மும்பை,
மராட்டிய மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் பெய்த கனமழையின் காரணமாக பிரதான சாலைகள், குடியிருப்பு பகுதிகள் உள்ளிட்ட பல இடங்களில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. கனமழையால் மும்பை, புனே நகரங்களில் பஸ், ரெயில் மற்றும் விமான போக்குவரத்து சேவைகள் பாதிக்கப்பட்டன.
இதனிடையே, பிரதமர் மோடி இன்று புனேவுக்கு பயணம் செய்ய இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. புனேவில் பிரதமர் மோடி இன்று புதிய வழித்தடத்தில் மெட்ரோ ரெயில் சேவையை தொடங்கி வைக்க உள்ளதாகவும், சுமார் ரூ.20,900 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்டங்களுக்கு அவர் அடிக்கல் நாட்ட உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், புனேவில் மேலும் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளதால், பிரதமர் மோடியின் புனே பயணம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. புனே மாவட்டத்திற்கு இந்திய வானிலை ஆய்வு மையம் சார்பில் கனமழைக்கான ஆரஞ்ச் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.