பெங்களூரு: கர்நாடக முதல்வர் சித்தராமையா மீதான நில முறைகேடு வழக்கை 3 மாதங்களில் விசாரித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு லோக் ஆயுக்தாவுக்கு பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கர்நாடக முதல்வர் சித்தராமையாவின் மனைவி பார்வதியிடம் கையகப்படுத்திய நிலத்துக்கு மாற்றாக மைசூரு நகர்ப்புற மேம்பாட்டு கழகம், 14 வீட்டு மனைகளை ஒதுக்கியது. இந்த நிலத்தின் மதிப்பு கையகப்படுத்திய நிலத்தின் மதிப்பைவிட பன்மடங்கு அதிகமாக இருந்ததால் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது. எனவே சித்தராமையா மீது வழக்கு பதிவு செய்து விசாரிக்குமாறு ஆளுநர் தாவர்சந்த் கெலாட் அனுமதி அளித்தார். இதை எதிர்த்து கர்நாடக உயர் நீதிமன்றத்தில் சித்தராமையா வழக்கு தொடர்ந்தார். அதனை விசாரித்த நீதிமன்றம், இந்த வழக்கின் விசாரணைக்கு தடை விதிக்க முடியாது எனக்கூறி, சித்தராமையாவின் மனுவை தள்ளுபடி செய்தது.
இதையடுத்து, பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் நேற்று சித்தராமையாவுக்கு எதிரான வழக்கை விசாரித்தது. அப்போது, ”சித்தராமையா மீதான நில முறைகேடு வழக்கு குறித்து லோக் ஆயுக்தாவின் மைசூரு பிரிவு அதிகாரிகள் விசாரிக்க வேண்டும். 3 மாதங்களுக்குள் விசாரணையை முடித்து அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும்” என நீதிபதி உத்தரவிட்டார். இந்த உத்தரவால் சித்தராமையாவின் முதல்வர் பதவிக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. சித்தராமையா முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என பாஜக, மஜத ஆகிய எதிர்க்கட்சியினர் வலியுறுத்தி உள்ளனர்.
ராஜினாமா செய்ய மாட்டேன்: இதுகுறித்து முதல்வர் சித்தராமையா கூறும்போது, ”இந்த வழக்கை சட்டப்படி எதிர்கொள்ள தயாராக இருக்கிறேன். எனக்கு எந்த விசாரணையை கண்டும் பயம் இல்லை. காங்கிரஸ் மேலிடமும் எம்எல்ஏக்களும் எனக்கு ஆதரவாக இருப்பதால் முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய மாட்டேன்” என்றார்.