கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் ஆண்டுதோறும் நவராத்திரி விழா சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். மாநகரின் பல்வேறு பகுதிகளில் பிரம்மாண்டமான பந்தல் அமைக்கப்பட்டு துர்கை சிலை வைத்து வழிபடுவர். 10 நாட்களுக்கு நடைபெறும் இவ்விழாவில், சமூக பிரச்சினைகள் மற்றும் சமீபத்திய நிகழ்வுகள் கருப்பொருளாக இருக்கும். இவற்றை பிரதிபலிக்கும் வகையில் பந்தல், சிலைகள் மற்றும் அலங்கார விளக்குகள் அமைக்கப்படுவது வழக்கம்.
அந்த வகையில் வரும் அக்டோபர் மாதம் நடைபெறவுள்ள துர்கா பூஜை விழாவுக்கான கருப்பொருளை விழா ஏற்பாட்டாளர்கள் ஏற்கெனவே முடிவு செய்துவிட்டனர். இந்நிலையில், பெண்கள் பாதுகாப்பையும் கருப்பொருளில் சேர்க்க பல்வேறு விழாக் குழுவினர் திட்டமிட்டுள்ளனர். கொல்கத்தாவின் ஆர்.ஜி.கர் அரசு மருத்துவமனையில் பயிற்சி பெண் மருத்துவர் கொல்லப்பட்டதைக் கண்டித்து இளநிலை மருத்துவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதைப் பிரதிபலிக்கும் வகையில்தான் துர்கா பூஜை விழா பந்தலில் பெண்கள் பாதுகாப்பு கருப்பொருள் சேர்க்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
ஒரு விழா குழுவினர், பெண் மருத்துவர் கொல்லப்பட்டதைக் கண்டித்து நடைபெற்ற போராட்ட படங்களை முப்பரிமாணத்தில் காட்ட திட்டமிட்டுள்ளனர். மற்றொரு விழா குழுவினர், உயிர் காக்கும் நுட்பங்கள் மூலம் பெண்கள் தங்களை பாதுகாத்துக் கொள்வது தொடர்பான தகவலை பரப்ப திட்டமிட்டுள்ளார். இதுபோல பெண் மருத்துவர் கொல்லப்பட்டதற்கு நீதி கேட்டு விழா பந்தல் அருகே பெரிய பேனர் வைக்க மற்றொரு விழாக் குழுவினர் முடிவு செய்துள்ளனர்.