மதுரை மாவட்டத்தைச் சேர்ந்தவர் சமூக ஆர்வலர் கார்த்திக். இவர் சமீபத்தில் ஆர்டிஐ மூலமாக, ‘தமிழகத்தில் 2016 முதல் 2024 வரையில் சாதிய தீண்டாமைகளை ஒழிப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட விழிப்புணர்வு கூட்டங்களின் எண்ணிக்கை, சாதிய பாகுபாடு மற்றும் சாதிய பதற்றம் நிறைந்த கிராமங்கள் என்று அடையாளப்படுத்தப்பட்டுள்ள கிராமங்களின் பெயர்கள் அடங்கிய பட்டியலை மாவட்ட வாரியாக வழங்க வேண்டும்’ எனக் கேள்வி எழுப்பி உள்ளார்.
இதற்கு அரசிடம் இருந்து கிடைத்த பதிலில், ‘கடந்த மார்ச் வரையில் தமிழகத்தில் சாதிய வன்கொடுமைகள் 394 கிராமங்களில் அதிகம் உள்ளது. இதில் மதுரை – 45, திருநெல்வேலி – 29, திருச்சி – 24, தஞ்சாவூர் – 22, தேனி – 20 ஆகிய மாவட்டங்கள் முதல் 5 இடங்களைப் பிடித்துள்ளன. கடைசி இடத்தில் கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு மாவட்டங்கள் இருக்கின்றன” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய சமூக ஆர்வலர் கார்த்திக், “சாதிய வன்கொடுமைகள் அதிகமாக நடக்கக்கூடிய மாவட்டத்தில் மதுரைதான் முதலிடத்தில் இருக்கிறது. அங்கு 335 விழிப்புணர்வு கூட்டங்கள் நடத்தப்பட்ட போதும் பாதிப்பைக் குறைக்க முடியவில்லை. எனவே, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, ADGP சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் காவல் பிரிவு மற்றும் சமூக நலத்துறை ஆகிய மூன்று துறைகளும் இணைந்து தமிழகத்தில் சாதிய வன்கொடுமைகள் நடப்பதைக் கட்டுப்படுத்த வேண்டும். அதற்குப் பதற்றம் நிறைந்த கிராமங்களில் அதிக எண்ணிக்கையில் விழிப்புணர்வு கூட்டங்களை நடத்த வேண்டும். மேலும் பதற்றம் நிறைந்த 304 கிராமங்களை ரோல் மாடல் நல்லிணக்க கிராமங்களாக உருவாக்க வேண்டும். அதற்கு ரூ.25 லட்சம் பரிசுத் தொகை வழங்கி ஊக்கமளிக்க வேண்டும்” என்றார்.
இதுகுறித்து நம்மிடம் பேசிய விசிக துணை பொதுச் செயலாளர் கவுதம சன்னா, “சாதிய வன்கொடுமை நடக்கும் மாவட்டங்களை முதலில் வன்கொடுமை மாவட்டங்கள் என அறிவிக்க வேண்டும். பிரச்னை அதிகமாக இருக்கும் இடங்களில் அதைச் சரிசெய்வதற்கு எந்த நடவடிக்கையும் அரசு எடுக்கவில்லை. அப்படியே எடுத்தாலும் தலித் மற்றும் தலித் அல்லாதோருக்கு இடையில் நடக்கும் பிரச்னைகளில் மட்டும் கவனம் செலுத்துகிறார்கள். ஆனால் பிற சாதிகளுக்கு இடையிலும் மோதல் இருக்கிறது. இதில் அரசு கவனம் செலுத்துவதில்லை. சாதாரண சட்டம் ஒழுங்கு பிரச்னையாகவே கடந்து சென்றுவிடுகிறார்கள். ஆகவே இடைச் சாதிகளுக்குள் இருக்கும் பிரச்னைகளை அடையாளம் கண்டு சரிசெய்ய வேண்டும்.
இதேபோல் சாதிய மோதல் அதிகமாக நடக்கும் மாவட்டங்கள் கல்வி, பொருளாதாரத்தில் பின்தங்கி இருக்கின்றன. மதுரை, திருநெல்வேலி, விருதுநகர், தேனி, ராமநாதபுரம், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் இந்த பிரச்னை இருக்கின்றன. இத்தகைய மாவட்டங்கள் அரசின் கண்காணிப்பிலிருந்து வெகு தொலைவில் இருக்கின்றன.
எனவே தென் மாவட்டங்களில் ஒரு தலைநகரை உருவாக்க வேண்டும். அதன்படி தூத்துக்குடியைப் பொருளாதார தலைநகராக அறிவிக்க வேண்டும். பிறகு உள்ளாட்சி, உள்துறை, நீதித்துறை, பொருளாதார, சமூக நீதித்துறையின் பாதி அலுவலகங்களை அங்கு அமைக்க வேண்டும். தற்போது துணை முதல்வர் பேச்சு தமிழக அரசியலில் இருக்கிறது. எனவே தென் மாவட்டங்களுக்கு என ஒரு துணை முதல்வரை அறிவிக்க வேண்டும். அப்போதுதான் பின்தங்கிய மாவட்டங்கள் அரசின் கண்காணிப்பில் வரும். இதன் மூலமாக அரசு நம்மைக் கண்காணிக்கிறது என்கிற பயம் வரும். அப்போது குற்றங்களும் குறையும்.
தற்போது அரசின் கண்காணிப்புக்கு வெளியில் இருப்பதால் பலர் தங்களை அரசின் பிரஜைகளாக நினைப்பது இல்லை. சாதியின் உறுப்பினர்களாகவே நினைக்கிறார்கள். எனவே இதில் அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். ஏற்கெனவே வேங்கை வயல் போன்ற இடங்களில் அரசு கவனக்குறைவாக இருக்கிறது. எனவே அரசு இதில் அதீத கவனம் செலுத்த வேண்டும். மதுரை, திருநெல்வேலியில் சில சாதிகளில் தங்களை வீரமானவராக நினைத்துக்கொண்டு பிற சாதியினரை வன்முறையால் மேலாதிக்கம் செய்ய முடியும் என்கிற மனநிலையில் இருக்கிறார்கள். இதையெல்லாம் வேலை இல்லாதவர்கள்தான் செய்கிறார்கள். எனவே அவர்களுக்குக் கல்வி, வேலை வழங்க வேண்டும். அப்போது பிரச்னை படிப்படியாகக் குறைந்துவிடும்” என்றார்.