பாட்னா: பிஹாரில் புதன்கிழமை நடைபெற்ற ‘ஜிவித்புத்ரிகா’ திருவிழாவின்போது வெவ்வேறு சம்பவங்களில் ஆறுகள் மற்றும் குளங்களில் புனித நீராடும்போது 37 குழந்தைகள் உள்பட 43 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்ததாகவும், மூன்று பேரை காணவில்லை என்றும் மாநில அரசு இன்று (செப்.26) தெரிவித்துள்ளது.
அம்மாக்கள் தங்கள் குழந்தைகளின் நலனுக்காக விரதம் இருந்து கொண்டாடும் பண்டிகை ஜிவித்புத்ரிகா. இந்த பண்டிகை பிஹார், ஜார்க்கண்ட், உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களிலும், நேபாள நாட்டிலும் கொண்டாடப்படுகிறது. அஷ்டமி திதியை முன்னிட்டு இந்தப் பண்டிகை நேற்று கொண்டாடப்பட்டது. இதற்காக அம்மாக்கள் தங்கள் குழந்தைகளுடன் ஆறுகள் மற்றும் குளங்களில் புனித நீராடுவது வழக்கம். அவ்வாறு புனித நீராடியபோது பிஹாரில் நேற்று தனித்தனி சம்பவங்களில் 37 குழந்தைகள் உட்பட மொத்தம் 43 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். மூன்று பேர் காணாமல் போயுள்ளனர். பிஹார் அரசு இதனை இன்று தெரிவித்துள்ளது.
கிழக்கு மற்றும் மேற்கு சம்பரான், நாளந்தா, அவுரங்காபாத், கைமூர், பக்சர், சிவான், ரோஹ்தாஸ், சரண், பாட்னா, வைஷாலி, முசாபர்பூர், சமஸ்திபூர், கோபால்கஞ்ச் மற்றும் அர்வால் மாவட்டங்களில் இந்த சம்பவங்கள் நடந்துள்ளன. “இதுவரை மொத்தம் 43 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. மேலும், தேடுதல் பணி நடைபெற்று வருகிறது” என்று பேரிடர் மேலாண்மைத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.4 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என முதல்வர் நிதிஷ் குமார் அறிவித்துள்ளார். நிவாரணம் வழங்குவதற்கான செயல்முறை தொடங்கியுள்ள நிலையில், எட்டு பேரின் குடும்ப உறுப்பினர்கள் அதைப் பெற்றுள்ளதாக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.