மதுரை: அடைக்கப்பட்ட கால்வாய்… குடியிருப்பு பகுதியில் தேங்கும் கழிவுநீர்; கவனிக்குமா பேரூராட்சி?

மதுரை மாவட்டம், தே.கல்லுப்பட்டி பேரூராட்சியில் கோகுல் நகர் தெருப் பகுதியில் சுமார் 100-க்கும் மேற்பட்ட வீடுகள் இருக்கின்றன. இந்தப் பகுதியில் கடந்த சில மாதங்களாகவே கழிவு நீர் கால்வாய் செல்லும் வழி அடைக்கப்பட்டிருப்பதால், கழிவு நீர் தேங்கிய நிலையில் உள்ளது. சில மாதங்களுக்கு முன்புவரை இத்தெருவில் உள்ள கழிவுநீர்க் கால்வாய், தெருவைத் தாண்டி பக்கத்திலுள்ள ஒடைக்கு அருகில் திருப்பப்பட்டிருந்தது. இதற்கு இடைப்பட்ட பகுதியில் விவசாய நிலங்களும் இருக்கின்றன.

மதுரை – கோகுல் நகர் தெரு

இந்த நிலத்தின் உரிமையாளர்கள், கழிவு நீர் தங்கள் நிலத்தின் ஓரத்தின் செல்வதால் மழைக்காலங்களில் கழிவுநீர் தங்கள் நிலத்துக்குள் வந்துவிடுவதாகக் கழிவு நீர் செல்லும் வழியை அடைத்துவிட்டனர். மேலும் பக்கத்து தெருக்களின் கழிவு நீரும் இந்தத் தெருவின் கழிவுநீர் கால்வாய் வழியாகவே வந்தது. தற்போது, பக்கத்து தெருக்களிலிருந்து வரும் கழிவு நீர், வேறு கழிவுநீர் கால்வாய் வழியாகப் பக்கத்திலுள்ள பண்டாரங்குளத்துக்கு (கழிவுநீர் குளம்) மாற்றிவிடப்பட்டாகிவிட்டது.

மதுரை – கோகுல் நகர் தெரு

ஆனால், கோகுல் நகர் தெருவில் கழிவுநீர் கால்வாய் அடைக்கப்பட்டிருப்பதால் இந்தத் தெருவிலுள்ள வீடுகளிலிருந்து வெளியேறும் கழிவு நீர் செல்ல வழியில்லாமல் கால்வாயிலேயே தேங்கி விடுகிறது. குறிப்பாக, மழைக்காலங்களில் கழிவுநீர் சாலைகளுக்குள் வந்து விடுகிறது. அதோடு, வீடுகளுக்கு அருகிலேயே கால்வாயில் கழிவுநீர் தேங்குவதால் ஈ மற்றும் கொசுக்களின் தொல்லை மாலை மற்றும் இரவு நேரங்களில் மிகவும் அதிகமாக இருக்கிறது. குடியிருப்புவாசிகளும் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். இவ்வாறிருக்க, தேங்கியிருக்கும் கழிவுநீரை அகற்றி வேறு இடத்துக்குச் செல்லும் வகையில் வடிகால் வசதி ஏற்படுத்தித் தருமாறு பேரூராட்சிக்கு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்திருக்கின்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.