மும்பை: மும்பையில் நேற்று (புதன்கிழமை) கனமழை பெய்து வருகிறது. மழை தொடர்பான சம்பவத்தில் ஒருவர் பலியானார். இன்றும் கனமழை தொடரும் என்பதால் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து மும்பை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது. தானே, பால்கர், புனே, பிம்ப்ரி – சின்ச்வாட் பகுதிகளுக்கு உட்பட்ட பள்ளிகளுக்கு இன்று (வியாழக்கிழமை) பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இது மட்டுமல்லாது மழை நீர் தேங்கியதால் ஆங்காங்கே புறநகர் ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. மும்பை விமான நிலையத்தில் தரையிறங்க வேண்டிய 14 விமானங்கள் திருப்பிவிடப்பட்டுள்ளன. சாலைப் போக்குவரத்தைப் பொறுத்தவரை இன்று (வியாழக்கிழமை) காலை 8 மணிக்குப் பின்னர் சற்று சீரடைந்துள்ளது.
இருப்பினும், மும்பை மாநகராட்சியும், காவல்துறையும் மக்கள் அத்தியாவசியத் தேவைகள் இன்றி வெளியே வர வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளது.
இதற்கிடையில், இந்திய வானிலை ஆய்வு மையம் மும்பைக்கு இன்று காலை 8.30 மணி வரையில் ரெட் அலர்ட் விடுத்திருந்தது. இதனையொட்டி மும்பை மாநகராட்சி ஆணையர் பூஷண் கக்ரானி கட்டுப்பாட்டு அறைகளை அமைத்து மழை தொடர்பான பிரச்சினைகளுக்கு உடனுக்குடன் தீர்வு காணும்படி துணை ஆணையர்கள், செயல் பொறியாளர்களுக்கு உத்தரவிட்டிருந்தார்.
மேலும் வரும் அக்டோபர் 1 ஆம் தேதி வரை மும்பையில் மழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று காலை 8.30-க்குப் பின்னர் மும்பைக்கு ஆரஞ்சு அலர்ட்டும், தானே, பால்கர், ராய்கட் பகுதிகளுக்கு ரெட் அலர்ட்டும் விடுக்கப்பட்டுள்ளது.
தென் மேற்கு பருவமழை விலகுதல் ஒரு வாரம் பிந்தியுள்ளதால் மும்பையில் கனமழை கொட்டித் தீர்த்தாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நேற்று (புதன்கிழமை) மாலை மும்பையின் பல்வேறு பகுதிகளிலும் 100 மில்லி மீட்டருக்கும் மேல் மழை பெய்தது. இதில் அந்தேரியில் நிரம்பி வழிந்த கால்வாயில் மூழ்கி பெண் ஒருவர் உயிரிழந்தார். அதிகபட்சமாக கிழக்கு புறநகர்ப் பகுதிகளில் சராசரியாக 169.85 மில்லி மீட்டர் மழையும், மேற்கு புறநகர்ப் பகுதிகளில் 104.17 மில்லி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக இன்று காலை 8.30 மணி நிலவரப்படி மும்பை சான்டா க்ரூஸ் பகுதியில் 170 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.