இமயமலை பனியிலிருந்து வெளிவரும் 41,000 ஆண்டு பழமையான வைரஸ்கள் – எச்சரிக்கை மணியா? | My Vikatan

“வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல.” – ஆசிரியர்

சீன மற்றும் அமெரிக்க விஞ்ஞானிகள் இணைந்து 41,000 ஆண்டுகளுக்கு முந்தைய 1,705 வைரஸ்களை இமயமலையின் குலியா பனிப்பாறைகளில் துளையிட்டு கண்டறிந்துள்ளனர்.  இவற்றில் 97% வைரஸ்கள் இதுவரை பூமியில் கண்டறியப்படாதவை. 2015 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட இந்த ஆராய்ச்சியின் முடிவுகள், தற்போது நேச்சர் ஜியோ சயின்ஸ் அறிவியல் இதழில் வெளியிடப்பட்டுள்ளன. 

 திபெத்திய பீடபூமி பகுதியில் அமைந்துள்ள குலியா உறைப்பனி பாறை கடல் மட்டத்திலிருந்து 4 மைல் உயரத்தில் அமைந்துள்ளது. வைரஸ் ஆராய்ச்சிக்காக குலியா உறைப்பனி பாறைப்பகுதியில் 1013 அடி ஆழத்திற்கு துளையிட்டு, குறிப்பிட்ட ஆழத்துக்கு ஒருமுறை சதுர வடிவில் பனிப்பாளங்களை வெட்டி வெளியே எடுத்துள்ளனர். ஒவ்வொரு பனிப்பாளங்களும் பூமியின் ஒவ்வொரு காலத்தில் உறைந்தவை. 

11,500 ஆண்டுகளுக்கு உட்பட்டதாக கருதப்படும் பனிப் பாளங்களில் (Icebergs) வைரஸ்கள் அதிகளவில் காணப்பட்டுள்ளன.

தூங்கிக் கொண்டிருக்கும் வைரஸ்களை தட்டி எழுப்புவது நியாயமா?

      1000 அடி ஆழத்துக்குள் தூங்கிக் கொண்டிருக்கும் வைரஸ்களை வெளிக்கொணர்வது நியாயமா என்னும் கேள்வி நமக்குள் எழலாம். இந்த கேள்விக்கு ஆராய்ச்சியாளர்கள் பல பதில்களை வைத்துள்ளனர். புவி வெப்பமயமாதலின் காரணமாக தற்போது இமயமலை பகுதிகளில் பனி மிகக் கடுமையாக உருகி வருகிறது. இவ்வாறு பனி உருகும் போது எம்மாதிரியான விளைவுகள் ஏற்படும் என்பதை நாங்கள் முன்கூட்டியே தெரிந்து கூறுகிறோம் என்பதே அவர்களின் முதல் பதில்.

அது மட்டுமின்றி பனிப்பாறைகளிலிருந்து உருகி வரும் நீரை சுத்தமான நீர் என்று தயங்காமல் அருந்துகிறீர்கள். அதனுள் பல்லாயிரம் ஆண்டுகளாக தூங்கிக் கொண்டிருக்கும் வைரஸ்களும் உள்ளன என்பதை தானே நாங்கள் கண்டறிந்து கூறுகிறோம் என்பதும் அவர்களின் பதிலாக உள்ளது.

           மேலும் இந்த பனிப்பாளங்கள் புவியின் மூன்று விதமான பெரிய குளிர், வெப்ப மாறுதல்களை சந்தித்துள்ளன. எனவே இந்த ஆராய்ச்சி மூலம் கண்டறியப்பட்ட வைரஸ்களை வைத்து, ஒவ்வொரு காலகட்டத்திலும் பூமியில் வைரஸ்களின் நிலை எப்படி இருந்தது என்பதையும் அறிந்து கொள்ள முடியும். 

          அதிலும் 11,500 ஆண்டுகளுக்கு உட்பட்டதாக கருதப்படும் பனிப் பாளங்களில் வைரஸ்கள் அதிகளவில் காணப்பட்டுள்ளன. பனியுகம் முடிந்து புவியின் வெப்ப நிலை உயர்ந்த காலகட்டம் அது. நாமும் இப்பொழுது அதே போன்ற புவி வெப்பமயமாகும் காலகட்டத்தில் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். எனவே இந்த ஆராய்ச்சி முக்கியத்துவம் பெறுகிறது

பூமியின் மூன்றாவது உறைப்பனிக்கூடம் இமயமலை

           அண்டார்டிகா மற்றும் ஆர்டிக் பகுதிகளுக்கு அடுத்தபடியாக உலகில் அதிகளவு உறைப்பனியை கொண்டிருப்பது நம்முடைய இமயமலை பகுதிகள் தான். இமயமலை பனிப்பாளங்களிலிருந்து வரும் நீரினை கிட்டத்தட்ட 800 மில்லியன் மக்கள் உணவிற்கும், விவசாயத்திற்கும் பயன்படுத்துகின்றனர்.

