அரசியல் பழிவாங்கப்பட்ட முன்னாள் ஆட்சியரை வட மாகாண ஆளுநராக்கிய இலங்கை அதிபர் திசாநாயக்க!

ராமேசுவரம்: அரசியல் ரீதியாக பழிவாங்கப்பட்ட முன்னாள் யாழ்ப்பாணம் மாவட்ட ஆட்சியரான வேதநாயகனை, இலங்கையின் வட மாகாணத்தின் ஆளுநராக இலங்கையின் புதிய அதிபரான அநுர குமார திசாநாயக்க நியமனம் செய்துள்ளது, வட மாகாண மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

இலங்கையில் தமிழர்கள் அதிகம் வாழும் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார், வவுனியா, முல்லைத்தீவு ஆகிய ஐந்து மாவட்டங்கள் அடங்கிய பகுதி வடக்கு மாகாணம் ஆகும். வடமாகாண சபை என்பது இலங்கையின் வடக்கு மாகாணத்துக்கான சட்டஉருவாக்க அவை ஆகும். 2007ம் ஆண்டு வடமாகாண சபை உருவாக்கப்பட்டது. இலங்கையில் நடைபெற்ற ஒன்பதாவது அதிபர் தேர்தலில் இடதுசாரி கட்சியான தேசிய மக்கள் சக்தி (ஜேவிபி) யின் தலைவர் அநுர குமார திசாநாயக்க வெற்றி பெற்று கடந்த திங்கட்கிழமை அதிபராக பதவியேற்றுக் கொண்டார்.

இதைத் தொடர்ந்து இலங்கையில் உள்ள ஒன்பது மாகாணங்களைச் சேர்ந்த ஆளுநர்களும் பதவி விலகினர். தொடர்ந்து கடந்த புதன்கிழமை இலங்கையின் ஒன்பது மாகாணங்களுக்கும் புதிய ஆளுநர்களை அதிபர் அநுர குமார திசாநாயக்க நியமனம் செய்தார். அந்தவகையில் முன்னாள் யாழ்ப்பாணம் மாவட்ட ஆட்சியரான வேதநாயகன், இலங்கையின் வட மாகாண ஆளுநராக நியமனம் செய்யப்பட்டார். இதையடுத்து இன்று (வெள்ளிக்கிழமை) யாழ்ப்பாணத்தில் வேதநாயகன் ஆளுநராகப் பொறுப்பேற்றுக் கொண்டார்.

யாழ்பாணத்தில் வட மாகாண ஆளுநராக வேதநாயகன் பொறுப்பேற்பு நிகழ்ச்சியில் நடைபெற்ற சர்வ மத பிரார்த்தனை.

இந்நிகழ்ச்சியில் சர்வமத பிரார்த்தனையும் நடைபெற்றது.இலங்கையின் யாழ்ப்பாணம் வலிகாம் அருகே அளவெட்டி பகுதியைச் சேர்ந்தவர் வேதநாயகன் (64). 1984-ம் ஆண்டு யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் உயிரியல் விஞ்ஞான பட்டப்படிப்பினை முடித்த வேதநாயகன், 1991-ம் ஆண்டு அரசு நிர்வாகப் பணிக்கு தேர்வு செய்யப்பட்டார். வேதநாயகன், இலங்கையின் உள்நாட்டு போர் காலகட்டத்தில் உயிர் ஆபத்து, நெருக்கடிகள், இடர்பாடுகளைக் கடந்தும், மட்டகளப்பு, முல்லைத்தீவு, மன்னார் ஆகிய மாவட்டங்களின் ஆட்சியாளராகப் பணியாற்றி உள்ளார். பின்னர் 2015-ம் ஆண்டு யாழ்ப்பாணம் மாவட்ட ஆட்சியராக நியமனம் செய்யப்பட்டார்.

இவர் மாவட்ட ஆட்சியராகப் பணியாற்றிய இடங்களில் எளிய மக்கள் எவரும் மாவட்ட ஆட்சியரை சந்திக்க முடியும் என்ற நிலையை உருவாக்கினார். யாழ்ப்பாணம் மாவட்ட ஆட்சியராக இருந்த காலகட்டத்தில் இந்திய – இலங்கை இரு நாட்டு பக்தர்கள் கலந்து கொள்ளும் கச்சத்தீவு புனித அந்தோணியர் திருவிழாவை சிறப்பாக நடத்தி உள்ளார். நேர்மையான அரசு பணியாளராக அறியப்பட்ட வேதநாயகன், கடந்த 2020 பிப்ரவரியில் யாழ்ப்பாணம் மாவட்ட ஆட்சியாளராக பணியாற்றிக் கொண்டிருந்தார்.

பணி ஓய்வுபெற மூன்று மாதங்கள் இருந்த நிலையில், ராஜபக்சே சகோதரர்கள் ஆட்சி காலத்தில் அரசியல் கட்டாயங்களினால் வலுக்கட்டாயப்படுத்தி இவர் விருப்ப ஓய்வை பெறவைக்கப்பட்டார். இந்நிலையில், அரசியல் ரீதியாக பழிவாங்கப்பட்ட முன்னாள் யாழ்ப்பாணம் மாவட்ட ஆட்சியரான வேதநாயகனை, இலங்கையின் வட மாகாண ஆளுநராக அதிபர் அநுர குமார திசாநாயக்க நியமனம் செய்துள்ளது இலங்கை தமிழர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.