புதுடெல்லி: குரங்கு அம்மை நோய் பாதிப்பு பரவாமல் தடுக்கவும், பாதிக்கப்பட்டவர்கள் விரைவாக தனிமைப்படுத்தப்பட்டு உரிய சிகிச்சை அளிக்கவும் மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் தயார் நிலையில் இருக்க மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கும் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை நேற்று (செப். 26) அறிக்கை அனுப்பி உள்ளது. அந்த அறிக்கையில் குரங்கு அம்மை பாதிப்பை கையாள பின்பற்றப்பட வேண்டிய வழிமுறைகள் குறித்து விவரிக்கப்பட்டுள்ளது. மேலும், குரங்கு அம்மை தொற்றை பொது சுகாதார அவசர நிலையாக உலக சுகாதார நிறுவனம் கடந்த ஆகஸ்ட் 14-ம் தேதி இரண்டாவது முறையாக அறிவித்ததை மத்திய சுகாதார அமைச்சகம் சுட்டிக்காட்டியுள்ளது.
2002ல் ஏற்பட்ட குரங்கு அம்மை பாதிப்பு clade 2 வகையைச் சார்ந்தது. அப்போது, முதல் பொது சுகாதார அவசர நிலையை உலக சுகாதார நிறுவனம் அறிவித்தது. தற்போது வெளிப்பட்டிருப்பது clade 1 வகை குரங்கு அம்மை.
இந்தியாவில், சமீபத்தில் குரங்கு அம்மை நோயால் பாதிக்கப்பட்ட ஒருவரின் மாதிரிகளை ஆய்வு செய்ததில், அவர் clade 1b வகை குரங்கு அம்மை தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதிப்படுத்தப்பட்டது. clade 1b வகை குரங்கு அம்மை தொற்று பதிவாகி உள்ள ஆப்பிரிக்க கண்டத்தைச் சாராத 3வது நாடு இந்தியா என்பது குறிப்பிடத்தக்கது. clade 1 தொற்று, clade 2 தொற்றைவிட தீவிரமானது என கண்டறியப்பட்டுள்ளது. இதனால், மத்திய சுகாதார அமைச்சகம் அனைத்து மாநிலங்களுக்கும் யூனியன் பிரதேசங்களுக்கும் குரங்கு அம்மை நோய் குறித்த ஆலோசனையை வெளியிட்டுள்ளது.
மத்திய சுகாதாரத்துறையின் அறிவுறுத்தல்கள்: சுகாதார நிலையங்களில் பொது சுகாதாரத் தயார்நிலையை மதிப்பிட வேண்டும். மாநில மற்றும் மாவட்ட அளவில் மூத்த அதிகாரிகளால் இந்த ஆய்வுகள் நடத்தப்பட வேண்டும். சந்தேகத்திற்கிடமான மற்றும் உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க மருத்துவமனைகளில் தனிமைப்படுத்தப்பட்ட வசதிகள் ஏற்படுத்தப்பட வேண்டும். அத்தகைய வசதிகளில் தேவையான தளவாடங்கள் மற்றும் பயிற்சி பெற்ற மனித வளங்கள் கிடைப்பதை உறுதிசெய்ய வேண்டும்.
குரங்கு அம்மை பாதிப்பில் சந்தேகத்திற்கிடமான அறிகுறிகளைக் கொண்ட நோயாளியின் தோல் புண்களிலிருந்து மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, உடனடியாக நியமிக்கப்பட்ட ஆய்வகங்களுக்கு அனுப்பப்பட வேண்டும். இதில், தொற்று உறுதியாகும்பட்சத்தில், அந்த மாதிரியை ICMR-NIV க்கு அனுப்ப வேண்டும். அங்குதான் இது எந்த வகையான குரங்கு அம்மை என்பது உறுதியாகும். ICMR ஆல் ஆதரிக்கப்படும் 36 ஆய்வகங்கள் நாடு முழுவதும் உள்ளன.
மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் தொடர்ந்து நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறது. இது தொடர்பாக மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு தேவையான அனைத்து ஆதரவையும் வழங்குவோம். இவ்வாறு மத்திய அரசின் அறிவுறுத்தல் அமைந்துள்ளது.