டெஸ்ட் கிரிக்கெட்: அனில் கும்ப்ளேவின் சாதனையை முறியடித்த ரவிச்சந்திரன் அஸ்வின்

கான்பூர்,

வங்காளதேச கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது. இதில் சென்னையில் நடந்த முதலாவது டெஸ்டில் இந்தியா 280 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இந்த நிலையில் இந்தியா- வங்காளதேசம் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள கிரீன் பார்க் ஸ்டேடியத்தில் இன்று தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி, வங்காளதேச அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணி 35 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 107 ரன்கள் அடித்திருந்தபோது போதிய வெளிச்சமின்மை காரணமாக ஆட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இதனை தொடர்ந்து அங்கு மழை பெய்தது. தொடர்ந்து மழை பெய்து வந்ததால் முதல் நாள் ஆட்டம் அத்துடன் ரத்து செய்யப்பட்டது.

வங்காளதேசம் தரப்பில் ஷாண்டோ 31 ரன், ஷத்மான் இஸ்லாம் 21 ரன், ஜாகிர் ஹசன் ரன் எடுக்காமலும் அவுட் ஆகினர். முஷ்பிகுர் ரஹிம் 6 ரன்களுடனும், மொமினுல் ஹக் 40 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இந்தியா தரப்பில் ஆகாஷ் தீப் 2 விக்கெட், அஸ்வின் 1 விக்கெட் வீழ்த்தி உள்ளனர். இதனையடுத்து நாளை 2-வது நாள் ஆட்டம் நடைபெற உள்ளது.

இந்நிலையில், இந்த ஆட்டத்தில் அஸ்வின் ஒரு விக்கெட் வீழ்த்தியதன் மூலம் ஆசியாவில் அதிக டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்தியவர்கள் பட்டியலில் அனில் கும்ப்ளேவின் (419 விக்கெட்) சாதனையை அஸ்வின் (420* விக்கெட்) முறியடித்துள்ளார். இந்தப்பட்டியலில் இலங்கையின் முத்தையா முரளிதரன் (612 விக்கெட்) முதல் இடத்தில் உள்ளார்.

ஆசியாவில் அதிக டெஸ்ட் விக்கெட்டுகள் வீழ்த்தியவர்கள் பட்டியல்:

முத்தையா முரளிதரன் (இலங்கை) – 612 விக்கெட்

ரவிச்சந்திரன் அஸ்வின் (இந்தியா) – 420* விக்கெட்

அனில் கும்ப்ளே (இந்தியா) – 419 விக்கெட்

ரங்கெனா ஹெராத் (இலங்கை) – 354 விக்கெட்

ஹர்பஜன் சிங் (இந்தியா) – 300 விக்கெட்


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.