உலகின் கால் பகுதி மக்கள் இப்பகுதியில் தான் வாழ்கின்றனர். எனவே இதைப் பற்றிய ஆராய்ச்சிகள் முக்கியத்துவம் வாய்ந்தது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறினாலும், பனிப்பாளங்களில் இம்மாதிரி துளையிடுவது எதிர் விளைவுகளையும் ஏற்படுத்தும். பல்லாயிரக்கணக்கான வருடங்களாக உறைந்து பாறை போன்று மாறியிருக்கும் பனியில் துளையிடுவதால், பனிப்பாறைகள் விலகி பனிஉருகுதல் அதிகரிக்கலாம். சைபீரிய உறைப்பனி பாளங்களில் நடத்தப்பட்ட தொடர்ச்சியான ஆராய்ச்சிகளின் விளைவாக அங்கு பனி உருகுதலின் அளவு அதிகரித்துள்ளதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும்.     

மறுபடி ஒரு பெருந்தொற்றுக்கு காரணமாக மாறுமா இந்த வைரஸ்கள்

             41,000 ஆண்டுகளாக பூமிக்கு அடியில் தூங்கிக் கொண்டிருந்த இந்த வைரஸ்களால், கொரோனா போன்ற பெருந்தொற்றுகள் உருவாகுமோ என்பதே இந்நேரத்தில் அனைவரின் கேள்வியாக இருக்கும். பூமியின் வரலாற்றை திரும்பி பார்த்தால், 41,000 ஆண்டுகளுக்கு முன்பு புவியின் காந்தபுலத்தில் பெரும் மாற்றம் ஏற்பட்டது.

பூமியின் வட தென்துருவத்தையே மாற்றி அமைத்த காந்தப்புல மாற்றம் அது. கிட்டத்தட்ட 500 ஆண்டுகள் அம்மாற்றம் நீடித்தது. அதன் பின் 36,000 ஆண்டுகளுக்கு முந்தைய காலகட்டத்தில் பனியுகம் துவங்கியது.

20 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பான பனியுகத்தின் கடைசி காலகட்டத்தில் வளிமண்டல கார்பன் டை ஆக்சைடின் அளவு மிக அதிகமாக இருந்தது. இக்காலகட்டங்களில் ஏற்பட்ட கடுமையான சூழ்நிலைகளை தாங்கி வாழ்வதற்கு ஏற்ற தகவமைப்புகளையும் இப்போது தோண்டி எடுக்கப்பட்ட வைரஸ்கள் பெற்றிருக்கலாம். 

    சீன ஆராய்ச்சியாளர்களோ இமயமலையிலிருந்து தோண்டி எடுக்கப்பட்ட வைரஸ்களை  நினைத்து அவ்வாறெல்லாம் பயப்பட வேண்டாம் என்கின்றனர். இவை மனிதனையோ விலங்குகளையோ தாக்கும் குணம் கொண்டவை அல்ல. இவை பாக்டீரியாக்களை மட்டுமே உண்டு வாழும் பாக்டீரியோஃபேஜ்களை ஒத்தவையாகவே உள்ளன என்று கூறுகின்றனர்.     

சீன ஆராய்ச்சியாளர்களோ இமயமலையிலிருந்து தோண்டி எடுக்கப்பட்ட வைரஸ்களை நினைத்து அவ்வாறெல்லாம் பயப்பட வேண்டாம் என்கின்றனர்.

ஆனால் இயற்கையில் எதுவும் நடக்காது என்று நாம் சொல்வதற்கு இல்லை. ரஷ்யாவின் சைபீரிய உறைப்பனி பாளங்களில் இதேபோன்று நடத்தப்பட்ட ஆராய்ச்சியில் வெளிப்பட்ட வைரஸ்கள் இன்றும் நோயினை உருவாக்கும் தன்மை உடையதாக உள்ளன. கிட்டத்தட்ட 48,500 ஆண்டுகளாக பூமிக்கு அடியில் தூங்கிக் கொண்டிருந்த அந்த வைரஸ்கள், இன்றைய வைரஸ்களை விட அளவில் பெரியதாகவும் உள்ளன. 

 அக்காலத்தில் வாழ்ந்தவற்றில் பெரும்பாலானவை கம்பளியானை போன்ற பிரமாண்ட விலங்குகள் தான். அந்த பிரமாண்ட விலங்குகளுக்கே நோயை உண்டாக்கிய வைரஸ்களுக்கு மனிதன் தாக்குப்பிடிப்பானா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். புவி வெப்பமயமாதல் என்பது, வெறும் கடல் நீர் மட்டத்தை உயர்த்துவதோடு நின்று விடாது என்பதை இந்நேரத்திலாவது நாம் உணர வேண்டும்.

முனைவர். வானதி பைசல்,

விலங்கியலாளர்.

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்…

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க – [email protected] என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

my vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்… நடந்துகொண்டிருக்கலாம்… நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.