புதுடெல்லி: இஸ்ரேல் – ஹிஸ்புல்லா இடையே மோதல் அதிகரித்து வரும் நிலையில், முழுக்க முழுக்க ஈரான் நேரடியாக மோதலில் ஈடுபடாமல் மறைமுகமாகவும், போரைத் தவிர்க்கும் வண்ணம் ஹிஸ்புல்லாவுக்கு ஆதரவளித்து வருகிறது. குறிப்பாக, தனது நாட்டின் பொருளாதார முன்னேற்றத்தைக் கருத்தில் கொண்டு இவ்வாறு செயல்படுவதாக கூறப்படுகிறது.
கடந்த ஆண்டு அக்டோபர் 7-ம் தேதி தொடங்கிய இஸ்ரேல் – ஹமாஸ் போர் இன்னும் முடிவடையாமல் உள்ளது. முன்னரே, இஸ்ரேலுக்கு எதிராக லெபனான் ஆதரவு அமைப்பான ஹிஸ்புல்லா இயக்கத்தினரை ஈரான் ஆதரிப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதற்கு மத்தியில், தனது பழைய பகையின் தொடர்ச்சியாக கடந்த மாதம் இஸ்ரேல் மீது ஏவுகணைகளை ஏவியது ஈரான். ஆனால், இஸ்ரேலின் பாதுகாப்பு சிஸ்டம் காரணமாக பெரிய சேதங்கள் தவிர்க்கப்பட்டன என இஸ்ரேல் அறிவித்திருந்தது. அதோடு, சில மாதங்களுக்கு முன்னர் ஈரான் அதிபர் இப்ராஹிம் ரெய்சி ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி உயிரிழந்தார் என்ற செய்தி வெளியாகி சர்வதேச அளவில் பெரும் சலசலப்பை உருவாக்கியது.
உலக நாடுகளுக்கு அதிக அளவில் எண்ணெய்யை ஏற்றுமதி செய்யும் நாடாக ஈரான் இருக்கிறது. இது அந்நாட்டின் வருவாயில் கணிசமான பங்கு வகிக்கிறது. இந்நிலையில்தான், ஈரான் மீது அமெரிக்கா, பிரிட்டன் ஆகிய நாடுகள் பொருளாதார தடையை அறிவித்தன. குறிப்பாக, ஈரான் தொடர்ந்து மேற்கத்திய நாடுகளின் பொருளாதாரத் தடைகளை எதிர்கொள்கிறது. ஐரோப்பிய நாடுகளும் ஈரான் மீது பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளன. உக்ரைன் போருக்காக ரஷ்யாவுக்கு ஏவுகணைகளை வழங்கியதாக குற்றம்சாட்டின. ஈரான் குற்றச்சாட்டுகளை மறுத்ததும் நினைவுகூரத்தக்கது. இவ்வாறு ஈரானின் நிலைமை சற்று கவலைகுரிய ஒன்றாகவே உள்ளது.
இந்நிலையில், தற்போது புதிதாக ஹிஸ்புல்லாவுக்கும் இஸ்ரேலுக்கும் போர் மூளும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால், உலக நாடுகள் அதிர்ச்சியில் உள்ளன. ஹமாஸ் பயங்கரவாத அமைப்புக்கு பல ஆண்டுகளாக ஈரான் ஆதரவளித்து வருகிறது. ஆனால், தற்போது முழுக்க முழுக்க ஈரான் நேரடியாக மோதலில் ஈடுபடாமல் மறைமுகமாக ஹிஸ்புல்லாவுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகிறது. ஈரானைச் சேர்ந்த அரசியல் நிபுணரான ஹமீத் கோலம்சாதே, “ஈரான் போருக்கு இழுக்கப்படப் போவதில்லை” என்றார்.
சர்வதேச நெருக்கடிக் குழுவைச் சேர்ந்த அலி வாஸ் ஈரான் குறித்து தனது பல்வேறு கருத்துக்களை தெரிவித்துள்ளார். அதில், “ஈரான் நேரடியாக போரில் ஈடுபடப்போவதில்லை. ஏனென்றால், போரின் முடிவு இஸ்ரேலுக்கு நன்மை பயக்கும் என்பதால் ஈரான் சற்று கவனமாக தனது உத்திகளை கையாள்கிறது. ஈரான் தனது பரம எதிரியுடன் விளையாட விரும்பவில்லை. தங்களது நாட்டின் பொருளாதார நிலையை பாதுகாப்பதே ஈரானின் முன்னுரிமையாக உள்ளது” என்று தெரிவித்தார்.
இஸ்லாமிய குடியரசை கட்டுப்படுத்தும் நிலையில் இஸ்ரேல் போர் வெறியில் ஈடுபட்டுள்ளதாக ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியன் குற்றம் சாட்டினார். அதோடு, “ஒவ்வொரு நாளும் இஸ்ரேல் மேலும் அட்டூழியங்களைச் செய்து வருகிறது. இஸ்ரேல் ஆட்சியும் அதன் ஆதரவாளர்களும் மிகப் பெரிய பயங்கரவாதிகள். ஏனெனில் அவர்கள் தங்களிடம் உள்ள கருவிகள், அதிகாரத்தை பயனபடுத்தி மக்களைக் கொல்கிறார்கள்” என்று ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியன் கூறினார்.
மேலும், ஈரானுடனான உறவுகளில் ஒரு புதிய சகாப்தத்தை தொடங்க வேண்டும் என்று ஈரான் அதிபர், அமெரிக்காவை வலியுறுத்தினார். அதே வேளையில், அமெரிக்கா நலனுக்கு இடையூறு செய்தால், ஈரானை அடித்து நொறுக்குவேன் என அதிபர் தேர்தலில் போட்டியிடும் குடியரசு கட்சி வேட்பாளர் ட்ரம்ப் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்தப் பின்புலத்தில், லெபனான் மீது இஸ்ரேல் நடத்திவரும் தொடர் தாக்குதலில் ஹிஸ்புல்லாக்களின் ட்ரோன் படைப் பிரிவு தலைவர் ஹுசைன் சிரோர் சுட்டுக் கொல்லப்பட்டதாக அந்த அமைப்பு உறுதிப்படுத்தியுள்ளது. இதற்கிடையில், திங்கள்கிழமை தொடங்கி இதுவரை இஸ்ரேல் தாக்குதலில் 700-க்கும் அதிகமான பொதுமக்கள் கொல்லப்பட்டதாக உறுதியான தகவல்களும் வெளியாகியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.