புதுடெல்லி: அசாமின் பல்வேறு பகுதிகளில் ஐஇடி வெடிகுண்டுகள் வைத்த வழக்கில் தொடர்புடைய யுனைட்டட் லிபரேஷன் ஃப்ரண்ட் ஆஃப் அசோம் – இன்டிப்பெண்டன்ட் (உல்ஃபா – ஐ) -ன் முக்கிய குற்றவாளியை தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) கைது செய்துள்ளது.
கிரிஷ் பருவா என்கிற கவுதம் பருவா என்ற அந்த நபர் பெங்களூருவின் புறநகர் பகுதியில் பதுங்கியிருந்த போது என்ஐஏ அவரைக் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து என்ஐஏ வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்தியாவின் சுதந்திர தின கொண்டாட்டங்களுக்கு எதிராக ஆயுதமேந்திய போராட்டத்தின் ஒரு பகுதியாக தடைசெய்யப்பட்ட தீவிரவாத அமைப்பான உல்ஃபா -ஐ அமைப்பு அசாம் முழுவதும் வெடிகுண்டு வைத்தது தொடர்பாக செப்டம்பர் மாதம் என்ஐஏ வழக்கு பதிவு செய்திருந்ததது.
குற்றம்சாட்டப்பட்டிருப்பவர் உல்ஃபா -ஐ அமைப்பின் அங்கமாக இருந்தார். அவர் அமைப்பின் உயர் மட்ட தலைமையின் உத்தரவின் பேரில் அசாமின் வடக்கு லக்கிம்பூர் மாவட்டத்தின் பல பகுதிகளில் ஐஇடி வெடிகுண்டுகளை வைத்துள்ளார். இந்த சந்தகே நபர் பெங்களூருவில் பதுங்கியிருந்த நிலையில், செப்.25ம் தேதி கைது செய்யப்பட்டு, அங்குள்ள என்ஐஏ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
அதனைத் தொடர்ந்து நீதிமன்றம் ட்ரான்சிட் ரிமாண்ட் மற்றும் அவரை அசாமின் குவாஹாட்டியில் உள்ள என்ஐஏ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கு உத்தரவிட்டது. இந்த வழக்கு குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.