15.09.2024 அன்று நடைபெற்ற ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் சில கேள்விகள் முன்னரே வெளிவந்துள்ளதாக தெரியவந்ததன் மூலம் ஏற்பட்டுள்ள சிக்கல் நிலை தொடர்பில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய இன்று (26.09.2024) கல்வி அமைச்சின் அதிகாரிகளுடன் விசேட கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டார்.
அதன்படி பின்வரும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
இலங்கைப் பரீட்சைகள் திணைக்களம் பூர்வாங்க உள்ளக விசாரணையை நடத்தி, இச் சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் அதிகாரிகள் குறித்து குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு அறிக்கை சமர்ப்பித்துள்ளது.
அதற்கமைய, குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதுடன் சந்தேக நபர் ஒருவரைக் கைது செய்துள்ளனர். விசாரணைகள் மிக விரைவில் நிறைவடையும் என குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
அதன் அடிப்படையில் குற்றவாளிகள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.
அத்துடன், பரீட்சை மதிப்பீட்டு முறை தொடர்பில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிபுணர்கள் அடங்கிய சுயாதீன குழுவொன்றை நியமித்து விரைவில் பரிந்துரைகளை பெற்றுக்கொள்ளுமாறு பிரதமர் பணிப்புரை விடுத்துள்ளார்.
இந்த விவகாரம் பெற்றோர்கள் மற்றும் மாணவர்களிற்கு மிகவும் உணர்வுபூர்வமான பிரச்சினை என்பதால், பெறப்பட்ட அறிக்கைகளின்படி, குழந்தைகளுக்கு எந்த அழுத்தமும் அநீதியும் ஏற்படாமல், அவர்களின் நலன்களைப் பாதுகாக்கும் வகையில், தகுந்த நடவடிக்கைகளை மிக விரைவாக எடுக்க பிரதமர் ஏற்கனவே முறையான அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்.