கங்கனா ரனாவத் எழுதி, இயக்கி, நடித்திருக்கும் திரைப்படம் ‘எமர்ஜென்சி’.
படத்தில் இந்திரா காந்தியாக நடித்திருக்கிறார் கங்கனா. எமர்ஜென்சி சமயத்தில் நிகழ்ந்த விஷயங்களை மையப்படுத்தி உருவாகியிருக்கிறது இத்திரைப்படம். செப்டம்பர் 6-ம் தேதி இத்திரைப்படம் வெளியாவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், சீக்கியர்களை தவறாக சித்திரித்துள்ளதாகக் கூறி சீக்கிய அமைப்பினர் இத்திரைப்படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். அதன் பிறகு தணிக்கை குழு பரிந்துரைத்த சில காட்சிகளை நீக்காததால் தணிக்கை சான்றிதழ் கிடைக்கவில்லை. அதனால் இத்திரைப்படத்தின் ரிலீஸ் தள்ளிப்போனது.
தணிக்கை குழு தணிக்கை சான்றிதழைக் கொடுக்காமல் படத்தின் ரிலீஸுக்கும் முட்டுக்கட்டை போடுவதாகவும் குற்றம்சாட்டியிருந்தார் கங்கனா ரனாவத். கடந்த வாரம் இத்திரைப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஜீ என்டர்டெயிமென்ட், ஹரியனா மாநிலத்தின் சட்டமன்றத் தேர்தல் போன்ற அரசியல் காரணங்களால் இத்திரைப்படத்திற்கான தணிக்கை சான்றிதழை நிலுவையில் வைத்துள்ளதாக குற்றம்சாட்டியிருந்தது. அதன் பிறகு தயாரிப்பு நிறுவனம் மும்பை உயர் நீதிமன்றத்தை நாடியது. நீதிமன்றமும் படத்திற்கு தணிக்கை சான்றிதழ் கொடுக்காமல் தாமதப்படுத்தும் விவகாரத்திற்கு கடுமையாக சாடியது. அதன் பிறகு செப்டம்பர் 25-க்குள் முடிவெடுக்குமாறு உத்தரவிட்டிருந்தது.
அதன் பிறகு நீதிமன்றத்தில் ஆஜரான தணிக்கை குழுவின் வழக்கறிஞர் அபினவ் சந்திரசூட், “தணிக்கை குழு சான்றிதழைக் கொடுப்பதற்கு முன் படத்தில் சில கட்களை பரிந்துரைத்திருக்கிறது.” எனக் கூறினார். தயாரிப்பு நிறுவனம் சார்பாக ஆஜரான மூத்த வழக்கறிஞர் சரண் ஜகிதியாணி, “தணிக்கை குழு சொன்ன கட்களை செய்யலாமா ? வேண்டாமா? என முடிவெடுப்பதற்கு சில கால அவகாசம் தேவை” எனக் கேட்டிருக்கிறார். இதன் பிறகு வழக்கின் அடுத்த விசாரணையை செப்டம்பர் 30-ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.