இயல்பானதுதான். அவற்றை சரியாக கையாள்கிறோமா என்பதுதான் முக்கியம். சீனாவும் இந்தியாவும் தொன்மையான நாகரிகங்களைக் கொண்டவை. கருத்து வேறுபாடுகளை முறையாக கையாளவும் இருதரப்பும் ஏற்றுக் கொள்ளக்கூடிய தீர்வை காணவும் எங்களுக்கு போதுமான திறன் இருக்கிறது என்று நம்புகிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.