மதுரை: மதுரையில் 2010-ல் நடைபெற்ற என்கவுன்ட்டர் தொடர்பாக கூடுதல் எஸ்.பி வெள்ளத்துரை மற்றும் போலீஸார் மீது வழக்குப் பதிவு செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அத்துடன், என்கவுன்ட்டர் சம்பவங்களுக்கு எதிராக உயர் நீதிமன்றம் கடுமையான கருத்துகளைப் பதிவு செய்துள்ளது.
மதுரை நரிமேடு பகுதியைச் சேர்ந்த குருவம்மாள், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனு: “என் மகன் முருகன் என்ற கல்லு மண்டையனை, கடந்த 16.2.2010-ல் மதுரை மாநகர காவல் துறை உதவி ஆணையர் வெள்ளத்துரை, சார்பு ஆய்வாளர் தென்னவன், தலைமை காவலர் கணேசன் ஆகியோரால் துப்பாக்கியால் சுடப்பட்டு கொல்லப்பட்டார். இது தொடர்பாக நான் அளித்த புகாரின் பேரில் வெள்ளைத்துரை (கூடுதல் டிஎஸ்பியாக இருந்து ஓய்வு பெற்றுள்ளார்) மற்றும் போலீஸார் மீது வழக்குப் பதிவு செய்யவும், விசாரணையை சிபிசிஐடியிலிருந்து சிபிஐக்கு மாற்றியும் உத்தரவிட வேண்டும்” என மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி பரத சக்கரவர்த்தி பிறப்பித்த உத்தரவு: “தமிழ்நாடு காவல்துறை சட்டம் ஒழுங்கை சிறப்பாக பாதுகாக்கும் ஒரு அமைப்பாகும். ஆனால் தற்போது தமிழ்நாடு காவல் துறையில் கொடூரமான குற்றவாளிகள் போலீஸாரை தாக்க முயல்வது, அப்போது அவர்களை நோக்கி போலீஸார் துப்பாக்கியால் சுடுவது, அதில் கொடூர குற்றவாளி இறப்பது அல்லது காயமடைவது மற்றும் குற்றவாளிகள் போலீஸ் பிடியிலிருந்து தப்பிக்க நினைக்கும் போது கை, கால்களை உடைத்துக்கொள்வது வழக்கமாகி வருகிறது.
என்கவுன்டர் மரணங்களை அடிப்படை தவறு மற்றும் பிற்போக்கு சிந்தனை என்பதை உணராமல் உடனடியாக பாராட்டத் தொடங்குகின்றனர். இதுபோன்ற சம்பவங்களின் உண்மையான பின்னணி ஒரே மாதிரியானவை. இதை தீவிரமாக விசாரிக்க வேண்டும். இதுபோன்ற சம்பவங்களால் சட்டத்தின் ஆட்சி, அரசியலமைப்பு சட்ட உரிமைகள் மற்றும் பாதுகாப்பு, குற்றவியல் நீதி பரிபாலனத்தின் மீதான நம்பிக்கை குறையும், பிரிட்டீஷ் ஆட்சி காலத்தை நினைவுபடுத்தும், வழக்கு தொடக்கம் முதல் முடிவு வரை சட்டப்படியே நடைபெற வேண்டும்.
உடனடி மரணம் சரியான தண்டனை என்ற நம்பிக்கை உண்மையானது அல்ல. அது ஒரு மாயை. என்கவுன்ட்டர் வழக்குகளில் சம்பந்தப்பட்ட போலீஸார் மீது வழக்குப் பதிவு செய்து விசாரிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே உத்தரவிட்டுள்ளது. இதனால், இந்த வழக்கில் போலீஸார் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த இறுதி அறிக்கை ரத்து செய்யப்படுகிறது. மனுதாரரின் புகார் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரிக்க வேண்டும். இந்த வழக்கை விசாரிக்க வெள்ளத்துரை வகித்த பொறுப்பை விட கூடுதல் அந்தஸ்துள்ள சிபிஐடி அதிகாரியை டிஜிபி நியமிக்க வேண்டும். விசாரணை அதிகாரி மனுதாரரின் புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்து விசாரணையை நியாயமாகவும், முழுமையாகவும் நடத்தி 6 மாதத்தில் நீதிமன்றத்தில் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்” என நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.