சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது ‘லப்பர் பந்து’ திரைப்படம். இந்தத் திரைப்படத்தின் முக்கிய பலமே அதன் கதாபாத்திரங்கள்தாம்.
படத்தில் இடம்பெற்ற காத்தாடி, கொளஞ்சி, கருப்பையா, யசோதா என அத்தனை குணச்சித்திர கதாபாத்திரங்களும் கதையில் தாக்கத்தை ஏற்படுத்தியது. இப்படியான முக்கிய கதாபாத்திரங்களில் ஒன்றான காத்தாடியாக நடித்த பால சரவணனைச் சந்தித்தோம். நிஜத்திலும் காத்தாடி பாத்திரத்தைப்போல அவ்வளவு துடிப்பாக இருந்தார் பால சரவணன். படபிடிப்பு தளத்தில் பரபரப்பாக இருந்தவரைச் சந்தித்துப் பேசினோம்.
இயக்குநர் வெற்றி மாறன் படக்குழுவை அழைத்துப் பாராட்டியிருந்தாரு; உங்க கதாபாத்திரம் பத்தி அவர் என்ன சொன்னார்?
ஆமா, நல்ல விதமாக பாராட்டினார். ‘ஜெராக்ஸ் கடை காட்சியும் உங்களுடைய காமெடி டிராக்கும் ரொம்ப நல்லா இருந்தது தம்பி. ஒரு காமெடி கதாபாத்திரமாகவும், குணச்சித்திர கதாபாத்திரமாகவும் ரொம்ப நல்லா பண்ணியிருந்தீங்க’ன்னு பாராட்டினார். இந்தப் படத்தின் மூலமாக அடைஞ்ச மகிழ்ச்சியை வார்த்தைகளால் விவரிக்க முடியாது.
`காத்தாடி’ கதாபாத்திரம் உங்ககிட்ட வந்தது எப்படி?
நண்பர் ஒருத்தர் மூலமாகத்தான் இயக்குநர் தமிழரசன் பச்சமுத்துவை எனக்குத் தெரியும். அப்புறம் கதையை சொல்லும்போதே ‘நீங்க கிரிக்கெட் விளையாடுவீங்கன்னு தெரியும். ஆனா இந்த படத்துல நீங்க கிரிக்கெட் விளையாடமாட்டீங்க’ன்னு நகைச்சுவையாகச் சொல்லிதான் இந்தக் கதையைச் சொன்னாரு. முழு கதையை சொல்லி முடிச்சதும் நான் இயக்குநரைக் கட்டிப் பிடிச்சிட்டேன். நான் படத்துல கிரிக்கெட் விளையாடுற ‘அடேங்கப்பா 11’ல விளையாடிருந்தால்கூட இந்தளவுக்கு நான் சந்தோஷப்பட்டிருக்க மாட்டேன். இயக்குநர் எனக்கான காட்சிகளை ரொம்ப அற்புதமாக அமைச்சிருந்தார்.
படத்துல முக்கியமான அரசியல் வசனத்தை நீங்கப் பேசியிருந்தீங்க. எந்தளவுக்கு பொறுப்பாக அந்தக் காட்சியைக் கையாண்டீங்க?
ஆமா… இயக்குநரோட நிலைப்பாடு அதுதான். என்னுடைய நிலைப்பாடும் அதுதான். சமத்துவம்தான் என்னுடைய நிலைப்பாடு. அந்த சமத்துவத்தை நம்ம வீட்டுல இருந்து தொடங்கணும். அந்த அரசியல் தெளிவு இயக்குநருக்கு மிகச் சிறப்பாக இருக்கு. நாங்க மற்ற நேரங்கள்ல சமத்துவத்தைப் பற்றி நிறைய விஷயங்கள் பேசுவோம். படத்துல திணிக்காமல் அதை எளிய முறைல சொல்லணும்னு இயக்குநர் விரும்பினாரு. நானும் சமத்துவம் தொடர்பான பதிவுகளை பதிவிட்டுட்டு வர்றேன்.
படத்துல மோதல் புள்ளி உங்ககிட்ட இருந்து தொடங்குச்சு. அதை நீங்க கவனிச்சு பண்ணுனீங்களா?
ஆமா, படத்துல காத்தாடியும் கொளஞ்சியும் அமைதியாக இருந்திருந்தால் பிரச்னையே வந்திருக்காது. இயக்குநரும் ‘படத்துல உங்களாலதான் வார்த்தைப்போர் ஆரம்பிக்கும்’னு என்கிட்ட ஆரம்பத்திலேயே சொல்லிட்டாரு. இந்த படத்தோட பெரிய பலமே துணை கதாபாத்திரங்கள்தாம். அத்தனை கதாபாத்திரங்களுக்கும் படத்துல ஸ்பேஸ் இருக்கும். அதுனாலதான் படம் முடிஞ்சதுக்குப் பிறகும் அனைவரோட நினைவுல இருக்காங்க.
படத்துல வேற எந்த கதாபாத்திரம் உங்களுக்கு ரொம்பப் பிடிச்சிருந்தது?
படத்துல ‘காத்தாடி’ கதாபாத்திரத்தைத் தாண்டி அன்பு, கெத்து, கொளஞ்சி, கருப்பையா, வெங்கடேஷ் அத்தனை கதாபாத்திரங்களும் ஃபேவரைட்தான். ஆனா, அசோதை கதாபாத்திரம் எனக்கு இன்னும் ரொம்ப ஃபேவரைட். அந்தக் கதாபாத்திரம்தான் சுதந்திரத்தோட உச்சம். நிறையப் பேர் என்னுடைய வீட்டுப் பெண்களுக்கு நான் சுதந்திரம் கொடுக்கிறேன்னு சொல்வாங்க. இந்த வார்த்தை மிகப்பெரிய வன்முறை. அவங்களுக்கு அவங்களோட சுந்திரத்தை எப்படி பயன்படுத்திக்கணும்னு தெரியும். அதை அசோதை கதாபாத்திரம் மூலமாக அற்புதமாக இயக்குநர் சொல்லியிருப்பாரு. ஒரு ஆளுமையான கதாபாத்திரம்தான் அசோதை.
கிரிக்கெட்டராக உங்களுடைய புகைப்படங்கள் நிறைய பார்த்திருக்கோம். கிரிக்கெட் உங்களுடைய வாழ்க்கைல எந்தளவுக்கு முக்கியமாக இருந்திருக்கு?
எங்க அப்பாவுக்கு கிரிக்கெட் ரொம்ப ப்ரியம். எங்க ஊர்ல இருக்கிற ஒரு குழுவுக்கு எங்க அப்பா நிறைய பண்ணுவாரு. டொனேஷன் கொடுப்பாரு. இப்போ ‘லப்பர் பந்து’ படத்தைப் பார்த்துட்டு அந்த கிரிக்கெட் குழுவுல இருந்து பழனினு ஒரு அண்ணன் கால் பண்ணி ‘படத்தை எல்லோரும் கைதட்டி சிரிச்சு, ரசிச்சாங்க. ஆனா, நான் படம் பார்த்து அழுதுட்டேன். படத்துல வர்ற கருப்பையா கதாபாத்திரம்தான் உன்னுடைய அப்பா’னு சொன்னாரு. அவர் இதை சொன்னதும் எனக்கு ரொம்ப நெகிழ்ச்சியாக இருந்திருக்கு. ‘கெத்து’ கதாபாத்திரம் மாதிரி எங்க ஊர்ல அண்ணங்கள் இருப்பாங்க. அவங்கதான் என்னை கிரிக்கெட் விளையாட கூடிட்டு போவாங்க. முதல்ல நான் விக்கெட் கீப்பர் + ஓபனிங் பேட்ஸ்மேன். கல்லூரி காலம் வரைக்கும் இப்படிதான் விளையாண்டேன். வயசாகி தொப்பை வந்ததும் அனைவரும் கையில எடுக்குற யுக்தி ‘ஆஃப் ஸ்பின். (சிரித்துக் கொண்டே) நான் இப்போ ஆஃப் ஸ்பின்னர்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…